திரை விமர்சனம்

 ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரை விமர்சனம்!

2026ஆம் ஆண்டின் காலக்கட்டத்திலேயே அலைப்பேசி ஆதிக்கம் தனிமனித ஆக்கிரமிப்பாக மாறிக்கொண்டிருக்க 2040இல் அலைப்பேசி மனிதர்களிடையே எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கற்பனை செய்து பார்த்தாலே  “இப்பவே கண்ணை கட்டுதே” என்றிருக்கும்போது அந்த கற்பனையின் நூல்பிடித்து விக்னேஷ் சிவன் நெய்திருக்கும் திரைக்கதையே ‘காதல் இன்சூரன்ஸ் கம்பெனி’. சுருக்கமாக LIK.

கதை…

2040 மொத்த உலகமும் அலைபேசிக்கு அடிமையாகியிருக்க. அலைப்பேசியே இல்லாத ஆர்கானிக் உலகத்தில் வாழ்கிறார் அன்புக்கடல் (சீமான்). இந்த உலகத்தில் அலைப்பேசிக்கு வேலை இல்லை. பண்பாடும் பாரம்பரியம் மாறாத வாழ்க்கை முறையும் பாடமாக எடுக்கப்படுகிறது. இந்த உலகத்தை உருவாக்கிய சீமானின் மகன்தான் பிரதீப் ரங்கநாதன். செல்போன் வாசனையே அறியாத பிரதீப்புக்கு தான் போடும் ரீல்ஸுக்காக லைக், ஷேர் போதையில் இருக்கும் கீர்த்தி ஷெட்டிக்கு கண்டதும் காதலாகிறது. இவர்களின் காதலுக்கு குறுக்கே வில்லனாக வந்து நிற்கிறது எஸ்.ஜே.சூர்யாவின் LIK ஆப். LIK ஆப்பின் வேலை என்ன? பிரதீப் –கீர்த்தியின் காதலின் முடிவு என்ன என்பதே மிச்ச கதை.

பிரதீப் ரங்கநாதன்..

வழக்கம்போலவே லவ் டிராக்கில் சடுகுடு ஆடியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். கீர்த்தியின் அழகில் மயங்குவது, காதல் க்ளிக் ஆனதும் கிறங்குவது. பிரேக் அப் சொன்ன நொடி இதயம் நொறுங்கிப்போவது, எஸ்.ஜே.சூர்யாவுக்கு சவால்விட்டு கொதிப்பது என  சீனுக்கேற்ற நடிப்பில் சிக்ஸர் தூக்கியிருக்கிறார்.

கீர்த்தி ஷெட்டி..

அலைப்பேசி மோகத்தில் பைத்தியம் பிடித்தது போல இருக்கும் கீர்த்தியின் அழகு பலரையும் பித்துப்பிடிக்க வைக்கும். க்யூட்னெஸ் நிறைத்து நல்லதொரு நடிப்பையும் சேர்த்துக் கொடுத்திருக்கும் கீர்த்தி ஷெட்டி ஃபாலோவர்ஸ்களை கவர்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா..

பர்சனல் வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றம், அதனால் காதலுக்காகக் கண்டுபிடிக்கும் செயலி, நியாயமற்ற முறையில் அதனைக் காப்பாற்ற நினைக்கும் முடிவு என வில்லத்தனமான மைதானத்தில் ரசிக்க வைக்கும்படி ஆடி அசத்தியிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.

சீமான்..

பாசமும், லேசான கண்டிப்பும் கலந்த தந்தையாக, பசுமை உலகத்தின் நிம்மதி குலைந்துவிடாமல் காப்பவராக நடிப்பில் கைதட்டல் வாங்குகிறார் சீமான்.

மற்றவர்கள்..

யோகி பாபுவின் கெட்டப்பமும் நடிப்பையும் ரசிக்கமுடியவில்லை. உருவ கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல லேசான கிளாமரில் களமிறங்கி அடிக்கிறார் கெளரி கிஷன். ஷா ரா, ஆனந்த்ராஜ், மாளவிகா ஆகியோர் குறைவில்லாத நடிப்பை ஷேர் செய்திருக்கிறார்கள்.

தொழில்நுட்பம்..

தொழில்நுட்பத்தில் முன்னேறியிருக்கும் எதிர்கால உலகை நம் கண் முன் கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஒளியமைப்பில் வர்ணஜாலம் சேர்த்திருக்கிறார். கதையின் மையத்தைத் தொடாமல் சோர்வுடன் சுற்றிக் கொண்டே இருக்கும் படத்தின் முதல் பாதிக்கு ‘9G’ கனெக்‌ஷன் கொடுக்கத் தவறியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரதீப் இ. ராகவ். ஆனால் இடைவேளைக்குப் பிறகு அந்தக் குறையை நிவர்த்தி செய்து, திரையின் ஒவ்வொரு இன்ச்சையும் கதை சொல்லப் பயன்படுத்தியிருக்கிறார்

எல்.ஐ.கே செயலி, டிஜிட்டல் குடை, ரோபோக்கள், நவீன வளர்ச்சிக் கண்ட சென்னையின் முக்கியக் கட்டிடங்கள் என 2040-ம் ஆண்டை கிராபிக்ஸ் உதவிக் கொண்டு பிரமாண்டமாகக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். அதில் சிறப்பானதொரு அவுட்புட்டையே தந்திருக்கிறார்கள்.  அனிருத்தின் பின்னணி இசையும் படத்தை உயிர்ப்போடு நகர்த்தியிருக்கிறது. சோசியல் மீடியா டிரெண்டிங் ஒலிகளைப் பயன்படுத்திய விதத்திற்கும் லைக்ஸ்!

இன்றைக்கு அவசர, அவசியமான ஒரு கான்செப்டை கையில் எடுத்ததற்காகவே இயக்குநர் விக்னேஷ் சிவனை பாராட்டலாம்.  தீவிரமாக மொபைலுக்கு அடிமைப்பட்டிருக்கும் பழக்கம், நம் நெருங்கிய உறவுகளையும் எப்படி மறக்கச் செய்கிறது, அது உண்டாக்கும் சிக்கல்கள், அவை ஏற்படுத்து உளவியல் ரீதியான பாதிப்புகள் என்பதையும் அழுத்தமாகக் காட்டுகிறது இந்த ‘எல்.ஐ.கே’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE