திரை விமர்சனம்

‘மூக்குத்தி அம்மன்’ திரை விமர்சனம்!

காவல்துறையில் காவலராக பணியாற்றி வரும் சக்தி (நயன்தாரா) தனது வளர்ப்புத் தாயான பாலம்மாவுடன் (ஊர்வசி) வசித்து வருகிறார். அவருக்கு, தொடர்ந்து சில விசித்திரமான கனவுகள் வருகின்றன. அந்தக் கனவுகளில் சிலர் தோன்றி, மைலாஞ்சிக்கு வருமாறு அழைக்கின்றனர். இதனால் குழப்பமடையும் சக்தி, தனக்கு ஏன் இதுபோன்ற கனவுகள் வருகின்றன என்ற கேள்வியுடன் தவித்து வருகிறார்.

இந்தச் சூழலில் மைலாஞ்சிக்கு விருப்பப் பணியிட மாற்றம் கிடைக்கவே, அங்கு செல்ல முடிவெடுக்கிறார் நயன்தாரா. ஆனால், அங்கே தனக்காகத் தீய சக்தியான பைரி (ரெஜினா கசாண்ட்ரா) காத்திருக்கிறாள் என்பது அவருக்குத் தெரியாது. சக்திக்கும் பைரிக்கும் இடையே நடைபெறும் மோதல்தான் படத்தின் மீதிக்கதை.

படத்தின் தொடக்கத்தில் நாயகிக்குத் தொடர்ந்து வரும் விசித்திரமான கனவுகள் ஓரளவுக்குக் கவனத்தை ஈர்க்கின்றன. கிராமத்துத் தெய்வம், அதன் அவதாரம், தீய சக்தி எனப் பக்தி கலந்த ஃபேண்டஸி கதைக்களமாக உருவாக்கியிருப்பது சுவாரஸ்யமான முயற்சி.

சக்தி கதாபாத்திரத்தில் நயன்தாரா வழக்கம்போல் நடித்திருக்கிறார். இருப்பினும், அவரது நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் அளவுக்கு அழுத்தமான காட்சிகள் படத்தில் இல்லை. ஆங்காங்கே இடம்பெறும் சில மாஸ் காட்சிகள் மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கின்றன.

வில்லி பைரியாக நடித்திருக்கும் ரெஜினா கசாண்ட்ராவுக்கு படத்தில் அதிக முக்கியத்துவமும், கணிசமான திரை நேரமும் கொடுக்கப்பட்டுள்ளது. கிடைத்த வாய்ப்பை அவர் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார். அவரது நடிப்பும் சில இடங்களில் கவனிக்க வைக்கிறது.

தீயசக்தி ரெஜினாவின் காதலராக துனியா விஜய்க்கு படத்தில் முக்கியத்துவமான கதாபாத்திரம். ஆனால் ரெஜினாவின் காதலர் என்று நினைத்து பார்க்கும்போதுதன் மனம் தாங்கமுடியவில்லை. சுந்தர் சி சார் உங்க டேஸ்ட் இப்படியா மாறனும்?

ஊறுகாய் மாதிரி பயன்படுத்தப்பட்டிருக்கும் யோகிபாபுவால்   படத்திற்கு பைசா பிரயோஜம் இல்லை. நயன்தாரவின் அம்மா கேரக்டரில் ஊர்வசியும் சுவாரஷ்யம் இல்லை.

மூன்று இலக்க கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் என்று படக்குழுவினர் பெருமையாகக் கூறியிருந்தாலும், திரையில் அந்தப் பிரம்மாண்டத்தைப் பார்க்க முடியவில்லை என்பதுதான் வேதனை. குறிப்பாக, கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் தரமற்ற நிலையில் உள்ளன. படம் முழுவதும் இடம்பெறும் சிஜிஐ காட்சிகள் செயற்கையாகவும், நம்பகத்தன்மையற்றதாகவும் இருப்பதால் அவற்றைக் கடந்து படத்தைப் பார்ப்பதே சவாலாக இருக்கிறது.

அதிலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு பல இடங்களில் அப்பட்டமாகத் தெரிகிறது. குறிப்பாக, வனப்பகுதிகளில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் செயற்கையாக உருவாக்கப்பட்டவை என்பது தெளிவாகத் தெரிகிறது. இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவான படத்தில் இத்தகைய காட்சித் தரம் ஏன் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

தொழில்நுட்பக் குறைகளை ஒருபுறம் வைத்துவிட்டுப் பார்த்தாலும், திரைக்கதை பெரிதாகக் கைகொடுக்கவில்லை. சுவாரஸ்யமான கதைக்கருவை எடுத்துக்கொண்ட இயக்குநர், அதை விறுவிறுப்பான திரைக்கதையாக மாற்றத் தவறியிருக்கிறார். பழைய பாணியிலான கதை சொல்லும் முறையும், கணிக்கக்கூடிய காட்சிகளும் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன.

குறிப்பாக, இரண்டாம் பாதி பார்வையாளர்களின் பொறுமையை வெகுவாகச் சோதிக்கிறது. அதில் இடம்பெறும் போர் காட்சிகள் மிகவும் மோசமாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தை எடுத்துக்கொண்டு, இறுதியில் வழக்கமான பழிவாங்கும் கதையாக மாற்றியிருப்பது ஏமாற்றமே.

மூத்த நடிகைகளின் சிறப்புத் தோற்றங்களும் கதைக்கு எந்தவிதமான பெரிய பலத்தையும் சேர்க்கவில்லை. அதேபோல், இரண்டாம் பாதியில் யோகி பாபு இடம்பெறும் நீண்ட நகைச்சுவைக் காட்சி சிரிப்பை வரவழைப்பதற்குப் பதிலாக எரிச்சலையே ஏற்படுத்துகிறது.

துனியா விஜய், சுனில், ராமச்சந்திர ராஜு எனப் பல திறமையான நடிகர்கள் இடம்பெற்றிருந்தும், அவர்களது கதாபாத்திரங்களைச் சரியாகப் பயன்படுத்தாமல் வீணடித்திருக்கிறார்கள். பின்னணி இசையும் பல இடங்களில் தேவையற்ற இரைச்சலாகவே ஒலிக்கிறது.

ஹிப் ஹாப் தமிழாவின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்குப் பெரிய பலமாக அமையவில்லை. கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவிலும் குறிப்பிடத்தக்க புதுமையோ, பிரம்மாண்டமோ இல்லை. இரண்டரை மணி நேரத்திற்கும் குறைவான படமாக இருந்தாலும், திரையில் படம் நகரும் விதம் காரணமாக நீண்ட நேரம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது. படத்தொகுப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

வெங்கட் ராகவனின் திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலவீனம். சுந்தர் சி-யின் இயக்கமும் எதிர்பார்த்த அளவுக்குக் கைகொடுக்கவில்லை. வழக்கமான கதைகளாக இருந்தாலும், தனது படங்களில் காமெடி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைச் சரியான அளவில் கலந்து கொடுப்பதில் வல்லவர் சுந்தர் சி. ஆனால், இந்தப் படத்தில் அந்த அடிப்படையான பொழுதுபோக்கு அம்சத்தைக்கூட வழங்கத் தவறியிருக்கிறார்.

சுவாரஸ்யமான கதைக்கருவையும், நல்ல நடிகர்களையும் வைத்துக்கொண்டு, பலவீனமான திரைக்கதை மற்றும் சொதப்பலான இயக்கத்தால் ஏமாற்றத்தைத் தரும் படமாக அமைந்திருக்கிறது மகாசக்தி. தரமற்ற கிராபிக்ஸ், செயற்கையான காட்சியமைப்பு, விறுவிறுப்பில்லாத திரைக்கதை எனப் பல குறைகளுடன் பயணிக்கும் இப்படம், இரண்டாம் பாதியில் முற்றிலும் சோதிக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE