வரலாற்று படம் இயக்கும் சசிகுமார்
சசிகுமார் சென்னை பக்கம் எட்டிப்பார்த்து வெகுநாட்களாகிவிட்டது. குடும்பத்துடன் மதுரையிலேயே தங்கிவிட்ட சசிகுமார் TD ராஜாவின் ‘செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சத்திய சிவா இயக்கியுள்ள ‘நான் மிருகமாய் மாற’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் எவ்வாறு மிருகமாக மாறுகிறான் என்பதே படத்தின் கதை.
மேலும் இதில் சசிகுமார் ஒலி பொறியாளராக நடித்துள்ளார். ஒருவனின் வாழ்க்கையை எவ்வாறு ஒலி மாற்றுகிறது என்பதே படத்தின் திருப்புமுனையாக அமையும் என்று இயக்குனர் சத்ய சிவா தெரிவித்துள்ளார். படத்தில் சசிகுமார் ஜோடியாக ஹரிப்பிரியாவும் வில்லனாக விக்ராந்தும் நடித்துள்ளனர். படத்தில் நடித்த அனுபவம் பற்றி நாயகி ஹரிப்பிரியா கூறியதாவது:-
“படத்தில் நான் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில், கணவன் மற்றும் குழந்தையை பாதுகாக்கும் ஒரு எதார்த்தமான இல்லத்தரசியாக நடித்துள்ளேன். கன்னடத்தில் நான் நடித்த ‘பெல் பாட்டம்’ படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சத்தியசிவா எனக்கு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்தார். படத்தின் கதை நன்றாக இருந்ததால் உடனடியாக ஒப்புக்கொண்டேன். தமிழிலிருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்ததற்கு, கன்னடத்தில் பிஸியாக இருந்ததே காரணம். தமிழில் கதைகள் கேட்டு வருகிறேன். நல்ல கதை இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்” என்றார்.
முன்னதாக நிருபர்களிடம் சசிகுமார் பேசியதாவது :-
“இப்படத்தின் தலைப்பு, திரைக்கதைக்கு பொருத்தமாக இருக்கும். ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்வில் நடக்கும் கசப்பான சம்பவங்களால் எவ்வாறு ஒரு மிருகமாக மாறுகிறான் என்பதே கதை. படத்தில் நிறைய சண்டை காட்சிகள் இருக்கிறது . நான் நடிகனாகவும் இயக்குனராகவும் இருப்பதால் சத்திய சிவாவிடமிருந்து நிறைய விஷயங்கள் மற்றும் நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். தமிழில் மீண்டும் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது போராட்டம் மற்றும் வலி உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனாலே நான் திரைப்படங்களில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தேன். வாழ்வில் எதுவும் நிரந்தரம் அல்ல; எல்லாம் மாறும். அதனை நான் இப்போது புரிந்து கொண்டேன். பக்குவம் மற்றும் நிதானம் தான் மிகவும் முக்கியமானது. ஓடிக்கொண்டே இருப்பது வாழ்க்கை அல்ல. நிதானமாக பிடித்தவற்றை செய்வது மிகவும் முக்கியமானது.
விரைவில் ஒரு இதிகாச படம் இயக்கவுள்ளேன். அந்தப் படத்திற்கான திரைக்கதையை ‘ஈசன்’ திரைப்படம் வெளியானதற்கு பின்பு எழுதி முடித்தேன். இப்பொழுது வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘பாகுபலி’க்கு முன்னரே இந்தத் திரைப்படத்திற்கான பணி தொடங்கியது. ஆனால் படத்தின் செலவு மிகவும் அதிகமாக இருந்ததால், அந்தக் காலகட்டத்தில் இந்த திரைப்படத்தினை எடுக்க முடியவில்லை. ஆனால் விரைவில் இந்த படத்தினை இயக்குவேன்.
மதுரை எனது சொந்த ஊர். நான் எனது குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறேன். மேலும் எனது திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் மதுரையை சார்ந்த பகுதிகளில் நடைபெறுகிறது. அங்கு தங்கி இருப்பது மிகவும் எளிதாக உள்ளது. இங்கே ஒரு டப்பிங் ஸ்டூடியோ இருப்பதனால், என் கிராமத்தில் தங்கி வேலை செய்வது எனக்கு மிகவும் சவுகரியமாக உள்ளது. எனவே சென்னைக்கு வரவேண்டிய கட்டாயம் இருந்தால் மட்டுமே நான் வருவேன்” என்றார்.