‘திவ்யா’ திரை விமர்சனம்
காதலின் குறுக்கே சாதி வில்லன் நிற்கும் 1002 வது கதை.
அதையும்தான் சொல்லுங்களேன் என்பவர்களுக்காக…
நாயகன் ஆர்.ஜே.பி. பறை இசைக் கலைஞன். வாழ்வில் ஏற்றத்தையும் மாற்றத்தையும் பார்க்கும் கனவோடு கல்லூரில் படிக்கிறார். அதே கல்லூரியில் புதிதாக சேரும் நாயகி கேத்திக்கும் ஆர்ஜேபிக்கும் இடையே ஆரம்பத்தில் மோதலாகி பிறகு காதலாகிறது. இவர்களது காதல் விவகாரம் நாயகியின் வீட்டுக்கு தெரியவர, “இனி நீ கல்லூரிக்கு போக வேண்டாம் என” கேத்திக்கு தடை போடுவதுடன் அவசர அவசரமாக கல்யாண ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். தடைகளை தாண்டி ஆர்ஜேபியும் கேத்தியும் இல்லற வாழ்வில் இணைய முடிவெடுக்கிறார்கள். ஆனால் சாதி வெறி பிடித்த கேத்தியின் குடும்பம் இவர்களை வாழவிடுகிறார்களா? இல்லையா? என்பதே மீதி கதை.

தயாரிப்பு, இயக்கம், ஹீரோ என மூன்று பொறுப்புகளை சுமந்து ‘திவ்யா’வை எடுத்திருக்கிறார் ஆர்ஜேபி. ஹீரோவுக்கான பில்டப், சினிமா பூச்சுகள் இல்லாமல் எளிமையாக நடித்திருக்கும் அவரது துணிச்சலுக்காகவே பாராட்டலாம்.
நாயகி கேத்தியும்கூட ஹீரோயின் பகட்டோ பந்தாவோ இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் அவரவர் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு, இசை எல்லாமே பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல வேலை செய்திருக்கிறது.
சாதி இல்லை, சாதி ஒழிய வேண்டும் என்று படமெடுப்பவர்களுக்கு மத்தியில் சாதியை ஆதரிப்பதுபோன்ற காட்சியும் எழுத்தும் படத்தின் மைனஸ்.
சா‘தீ’ வெறிக்கு சாமரம் வீசுகிறது இந்த ‘திவ்யா’

