திரை விமர்சனம்

‘ஜான் டோ’ திரை விமர்சனம்!

கேரளா – தமிழ்நாடு எல்லையில் உள்ள குறிஞ்சி மேடு மலைப்பிரதேசத்தில் கதை நடக்கிறது. அம்மா இறந்த பிறகு அப்பா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள, முதல் மனைவிக்குப் பிறந்த மகள் சாரா, இரண்டாவது மனைவிக்குப் பிறந்த மகன் ஹிருதய் (நீரவ்) எனக் குடும்பம் இந்தியா திரும்புகிறது. இந்நிலையில், செல்லப்பிள்ளையான ஹிருதய் திடீரெனக் காணாமல் போகிறான்.

இதற்கிடையே, அப்பாவால் அவமானப்படுத்தப்பட்டு, அதைச் சவாலாக ஏற்று கேரள போலீஸ் அதிகாரியாக உயர்ந்திருக்கும் அர்ஜுன் தாஸ், அடையாளம் தெரியாத ஒருவரின் (John Doe) வழக்கை விசாரிக்கத் தமிழகம் வருகிறார். காணாமல் போன ஹிருதய்க்கும் ஜான் டோவுக்கும் தொடர்பு இருப்பதை உணர்கிறார். ஹிருதய் வழக்கை விசாரிக்கும் பெண் போலீஸ் அதிகாரி ராவ் (சஞ்சனா நடராஜன்) உடன் இணைந்து விசாரணையைத் தொடர்கிறார்.

கடத்தப்படும் சிறுவர்களின் மேல்பற்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி (Diastema) விசாரணையில் முக்கியத் தடயமாகிறது. ஒருகட்டத்தில் ஹிருதய் உயிருடன் திரும்பினாலும், தனது பெயரைக்கூட மறந்து கேபிரியேல் என்கிறான். அவன் கையில் ஏஞ்சல் என்ற பெயர் பொறிக்கப்பட்ட தங்கக் கையணி வேறு!

இந்தக் கடத்தல்களின் பின்னணி என்ன? ஜான் டோ யார்? என்பதற்கான விடைகள்தான் மீதிக்கதை.

திரைக்கதை – மர்மமும் வேகமும்!

குழந்தைகள் கடத்தல், போலீஸ் விசாரணை, அடையாளம் தெரியாத நபர் என ஆரம்பத்திலேயே மர்ம முடிச்சுகளைப் போடும் இயக்குநர் மதுமிதா, அவற்றை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் விதத்தில் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக, இடைவேளைத் திருப்பம் அட்டகாசம்! இரண்டாம் பாதியிலும் விறுவிறுப்புக்குக் குறைவில்லை. சில இடங்களில் வழக்கமான திரில்லர் பாணி எட்டிப்பார்த்தாலும், சுவாரஸ்யம் தொடர்கிறது.

தொழில்நுட்பம் – மேக்கிங்கில் மெனக்கெடல்!

மதுமிதாவின் காட்சியமைப்பு, ஷாட் தேர்வு, ஃபிரேமிங் ஆகியவை பாராட்டுக்குரியவை. ப்ரீத்தா ஜெயராமனின் ஒளிப்பதிவு மலைப்பிரதேசத்தின் அழகையும் மர்மச் சூழலையும் சிறப்பாகப் பதிவு செய்கிறது. முஜீப் மஜீத், ஆர்டிஸ்ட் 404 ஆகியோரின் பின்னணி இசை திரில்லர் உணர்வைக் கூட்டுகிறது. விஜய் வெங்கட் ரமணனின் படத்தொகுப்பில் முதல் பாதியில் மட்டும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

நடிப்பு – அதட்டல் கொஞ்சம் ஓவர் டோஸ்!

அர்ஜுன் தாஸ் தனது கம்பீரமான குரலாலும் நடிப்பாலும் கவனிக்க வைக்கிறார். சஞ்சனா நடராஜனின் பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திர வடிவமைப்பும் நடிப்பும் சிறப்பு. ஆனால், தொடர்ந்து அதட்டிக்கொண்டே இருப்பது கொஞ்சம் ஓவர் டோஸ்! ஹிருதயாக வரும் நீரவ் சிறப்பாக நடித்திருக்கிறார். அனுபமா, ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களில் கச்சிதம்.

கிளைமாக்ஸ் – இங்கேதான் தடுமாற்றம்!

இவ்வளவு நேரம் அழகாக முடிச்சுகளை அவிழ்த்துவந்த படம், கிளைமாக்ஸில் மட்டும் பெரிய சறுக்கலைச் சந்திக்கிறது.

மனைவி, மகன் என இருவரும் ஒரே நேரத்தில் உயிராபத்தில் சிக்கும்போது, யாரைக் காப்பாற்றுவது என்ற முடிவில் கதாபாத்திரம் எடுக்கும் தீர்மானம் இயல்பாகவே ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. குறிப்பாக, எந்தத் தவறும் செய்யாத குழந்தையின் உயிரைப் புறக்கணிக்கும் முடிவுக்குப் போதுமான உளவியல் காரணமும் படத்தில் அழுத்தமாக நிறுவப்படவில்லை.

சைக்கோ கதாபாத்திரம் என்றாலும் அதற்கென்று ஒரு மனோவியல் நியாயம் வேண்டாமா? இப்படிப்பட்ட செயல்பாடுகளை நியாயப்படுத்தாமல் விட்டுவிட்டு, அந்தக் கதாபாத்திரத்தைச் சைக்கோ என்று மட்டும் சொல்லிவிட முடியாது. வேண்டுமானால் ‘வைக்கோ’, ‘பொய்க்கோ’ என்று அழைத்துக்கொள்ளலாம்!

மிக முக்கியமாக, இது இந்தியக் கதை. குடும்ப உறவுகள், பெற்றோரின் உணர்வுகள், குழந்தையின் மீதான பாசம் ஆகியவற்றை நம் மண்ணின் இயல்புக்கு ஏற்பக் காட்சிப்படுத்தியிருக்க வேண்டும். நேட்டிவிட்டி இல்லாமல் மேற்கத்திய வார்த்தைகளான ஜான் டோ, டயாஸ்டீமா, கோஸ்டிங் என்று பயன்படுத்துவதால் மட்டும் தரமான திரில்லர் உருவாகிவிடாது.

குற்றவாளியின் பின்னணியையும், அவனது செயல்பாடுகளுக்கான உளவியல் காரணத்தையும் இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருந்தால் கிளைமாக்ஸ் வலுவடைந்திருக்கும்.

இறுதித் தீர்ப்பு – மர்மம் இருக்கிறது… நியாயம் இல்லை!

முதல் பாதியில் மர்மம், இடைவேளையில் அதிரடி திருப்பம், இரண்டாம் பாதியில் வேகம், தொழில்நுட்பத்தில் நேர்த்தி எனப் பல பலங்கள் இருந்தும், கிளைமாக்ஸில் சொதப்பிவிடுகிறது ‘ஜான் டோ’.

பெயர் தெரியாத மனிதனின் மர்மம் சுவாரஸ்யம். ஆனால், அவனது கதையை முடிக்கும் விதத்தில் இயக்குநருக்கே கொஞ்சம் அடையாளக் குழப்பம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE