திரை விமர்சனம்

 ‘நீளிரா’ விமர்சனம்!

ஈழத்தை மையக்கருவாக கொண்ட படங்கள் எத்தனையோ இங்கு வந்திருக்கின்றன. பெரும்பாலும் தவறான காட்சி சித்தரிப்பு; தவறான கருத்து திணிப்புக் கொண்ட படங்களாகவே பார்த்த அனுபவம் நமக்கு. ஆனால் எந்த சாயத்திலும் சாயலிலும் சிக்காத ஒரு பதிவை பந்தி வைக்கும் படம்  ‘நீளிரா’.

 

கந்தகமும், கத கதப்பும், பரபரப்பும் வற்றாத  ஈழ மண்ணில் 1988களில் நடக்கும் கதையாக விரியும் திரைக்கதையில்… போர்ச்சூழலில் இருக்கு ஒரு கல்யாண வீடு. விடிந்தால் திருமணம் என்ற நிலையில் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைகிறது இந்திய அமைதிப்படை! போராளிகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக பதுங்கும் அமைதிப்படைக்கும் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கும் இடையே நடக்கும் ஓரிரவு சம்பவங்களே கதை.

 

வீட்டில் பெரியவர், அம்மா, மகள், சிறுவர்கள், விருந்தினர் என அந்த வீட்டுக்குள் அமைதிப்படையின் கட்டுப்பட்டுக்குள் சிக்குண்டு தவிக்கும் அத்தனை கதாபாத்திரங்களும் நடிக்காமல் வாழ்ந்திருக்கின்றனர். துணிவை, பயத்தை, நடுக்கத்தை வெளிப்படுத்தும் அவர்களின் நடிப்பு உண்மைக்கு நெருக்கமாய் இருப்பதால் நாமும் அந்த வீட்டுக்குள் இருக்கின்ற உணர்வை அனுபவிக்கமுடிகிறது.

 

அம்மாவாக கபிலா வேணு, ஒற்றை பார்வையில் மிரட்டும் ரூபா கொடுவாயூர், காதலையும், ஆக்ரோஷத்தையும் மாறி மாறி வெளிப்படுத்தும் சனந்த், அறமற்ற வீரர்களுக்கு மத்தியில் மனிதம் உள்ள அமைதிப்படை கேப்டனாக நவீன் சந்திரா என ஒட்டுமொத்த கலைஞர்களின் நடிப்பும் கதையின் வலுவிற்கு உரமூட்டுகிறது.

 

இருளின் பின்னணியில் சன்னமான ஒளி பிரதிபலிப்பால் சம்பவ இடத்தில் நம்மையும் நிறுத்திவைக்கும் ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பிரதீபனின் வேலையில் அத்தனை நேர்த்தி. பாடல், பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு பலம்.

வீடுகள், ஆடைகள், பொருட்கள், பின்னணி களம் என கலை இயக்குநர் மார்ட்டினின் அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் பாராட்டுகள்.

 

அமைதிப்படை என்ற பெயரில் நடந்த கொடுமைகளை, குறிப்பாக பெண்களுக்கு நடந்த அநீதிகளை சமரசமின்றி பதிவு செய்திருக்கும் இயக்குநர் சோமிதரனின் துணிச்சலுக்கு சபாஷ். போர்சூழல் ஒரு பக்கம் இருந்தாலும், அதனூடே நிகழும் சிறு சிறு கொண்டாட்டங்கள். மகிழ்வு, நகைச்சுவை என 1988 காலக்கட்டத்திற்கும் அந்த களத்திற்கும் அழைத்துச் செல்வதே இயக்குநரின் திறமைக்கு சான்று.

 

போராளிகள் பின்வாங்குவது போன்ற ஒரு காட்சி மட்டும் படத்தின் உறுத்தல் தவிர மற்றபடி ‘நீளிரா’ நெஞ்சில்  நெஞ்சில் நிறைகிறது!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE