பேட்டி

சவால் எனக்கு சர்க்கரை பொங்கல் : இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி பேட்டி

தெலுங்கு திரையுலகின் மிக பிரபலமான கீதா ஆர்ட்ஸ் சார்பில், அல்லு அரவிந்த் தயாரிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ஊர்வசிவோ ராட்சசிவோ. அல்லு அர்ஜுனின் தம்பியும் தமிழில் கவுரவம் படத்தில் கதாநாயகனாக நடித்தவருமான அல்லு சிரிஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை நாயகி அனு இம்மானுவேல் நடித்துள்ளார். ராகேஷ் சசி இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

கோலிசோடா-2 கொலையுதிர் காலம் உள்ளிட்ட ஹிட் படங்களுக்கு இசையமைத்த அச்சு ராஜாமணி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழில் யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசை அமைத்த பியார் பிரேமா காதல் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆக உருவாகி உள்ளது.

இந்தியா முழுக்க வெளியான இந்தப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் படமாக மாறியுள்ளது. இந்தப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இன்று இந்தப்படத்தின் வெற்றிக்கொண்டட்டம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் தெலுங்கு சினிமாவின் ஐகான் ஸ்டார் என கொண்டாடப்படுபவரும் நாயகன் அல்லு சிரிஷின் சகோதரருமான நடிகர் அல்லு அர்ஜுன் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார

படம் ஹிட் ஆன சந்தோஷத்தில், குறிப்பாக பாடல்களுக்கு ரசிகர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் மகிழ்ச்சியில் இருக்கும் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியுடன் ஒரு சந்திப்பு:-

இந்தபடத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு எப்படி வந்தது?

“இந்தப் படத்தின் ஹீரோ அல்லு சிரிஷும் நானும் 2015ல் இருந்தே நெருங்கிய நண்பர்கள். அவர் மூலமாகத்தான் இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பும் என்னை தேடி வந்தது.. அல்லு சிரிஷ் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு தெளிவான மனிதர். கதை தேர்வு செய்வது, நம்முடன் உரையாடுவது என எல்லாவற்றிலும் அவரிடம் ஒரு தெளிவு இருக்கும். நாம் அவரிடம் பேசும்போது கூட முன்கூட்டியே தயாராகிக்கொண்டு பேசும் அளவிற்கு அவரிடம் ஒரு கிளாரிட்டி இருக்கும். அவரது அப்பா அல்லு அரவிந்த் போல தான்அவரும் என்று கூட சொல்லலாம். நாங்கள் இருவரும் பெர்ஷனலாக பெசுசிக்கொள்ளும் சமயங்களில் கூட கேலி கிண்டல்கள் இருக்காது. அப்போது கூட தேவையான விஷயங்களை மட்டுமே பேசுகிவோம்.

யுவன் பட ரீமேக் என்பதால் பிரஷர் இருந்ததா..?

பியார் பிரேமா காதல் படத்தை நான் கிட்டத்தட்ட ஐந்து தடவைக்கு மேல் பார்த்துவிட்டேன். இங்கே யுவன் ரொம்ப அழகாக பண்ணியிருக்கிறார். ஆனால் தெலுங்கில் இந்த படத்தை ரீமேக் என பார்க்காமல் ஒரு தனி தெலுங்கு படமாகத்தான் உருவாக்கியுள்ளோம். குறிப்பாக ஒரிஜினலை கெடுத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அதனால் தெலுங்கில் மேக்கிங்கிலும் சரி இசையிலும் சரி இன்னும் கொஞ்சம் மேம்படுத்தி இருக்கிறோம் என்று கூட சொல்லலாம். தமிழில் பயன்படுத்திய எந்த ஒரு இசையையும் இந்தப்படத்தில் தெலுங்கிற்காக நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை. தமிழுக்கும் தெலுங்கிற்கும் ரொம்பவே வித்தியாசம் காட்டி இருக்கிறோம்.

இந்த படத்தில் 5 பாடல்கள் இருக்கின்றன. ஏற்கனவே இந்த படத்தில் இரண்டு பாடல்கள் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தின. வானொலிகளில் கூட டாப் பாடல்களில் இடம் பிடித்திருந்தன.

இயக்குனர் ராகேஷ் சசியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து..?

இந்த படத்தின் இயக்குனர் ராகேஷ் சசி பற்றி சொல்லும் வேண்டுமென்றால் அவருக்கு என்று ஒரு தனி பார்வை இருக்கிறது. அவரது குடும்பத்தினர் கேசட் கடை வைத்து நடத்தியவர்கள் என்பதால் சிறுவயதில் இருந்தே பாடல்கள் மற்றும் இசை சம்பந்தமான ஞானம் அவருக்கு இயல்பாகவே இருக்கிறது. அவருக்கு என்ன தேவை என்பது எனக்கும் தெரிந்துவிட்டதால் அவருடன் இணைந்து பணியாற்றுவது எளிதாக இருந்தது.

பாடல்கள், பின்னணி இசை விஷயத்தில் இந்த படத்தில் பணியாற்ற முழு சுதந்திரம் எனக்கு இருந்தது. இந்த படத்தின் பின்னணி இசை சமயத்தில் இயக்குனர் ராகேஷ் சசியும் நிர்வாக தயாரிப்பாளரான பன்னி வாசுவும் எனக்கு ரொம்பவே உற்சாகமும் உந்துதலும் கொடுத்தனர். படத்தின் தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் கூட “அவன் போக்கில் விட்ருங்க.. அவன் என்ன வேணும்னாலும் பண்ணட்டும்.. அதுல இருந்து வேணும்ங்கிறத நீங்க வாங்கிக்குங்க” என்று பெருந்தன்மையுடன் கூறிவிட்டார். இயக்குனர் மட்டுமல்ல, படத்தின் நாயகன் சிரிஷ் கூட இந்த படத்திற்காக எனக்கு நிறைய இன்புட்ஸ் கொடுத்தார்கள்.

இந்தப்படத்தில் அல்லு சிரிஷுடன் உங்கள் அனுபவம் ?

சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள் நானும் சிரிஷும் அமர்ந்து எங்களுக்கு தோணும் போதெல்லாம் இசையில் புதுப்புது ட்யூன்களை எதிர்காலத்தில் பயன்படும் என நிறைய உருவாக்கி வைத்துள்ளோம். அவருடன் இணைந்து பணியாற்றிய அந்த அனுபவம் நன்றாக இருந்தது. சிரிஷை பொருத்தவரை பெரும்பாலும் அவரது தந்தை சொல்வதுபோல ஜூபிலி ஹில்ஸ் பாய் என்பது போலத்தான் இதுவரையிலான படங்களில் நடித்துள்ளார். முதன்முறையாக இந்த படத்தில் ஒரு மிடில்கிளாஸ் பையனாக நடித்துள்ளார். அது உண்மையிலேயே சவாலான விஷயம் தான். ஆனால் தான் ஒரு பெரிய குடும்பத்து பையன் என்பது போன்ற விஷயங்களை எல்லாம் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் இந்த படத்தில் அழகாக அண்டர்ப்ளே செய்து அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். நான் பொதுவாக எனக்கு பிடித்த, பிடிக்காத விஷயங்களை ஓபனாக சொல்லி விடுவேன் அதனால்தானோ என்னவோ என்னால் இன்னும் பெரிய இடத்திற்கு போக முடியவில்லை என்று கூட நினைக்கிறேன்.

ஆனால் இந்த படம் பற்றி ஓப்பனாக சொல்ல வேண்டுமென்றால் அல்லு சிரிஷ் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு ஸ்கிரிப்ட் பற்றிய அறிவு நிறையவே இருக்கிறது. அவரது அண்ணன் அல்லு அர்ஜுன் நடித்த ஆர்யா படத்திற்கான ஸ்கிரிப்ட்டை தேர்வு செய்தது கூட அவர் தான். அது மட்டுமல்ல அல்லு சிரிஷுக்கு காமெடி டைமிங் சென்ஸ் நிறைய இருக்கிறது. அதை இந்த படத்தில் இயக்குனர் சரியாக பயன்படுத்தியிருக்கிறார். இந்தப்படத்தில் அல்லு சிரிஷை புதிய நபராக பார்ப்பீர்கள்..

தமிழில் கொஞ்சம் இடைவெளி விழுந்துவிட்டது போல தெரிகிறதே..?

தமிழில் விஜய் ஆண்டனி நடித்து வரும் மழை பிடிக்காத மனிதன், அடுத்ததாக நாற்கர போர், சாமான்யன் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறேன். அடுத்து கோலி சோடா மூன்றாம் பாகம் பண்ணும் ஐடியாவும் இருக்கிறது. இன்னும் இரண்டு படங்களுக்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் நாற்கர போர் என்கிற படம் பெரிய அளவில் பேசப்படும். கோலிசோடா-2 படத்திற்கு பிறகு மீண்டும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் இயக்குனர் விஜய் மில்டனுடன் இணைந்து பயணிக்கிறேன்.. கோலிசோடா-2 படத்தில் பொண்டாட்டி பாடலாகட்டும் பின்னணி இசையாகட்டும் அது மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு விஜய்மில்டன் எனக்கு கொடுத்த சுதந்திரமும் முக்கிய காரணம்.

விஜய் ஆண்டனிக்கு இசையமைத்த அனுபவம் எப்படி இருந்தது..?

அதேபோல மழை பிடிக்காத மாமனிதன் படத்தில் ஒரு ஹீரோவாக விஜய் ஆண்டனிக்கு எப்படி இசையமைத்தால் சரியாக இருக்கும் என்கிற கோணத்தில் தான் பணியாற்றி வருகிறேன். விஜய் ஆண்டனியை பொருத்தவரை ஒரு இசையமைப்பாளர், நடிகர் என்பதைவிட மரியாதைக்குரிய மனிதாபிமானமிக்க ஒரு மனிதராகத்தான் நான் பார்க்கிறேன். இதுவரை ஒரு நாள் கூட அவர் என்னிடம் படத்தின் இசை பற்றி பேசியதோ அல்லது குறுக்கீடு செய்ததோ கிடையாது. அவரும் ஒரு இசையமைப்பாளர் என்பதால் இன்னொருவரின் வேலையில் குறுக்கிட்டால் அது எந்தவிதமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அவருக்கும் தெரியும் தானே ?

பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைப்பது எப்போது எதிர்பார்க்கலாம்..?

பொதுவாகவே எனக்கு யாராவது சவால் விட்டால் ரொம்பவே பிடிக்கும். .அப்போதுதான் இன்னும் முனைப்புடன் நம்மால் செயல்பட முடியும். நாம் பார்க்கும் வேலை பேசப்பட வேண்டும்.. அந்த வேலைதான் நமக்கான படங்களை நம்மிடம் கொண்டுவரும்.. அப்படி வரும்போது நிச்சயம் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்..

சாமான்யன் படத்திற்காக ஒளிப்பதிவாளர் ரவிவர்மாவின் பாடலுக்கு இசையமைத்தது பற்றி ?

அவரும் எழுத்தாளர் தான்.. ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருவதால் அவ்வளவாக வெளியே தெரியவில்லை நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார். தமிழ்மீது அவருக்கு நல்ல காதல் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அந்த பாடலை அவர் எழுதி அதற்கு நான் டியூன் போட்டது உண்மையிலேயே அருமையான விஷயம். நான் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படத்தின் இயக்குனர் ராகேஷ் தான் இந்த படத்திற்கும் இயக்குனர் என்பதால் ரவிவர்மனுடன் பணியாற்றும் நல்ல வாய்ப்பு கிடைத்தது..

குறும்பட தயாரிப்பில் இறங்கி விட்டீர்களே..?

உண்மைதான்.. என்னுடைய சொந்த தயாரிப்பில் குறும்படங்களை தயாரிக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளேன். முதல் தயாரிப்பாக ஹிட் விக்கெட் என்கிற குறும்படம் உருவாகியுள்ளது. இதை என்னுடைய நண்பர் கபாலீஸ்வரன் இயக்கியுள்ளார். நான் இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளேன். இதில் அனந்த்நாக் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் மல்லிப்பூ பாடல் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகை பிரியா லயா இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் சிவி குமாரின் படம் மற்றும் சந்தானத்துடன் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் மாண்டி என்பவரை ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தியுள்ளேன்.

இந்த குறும்படத்தின் போஸ்டரை ஆதி-நிக்கி கல்ராணி இருவரும் இணைந்து வெளியிட்டிருந்தனர். இதன் கேரக்டர் போஸ்டர்களை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் வெளியிட்டிருந்தார். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாக இருக்கிறது. நவம்பர் மாத இறுதியில் இந்த ஹிட் லிஸ்ட் குறும்படத்தை வெளியிட இருக்கிறோம். இதையடுத்து புதிய குறும்படத்தை உருவாக்கும் பணிகள் துவங்கப்பட இருக்கிறது. வழக்கமான குறும்படங்கள் போல அல்லாமல் புதிய பாணியில் அவற்றை உருவாக்குவதே எனது நோக்கம். அப்படிப்பட்ட குறும்படத்திற்கான விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக அணுகலாம்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE