‘அனோமி’ திரை விமர்சனம்!
ஒரே பாணியில் நடக்கும் மூன்று கொலைகள். அந்த சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்க களமிறங்கும் காவல் துறைக்கு ஏகப்பட்ட இடியாப்ப சிக்கல் நடந்து விசாரணை முட்டு சந்திலேயே முட்டி நிற்கிறது. கொலை செய்யப்பட்ட மூவரில் ஒருவர் பாவனாவின் தம்பி. அதனால் தடயவியல் நிபுணரான பாவனா, சைக்கோவை கண்டுபிடிக்க தீயாய் வேலை செய்கிறார். இன்னொரு பக்கம் இந்த கேஸில் ஆரம்பத்தில் அலட்சியம் காட்டும் போலீஸ் அதிகாரி ரகுமான், ஒரு கட்டத்தில் தன் பங்குக்கும் மூளையை கசக்கி சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். பாவனா, ரகுமானின் தேடலில் கிடைக்கும் சைக்கோ யார்? அவன் ஏன் அந்த கொலைகளை செய்தான்? என்ற கேள்விகளுக்கான விடை க்ளைமாக்ஸில் கிடைக்கிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் பாவனாவை பார்க்கமுடிகிறது. தம்பி மீதான பாசம், கடமையில் காட்டும் தீவிரம் என வரும் காட்சிகளில் எல்லாம் அடித்து ஆடியிருக்கிறார்.
முதல் பாதி படத்தில் விட்டுக்கொடுத்ததுபோல நடித்திருக்கும் ரகுமான் இரண்டாம் பாதியில் சுதாரித்துக்கொண்டு ஸ்கோர் செய்கிறார்.
பாவனாவின் தம்பியாக நடித்திருக்கும் ஷெபின் பென்சன், காதலனாக நடித்திருக்கும் அர்ஜுன் லால், பினு பப்பு, விஷ்ணு அகஸ்தியா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள்.
ஒரு மனிதன் இறந்தபின் அவனின் இறுதிப் பயணம் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கு ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங் உயிர்கொடுத்திருக்கும் காட்சிகள் அடடே அனுபவம்.

கதையின் போக்கில் தன்னையும் ஐக்கியமாக்கிக்கொண்டு துறுத்தாத ஒலி அளவுகளை கச்சிதமாக கொடுத்து பின்னணி இசையை பேசவைக்கிறார் இசையமைப்பாலர் ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்.
படம் பார்ப்பவர்களின் கவனத்தை ஒரு நொடியும் சிதறவிடாதபடிக்கு நேர்த்தியான திரக்கதை நம்மை இருக்கையின் நுனிக்கு தள்ளுவது படத்தின் பெரிய பலம். இதற்கு எழுத்து வடிவம் கொடுத்து இயக்கியிருக்கும் ரியாஸ் மராத், புதிய நடையில் க்ரைம் த்ரில்லரை கையாண்டிருப்பது பாராட்டுக்கு உரியது.
‘அனோமி’ நிச்சயம் நெஞ்சை பதைக்க வைக்கும்; எடுக்கும் டிக்கெட்டுக்கு நிறைவையும் தரும்.

