‘கார்மேனி செல்வம்’ திரை விமர்சனம்!
கெளதமன் வாசுதேவனிடம் கார் டிரைவராக இருப்பவர் சமுத்திரகனி. கட்டுசிட்டாக வாழ்க்கையை நடத்தவேண்டும் என்று நினைப்பவர் ஊதியம் குறைவு என்றாலும் அதைவைத்துக்கொண்டு மனைவி மகனுடன் நிறைவான வாழ்க்கையை நடத்தி வருகிறார். இப்படி இருப்பவரின் குணத்தை சில சூழல்கள் சம்பவங்கள் தலைகீழாக மாற்றுகிறது. அதன் விளைவு ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பெருந்துயர்களை அனுபவிக்க நேரிடுகிறது. அது என்ன? எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்பதுபோல மாறிய சமுத்திரகனியின் வாழ்க்கை மாறுகிறதா? தேறுகிறதா? என்பதே கதை.
வழக்கம்போலவே தனது கேரக்டருக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் கனி. அன்பான அப்பா, நேர்மையான கார் டிரைவர், அப்பாவியான கணவன் என செல்வமாக சமுத்திரக்கனி. ‘சமுத்திரகனியிஸம்’ நிறைந்த கதைதான் என்றாலும் கருத்து ஊசிகள் இல்லாமல், முக்கிய காட்சிகளில் தன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
செல்வத்தின் மனைவி சாந்தியாக லட்சுமி பிரியா சந்திரமௌலி, விளிம்பு நிலை குடும்பத் தலைவியாக இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
உறவினர்களுக்கு மத்தியில் அவமானப்படும்போது கிளம்புகிற வைராக்கியம், தன் கணவனிடம் பொருளாதார நிலைகுறித்து புரியவைக்கப் பொருமுதல், அதே கணவன் சிக்கலில் மாட்டிக்கொள்கிற பொழுதில் ஏற்படுகிற பரிதாபம் எனப் பொருத்தமாக நடித்திருப்பது கதைக்கு அழுத்தம் கூட்டுகிறது.

இவர்கள் தவிர கௌதம் வாசுதேவ் மேனன், அபிநயா தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் கார்த்திக்குமாரும், படவா கோபியும் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
சென்னை, துபாய் எனக் குறைவான லொகேசன்களில் நடக்கிற எளிமையான கதைக்கேற்ற ஒளிப்பதிவையும், எடிட்டிங்கையும் வழங்கியிருக்கிறது ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷன் மற்றும் படத்தொகுப்பாளர்கள் ஜெகன் ஆர்.வி – தினேஷ்.எஸ் அடங்கிய தொழில்நுட்பக் குழு.
பாடல்கள் பெரிய அளவில் ஈர்க்காத நிலையில், பின்னணி இசையில் சில காட்சிகளில் கவனிக்க வைத்திருக்கிறது மியூசிக் கிளவுட் ஸ்டுடியோ & டெக்னாலஜி குழு.
லைப் இன்சூரன்ஸ் குறித்த அச்ச உணர்வு, தன் வாழ்நிலையை முன்னேற்றிக் கொள்ள நடுத்தர குடும்பத்தினரின் வழிகளில் ஒன்றாக இருக்கும் கிரெடிட் கார்டு குறித்த கேலி எனப் பல விஷயங்களைச் சுவாரஸ்யத்தைத் தாண்டி இன்னும் கொஞ்சமேனும் கவனத்துடனும் முதிர்ச்சியுடனும் அணுகியிருக்கலாம்.
படத்தின் முடிவு எதைநோக்கி செல்கிறது என்பது தெரிந்தபிறகும் நீள்கிற காட்சிகள் கொஞ்சம் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இரண்டரை மணிநேரம் இந்தக் கதைக்கு டூ மச்.

