‘ஷூ’ திரை விமர்சனம்
சமூகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் பெண் குழந்தை கடத்தல்தான் படத்தின் மையக்கரு. அதை இயக்குநர் கையாண்ட விதம்தான் பதற வைக்கிறது.
பேபி ப்ரியா கல்யாண் தாயில்லாத பிள்ளை. இவரது அப்பா அந்தோணிதாசன் செருப்பு தைக்கும் தொழிலாளி. அப்பா எந்நேரமும் ‘தண்ணி வண்டி’யாக இருப்பதால் பள்ளிக்கூடம் போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் செருப்பு தைக்கும் வேலையையும் செய்கிறார். ஒரு கட்டத்தில் பணத்திற்காக குழந்தை கடத்தும் கும்பலிடம் மகளை விற்றுவிடுகிறார் அந்தோணி தாசன். அந்த கும்பலிடம் சிக்கிக்கொள்ளும் பேபி ப்ரியாவுக்கு தன்னைப்போலவே கடத்தல் கும்பலிடம் நிறைய சிறுமிகள் மாட்டிக்கொண்டு தவிப்பது தெரிகிறது. எதையும் அறிவுப்பூர்வமாகவும் தைரியமாகவும் அனுகும் ப்ரியா, அந்த சிறுமிகளுக்கும் நம்பிக்கைக்கொடுத்து அங்கிருந்து தப்பிக்க திட்டம் போடுகிறார். ப்ரியாவின் திட்டம் ஜெயிக்கிறதா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
பெண் குழந்தை கடத்தல் என்ற கான்செப்டெல்லாம் சரிதான். அதை சொன்ன விதம்தான் முகம் சுழிக்க வைக்கிறது. ஒரு பக்கம் குழந்தை கடத்தல், இன்னொரு பக்கம் டைம் டிராவல் ஷூ கண்டுப்பிடித்து காணாமல் போகும் அந்த ஷூவை தேடியலையும் தீலிபன், மறுபக்கம் சிரிப்பு ரவுடிகளாக வரும் யோகிபாபு, கிங்ஸ்லி, பாலாவின் டிராக் என மூன்று கதைகள் ஒரு நேர்க்கோட்டில் இணைக்கப்படுகிறது. பரபரப்பாக கொண்டுபோயிருக்கவேண்டிய கதையை சுவாரஷ்யம் இல்லாத திரைக்கதையால் சொதப்பி இருக்கிறார் இயக்குநர் கல்யாண்.
யோகிபாபுவிடம் ஒருநாள் கால்ஷீட் வாங்கியிருப்பார்கள் போல, படத்துக்கு சம்பந்தமே இல்லாததுபோல சொற்ப காட்சியிலேயே நடித்து சிரிப்புக்கு பதில் எரிச்சலையே ஏற்படுத்துகிறார். இவரது கூட்டாளிகளாக வரும் கிங்ஸ்லி, பாலாவும் காமெடிக்கு பதில் கடுப்பை கிளப்புகிறார்கள். சாம்.சிஎஸ் பின்னணி இசை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தியேட்டரில் அனைவரும் தூங்கியிருப்பார்கள். ஒளிப்பதி ரொம்ப சுமார்.
ரவுடிகளாக வருபவர்களெல்லாம் காமிரா இருக்கும் இடம்கூட தெரியாத அளவுக்கு பொஷிசன் மாறி மாறி நின்று உயிரை எடுக்கின்றனர். அருமையான கலைஞன் அந்தோணிதாசனையும் மோசமான கேரக்டர் கொடுத்து வீணடித்திருக்கிறார் இயக்குநர் கல்யாண்.
படத்தில் திலீபன் கண்டுபிடிக்கும் டைம் டிராவல் ஷூ நமக்கு கிடைத்திருந்தால் அதை ஒரு உதை உதைத்து படத்துக்கு போகாமலேயே இருந்திருக்கலாம். மொத்தத்தில் ‘ஷூ’… முடிலைடா சாமி.