‘வதந்தி’ இணைய தொடர் விமர்சனம்
ஒரு கொலை; அந்த கொலை சார்ந்த இடங்கள்; அதனை சுற்றிச் சூழந்த பாத்திரங்கள்; மர்மங்கள்; துப்பறிவதில் உள்ள சிக்கல்கள்; திடுக்கிடும் திருப்பங்கள் எல்லாம் கலந்த க்ரைம் த்ரில்லராக அமேசானில் வெளியாகியிருக்கிறது ‘வதந்தி’ இணையதள தொடர்.
எப்படியிருக்கிறது வதந்தி?..
காற்றாலை இருக்கும் ஒரு அமைதியான சூழலில் ஒரு சினிமா படப்பிடிப்பு நடக்கிறது. கதைப்படி அன்றைய தினம் படத்தின் நாயகி கொலையுண்டு கிடப்பதுபோன்ற காட்சியை படமாக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது. கதாநாயகி போன்ற டம்மியை பார்க்கும் படத்தின் இயக்குனர் அதை வடிவமைத்தவரை அழைத்து தத்ரூபமாக இருக்கிறது என பாராட்டுகிறார். ஆனால் தான் உருவாக்கிய டம்மி இன்னும் ஸ்பாட்டுக்கே கொண்டுவரவில்லை என்கிறார் ஆர்ட் டைரக்டர். அப்படின்னா அங்கே இருப்பது என்ன என்று மறுபடியும் உத்துப் பார்த்தால், அங்கே கொலையாகி கிடப்பது கதாநாயகியேதான் என்பதை அறிந்து அதிர்ச்சி ஆகிறது யூனிட்.
நடிகை கொலையான செய்தி காட்டுத் தீயென பரவ, வழக்கம்போலவே ஊடகங்களில் கொலைக்கான காரணங்கள்.. கலர் கலராய் வட்டமடிக்கிறது. இதுபற்றி படத்தின் இயக்குனரிடம் போலீஸ் விசாரித்துக்கொண்டிருக்கையில் இயக்குனருக்கு ஒரு போன் வருகிறது. எடுத்துப் பேசும் இயக்குனரின் முகத்தில் இப்போது அதீத அதிர்ச்சி. போனில் பேசியது யாருமில்லை நடிகைதான். “நான் ஷூட்டிங்கை விட்டு ஓடிதான் வந்தேன். ஆனால் உயிரோடுதான் இருக்கிறேன்” என்று அவர் சொல்ல, அப்போ கொலை செய்யப்பட்டவர் யார்? ஏன்? என்று அடுத்தடுத்து எழும் கேள்விகளில் கிளம்பும் திடுக் திருப்பங்கள்தான் கதை.
படத்தின் முதல் காட்சியில் தொற்றிக்கொள்ளும் விறுவிறுப்பும் அதிர்ச்சியும் தொடர் முழுக்க பயணித்து நம்மை வியாபித்துக்கொள்கிறது. ஒரு கொலை பின்னணியை வைத்துக்கொண்டு கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் நம்மை இருக்கையில் கட்டிப்போடும் சுறுசுறு திரைக்கதையை செய்திருக்கும் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸின் திறமைக்கு பாராட்டுகள்.
கொலை செய்யப்பட்ட இளம்பெண் வெலோனி கதாபாத்திரத்தில் வரும் சஞ்சனா, கொலையாளியை கண்டுபிடிக்கும் காவல்துறை உதவி ஆய்வாளராக வரும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் தொடர் முழுவதும் அசத்தல் நடிப்பால் துவம்சம் செய்கின்றனர். வஞ்சகமில்லா பிஞ்சு மனது, வசீகரிக்கும் புன்னகை, கண்களால் கைது செய்யும் குறும்புகள் என வெலோனியாகவே வாழ்ந்து பார்வையாளர்களின் மனதில் பட்டா போட்டுக்கொள்ளும் சஞ்சனாவுக்கு சபாஷ்!
தனது பொறுப்பை, கடமையை துஷ்பிரயோகம் செய்யாமல் குற்றவாளியை கண்டுபிடிக்கும் உதவி காவல் ஆய்வாளராக எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பாற்றலுக்கு ‘வதந்தி’ கொளுத்த வேட்டை கொடுத்துள்ளது. மேலதிகாரத்தின் உத்தரவுகளில் கொலையாளியை கோட்டை விட்டுவிடுவோமோ என்று குழம்புவது, அவ்வப்போது மனைவியின் புரிந்துகொள்ளா கோபத்தை நினைத்து தவிப்பது, அப்பாவி இளம்பெண்ணின் அநியாய கொலைக்கு எப்படியாவது நீதி கிடைத்துவிட வேண்டும் என துடிப்பது என காட்சிக்கு காட்சி எஸ்.ஜே.சூர்யா, இதயம் தொடும் நடிப்பால் ஈர்க்கிறார்.
வெலோனியின் தாயாக தங்கும் விடுதி நடத்தும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக லைலாவின் கேரக்டர் அவரது தோற்றத்திற்கும் உடல்மொழிக்கும் கச்சிதம் சேர்க்கிறது. எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக ஸ்மிருதி வெங்கட் ஆஹா.. பிரமாதம். இறந்துபோன வெலோனி மேல் கணவருக்கு காதல் இருப்பதாக சந்தேகித்து சலம்பும் காட்சி ருசிகரம்.
இன்னொரு காவல் உதவி ஆய்வாளராக விவேக் பிரசன்னா.. சீரியஸாக நகரும் கதையில் ஆங்காங்கே சிரிக்க வைப்பது ரிலாக்ஸ். எழுத்தாளராக நாசர், வெலோனியை திருமணம் செய்ய காத்திருக்கும் கேரக்டரில் குமரன் தங்கராஜன், குலபுலி லீலா, அவர்களது மகன்களாக வருபவர்கள் என தொடரில் நடித்திருக்கும் அனைவருமே தங்கள் பங்கை திறம்பட செய்திருக்கிறார்கள்.
சைமன் கே பின்னணி இசை, சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவு, கெவின் ரிச்சர்டின் எடிட்டிங் மூன்றும் இயக்குனருக்கு பலம் சேர்த்திருக்கிறது. ”உண்மை நடக்கும் பொய் பறக்கும்” போன்ற வசனங்கள் பொட்டில் அடித்ததுபோல சிறப்பு சேர்க்கிறது.
ஆபாச வசனங்கள், சிறுமி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படும் காட்சி, எழுத்தாளர் நாசரின் நாவல் வழியாக சொல்லப்படும் வெலோனியின் கற்பனை காதலன் போன்ற காட்சிகள் நெளிவையும் நெருடலையும் தருகிறது. இதுபோன்ற குறைகளை தவிர்த்திருந்தால் ஆண்ட்ரூ லூயிஸின் ‘வதந்தி’ மனதில் இன்னும் ஆழமாக வேரூன்றி இருக்கும்.