நிகழ்வுகள்

ஜல்லிக்கட்டுடன் மல்லுக்கட்டும் பீட்டா : எதிர்த்து நிற்கும் ‘காரி’ சசிகுமார்

கடந்த சில வருடங்களாக எந்த பிரச்சினையுமின்றி ஜல்லிக்கட்டு நடந்து வரும் நிலையில், தற்போது பீட்டா உள்ளிட்ட சில அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழக அரசு ஜல்லிக்கட்டு மீது தடை விதிக்க கூடாது என தனது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது. இந்தநிலையில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள காரி திரைப்படம் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளதால் ரசிகர்களிடம் இந்த படம் திடீர் கவனம் பெற்றுள்ளது.

அறிமுக இயக்குநர் ஹேமந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். சர்தார் என்கிற வெற்றி படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். நாளை இப்படம் வெளியாக உள்ள நிலையில்  ‘காரி’யில் ஜல்லிக்கட்டு எந்த விதமாக இடம்பெற்றுள்ளது மற்றும் அது எப்படி நமது வாழ்வியலுடன் கலந்துள்ளது என்பது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் சசிகுமார், இயக்குநர் ஹேமந்த், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார், நாயகி பார்வதி அருண் ஆகியோர் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

இயக்குநர் ஹேமந்த் பேசும்போது, “படத்தில் ஜல்லிக்கட்டு ஒரு முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ளது. அதேசமயம் இதில் மூன்று வர்க்கத்தை சேர்ந்தவர்களின் பிரச்சனைகளும் அவர்களின் வாழ்வியலும், அவற்றை ஜல்லிக்கட்டு மையப்புள்ளியாக இருந்து எப்படி இணைக்கிறது என்பதையும் பற்றி கூறியுள்ளோம். இந்தபடத்தில் 18 வகையான காளைகள், அதேபோல 18 வகையான வீரர்கள் என ஒரு நிஜ ஜல்லிக்கட்டையே நடத்தியுள்ளோம். அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்த விதிமுறைகளை கடைபிடித்து மிகுந்த சிரமத்திற்கு இடையே அந்த காட்சிகளை படமாக்கினோம். இதில் சசிகுமார் குதிரைப்பந்தய ஜாக்கியாகவும் ஆடுகளம் நரேன் குதிரைப்பந்தய பயிற்சியாளராகவும் நடித்துள்ளனர். குறிப்பாக குதிரை பந்தயத்திற்கும் ஜல்லிக்கட்டுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. அப்படிப்பட்ட ஒரு நாயகன் கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும்போது குதிரை பந்தயத்திற்காக தான் கற்ற நுணுக்கங்களை வைத்து ஜல்லிக்கட்டை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை அழகாக காட்டியுள்ளோம்.” என்றார்.

நாயகன் சசிகுமார் பேசும்போது, “ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் இதுபற்றி நாம் விரிவாக பேசமுடியாது. தற்போது ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் நம் தமிழக அரசு சரியான முறையில் மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எப்படியும் நமக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன். அதுமட்டுமல்ல, ஜல்லிக்கட்டை யாராலும் தடுக்க முடியாது. இந்த படம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான படம். மாடுகளில் இப்போதைக்கு எனக்கு பிடித்தது காரி காளைதான். அதேசமயம் படப்பிடிப்பின்போது எந்த ஜல்லிக்கட்டு காளையுடனும் நாம் நெருங்கி பழக முடியாது. காரணம் ஜல்லிக்கட்டு நடக்கும்போது மாடு நமக்கு எதிராக இருக்கும். அது எந்தப்பக்கம் போகும், நம் மீது பாயுமா என்பதெல்லாம் அந்த நொடியில் கூட கணிக்க முடியாது. சில மாடுகள் நம்மைத் தாண்டி சென்றுவிட்டு மீண்டும் தாக்குவது போல் திரும்பி வந்ததும் உண்டு.. அதேசமயம் முறைப்படி அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு காட்சிகளை படமாக்கியதால் இந்த படத்திற்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை.” என்று கூறினார்

தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது, “சில அமைப்புகள், திரையுலகை சேர்ந்த சிலர் ஜல்லிக்கட்டுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அது அவர்களது தனிப்பட்ட கருத்தாக இருக்குமே தவிர, ஒட்டுமொத்த திரையுலகின் கருத்து அல்ல.. ஜல்லிக்கட்டு என்பது நமது பாரம்பரிய நம்பிக்கை. ஜல்லிக்கட்டை யார் எதிர்த்தாலும் அவற்றை உயிராக நினைக்கும் கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். இந்த படத்தை நாங்கள் எடுத்து இருப்பதே அந்த நம்பிக்கையை ஊர்ஜிதப்படுத்த வேண்டும் அதை விட்டுவிடக்கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்கவேண்டும் என்றுதான். எங்களுக்கு ஜல்லிக்கட்டு வேண்டும். அதை இந்த படம் மூலம் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளோம். ஜல்லிக்கட்டு மட்டும்தான் மிருகவதையா, குதிரை பந்தயத்தில் அது இல்லையா, அதற்கு மட்டும் தடை விதிக்காமல் ஏன் ஜல்லிக்கட்டை மட்டுமே குறி வைக்கிறார்கள் என்றால், குதிரைப்பந்தயம் பணக்காரர்களின் விளையாட்டு.. ஜல்லிக்கட்டு ஏழைகளின் விளையாட்டு.. அவ்வளவுதான் இதில் உள்ள அரசியல்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE