நிகழ்வுகள்

மலைவாழ் மக்கள் பிரச்சனையை பேசும் ‘நாடு’

ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நாடு’. இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத ‘எங்கேயும் எப்போதும்’ என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க,  மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.

முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்து இயக்குனர் சரவணனுடன் இணைந்து பயணிக்கும் இசையமைப்பாளர் சத்யா  இந்த படத்திற்கும் இசை அமைத்துள்ளார். சக்திவேல் ஒளிப்பதிவை கவனிக்க, தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் லால்குடி இளையராஜா இந்த படத்தின் கலை வடிவமைப்பை கவனித்துள்ளார். பொன் கதிரேசன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

இந்தப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று மாலை இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்  நடைபெற்றது.  இந்த நிகழ்வில் இயக்குனர் சரவணன் பேசியதாவது:-

“இப்போது சினிமாவில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் ரொம்பவே புத்திசாலித்தனமான, அறிவுக்கூர்மை வாய்ந்த கதாபாத்திரங்களாகவே காட்டப்படுகின்றன. நாங்கள் அதிலிருந்து விலகி எளிய மனிதர்கள் பற்றிய கதையாக இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் மலைவாழ் மக்கள் பிரச்சனையை பேசி உள்ளோம். கொல்லிமலை பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு கொல்லிமலைக்கு சென்றிருந்த சமயத்தில் நேரிலேயே நான் கண்ட ஒரு நிகழ்வு என் மனதை பாதித்தது. ரொம்ப நாட்களாக மனதில் இருந்த அந்த நிகழ்வை மையப்படுத்தி இந்த படத்தின் கதையை உருவாக்கினேன்.

இந்த படத்தில் ஹீரோவாக நடித்த தர்ஷனை அவர் ஆடிஷன் வருவதற்கு முன்புவரை நான் பார்த்ததே இல்லை. காரணம் நான் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதில்லை. ஆடிஷனுக்கு வருவதற்கு முன்பு கூட அவரது பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை தான் காட்டினார்கள். ஆனால் நேரில் அவரை பார்த்ததுமே இந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியான நபர் என்று தோன்றிவிட்டது. உடனே அவரிடம் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டேன். அதேபோல இந்த படத்தின் ஒர்க்ஷாப்புக்கு வரும்போது பேண்ட் சர்ட் எல்லாம் போடாமல் லுங்கியை வாங்கி கட்டிக்கொண்டு வாருங்கள் என கூறிவிட்டேன். அதிலிருந்து இந்தக்கதையுடன் அவர் தினசரி பயணிக்க துவங்கி விட்டார். அதனால்தான் படப்பிடிப்பில் கூட அவர் ஸ்கிரிப்ட் பேப்பர் இல்லாமல் எல்லா வசனங்களையும் மனப்பாடமாக பேச முடிந்தது” என்றார்.

ஒளிப்பதிவாளர் சக்திவேல் பேசும்போது, “கொல்லிமலை பின்னணியில் இந்தப்படத்தின் கதை நிகழ்கிறது என்று சொன்னபோது, நிச்சயமாக இதை வித்தியாசமான படமாக உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. அதற்கேற்றபடி இதுவரை சினிமாவின் காலடி படாத பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்” என்றார்.

கலை இயக்குனர் இளையராஜா பேசியதாவது:-

“இந்த படத்திற்கு  ‘நாடு’ என டைட்டில் வைத்திருந்ததை பார்க்கும்போது எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு சென்றபோதுதான் அங்கு 28 நாடுகளை எனக்கு காட்டினார் இயக்குனர் சரவணன். அங்குள்ளவர்கள் சமுதாயம், மொழி, இனம் என தங்களுக்குள் ஒரு நாடாக உருவாக்கி வாழ்ந்து வருகின்றனர். அதே சமயம் அவர்கள் எளிமையான மக்கள்.. அங்கே படப்பிடிப்பு நடந்த நாட்களில் நான் கவனித்த அளவில் ஆதிவாசிகள் அவர்கள் அல்ல.. இங்கே இருக்கும் நாம்தான் டெக்னாலஜி ஆதிவாசிகள் என்பதை புரிந்து கொண்டேன்” என்றார்.

இசையமைப்பாளர் சத்யா பேசும்போது,“எனக்கு இயக்குனர் சரவணனுக்கும் அலைவரிசை ஒரே மாதிரி இருப்பதால் தான் தொடர்ந்து அவருடன் பணியாற்றி வருவது எளிதாக இருக்கிறது. இந்தப்படத்தை எடுத்து முடித்தபின் பார்த்தபோது இதற்கு பின்னணி இசை மிகப்பெரிதாக தேவைப்படுகிறது என்பதை உணர முடிந்தது. அதற்கேற்ற வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்” என்றார

நாயகன் தர்ஷன் பேசும்போது, “இயக்குனர் சரவணன் என்னிடம் கதை சொன்னபோது இந்த படத்தில் நான் இருக்கிறேனா என்று முதலில் என்னால் நம்ப முடியவில்லை. கொல்லிமலையில் பிறந்து வளர்ந்த இளைஞனாக இதில் நடித்துள்ளேன். கதாநாயகி மகிமா நம்பியார் சீனியர் என்கிற ஈகோ பார்க்காமல் என்னிடம் சினிமா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். வழக்கமாக இதையெல்லாம் நான் செய்ய மாட்டேன் என்று சொன்ன மகிமா, படப்பிடிப்பில் என்னை பலமுறை உற்சாகப்படுத்தி பாராட்டினார். இந்தப்படத்தில் என்னுடன் இணைந்து நடித்துள்ள நடிகர் இன்பாவுடன் நல்ல ஒரு நட்பு உருவானது. எங்களை பார்த்தவர்கள் திரையில் தோன்றுவதைவிட வெளியில் அவ்வளவு பிணைப்புடன் இருக்கிறீர்களே என்று ஆச்சரியப்பட்டார்கள்” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் சக்ரா பேசும்போது, “நாடு என்பதை இயக்குனர் சரவணன் அவரது பார்வையில் என்னவென்று சொல்லி இருக்கிறார். படம் பார்க்கும்போது உங்களுக்கே அது தெரியும்” என்றார்.

நடிகர் சிங்கம்புலி பேசியதாவது:-

“கொல்லிமலை பகுதியில் உள்ள எல்லா ஊர்களுக்கும் நாடு என்று முடியும்படி தான் பெயர் வைத்திருப்பார்கள். இந்த படத்தின் இயக்குனர் சரவணனை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றியபோது இருந்தே தெரியும். அவர் இயக்கிய எங்கேயும் எப்போதும் படம் பார்த்துவிட்டு இவருடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி இந்த வாய்ப்பு கிடைத்தபோது நான் படப்பிடிப்புக்கு சென்ற முதல்நாளே, இந்த படத்தில் நான் நடிக்க வரவில்லை.. உங்களுடன் இணைந்து சேவை செய்ய வந்திருக்கிறேன் என்று கூறினேன். அந்த அளவிற்கு அவரது சமூக அக்கறை எனக்கு பிடிக்கும்.
ஒளிப்பதிவாளர் சக்தியின் முழு திறமையை யாரும் பார்த்ததில்லை. இந்தப்படத்தில் பார்ப்பீர்கள்.  இதற்கு முன்பாக பிதாமகன், நான் கடவுள் ஆகிய படங்களில் பணியாற்றியபோது அந்த ஹீரோக்களின் கடின உழைப்பை  நேரில் பார்த்தவன் நான். அதனால்தான் அவர்கள் இன்று அந்த உயரத்தில் இருக்கிறார்கள். அதேபோன்ற ஒரு அர்ப்பணிப்பு உணர்வை தர்ஷனிடமும் பார்த்தேன்.. நிச்சயமாக அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல உயரம் இருக்கு” என்றார்.

நடிகர் அருள்தாஸ் பேசும்போது,

“கமர்சியல் படங்கள் நிறைய வருகின்றன. ஆனாலும் சிறிய படங்கள்தான் சினிமாவை ஒவ்வொரு காலகட்டத்திலும் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கின்றன. இந்தப்படமும் அப்படி ஒரு இடத்தை பெறும். தங்கள் முதல் படமாக இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்வேன். இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல உலகம் முழுமைக்குமான ஒரு படம்.. நாயகன் தர்ஷன் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைப்பை கொடுத்துள்ளார்.. நிச்சயம் அவருக்கு வெற்றி படமாக இது அமையும்.. அதேசமயம் வளர்ந்த பின்பு அவர் மாறிவிடக்கூடாது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE