‘அருவா சண்ட’ திரை விமர்சனம்
உள்ளங்கையில் உலகம் என்று விஞ்ஞானம் வேகமாக வளர்ந்துவிட்டாலும் சாதி வெறி மட்டும் இன்னும் வெந்து தனியவில்லை. குறிப்பாக பல கிராமங்களில் சாதிய வன்மம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. இதற்கு சவுக்கடி கொடுப்பதுபோன்ற ஒரு திரைக்கதையை தீட்டி இருக்கிறார் இயக்குனர் ஆதிராஜன்.
மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் நாயகன் ராஜா. கபடி விளையாட்டில் சூரப்புலியாக இருக்கும் ராஜாவுக்கு கபடியில் உலகம் மெச்சும் வெற்றியை பெறவேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார். செங்கல் சூளையில் வேலை செய்யும் ராஜாவின் ஏழைத்தாய் சரண்யா பொன்வண்ணனும் மகனின் வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கிறார். இந்த நிலையில் ஊர் தலைவரான ஆடுகளம் நரேனின் மகளான நாயகி மாளவிகா மேனன் ராஜாவுடன் நட்புக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் அது காதலாக மாறுகிறது. ராஜாவின் கபடி லட்சியம் நிறைவேறுகிறதா? காதல் கனவு நனவாகிறதா என்பதே மீதி கதை.
வித்தியாசமான புதிய கதை என்றெல்லாம் சொல்லமுடியாவிட்டாலும் இயக்குனர் அதை கையாண்ட விதம், சாட்டை சுழற்றும் வசனம், சமூக அக்கறை, காதல் ரசம் சொட்டும் காட்சி அமைப்புகள், கபடி போட்டியை படம் பிடித்த விதம் எல்லாம் கலந்த கதம்பம் ‘அருவா சண்டை’க்கு சுவாரஷ்யம் கொடுத்துள்ளது. இதற்காக இயக்குனரை பாராட்டலாம்.
படத்தை தயாரித்து நாயகனாக நடித்துள்ள ராஜா, அனுபவ நடிகர் போலவே நடித்திருக்கிறார் என்றாலும் அவருடைய குரல் மிகப்பெரிய மைனஸ். வெள்ளி விழா நாயகனான மோகனே இரவல் குரலுக்கு இசைந்துகொடுத்து வெற்றிபெற்றவர்தான் என்பதை ராஜா உணர்ந்துகொண்டு அடுத்தடுத்த படங்களில் சரிசெய்துகொள்ளவேண்டும்.
நாயகி மாளவிகா மேனனின் புன்னகை முகம் அழகு. நடிப்பிலும் சோடைபோகாமல் சிறப்பாக செய்திருக்கிறார்.
அம்மா கதாபாத்திரத்தில் மீண்டும் பிரகாசித்திருக்கிறார் சரண்யா பொன்வண்ணன். படத்தின் ஒட்டுமொத்த கனத்தையும் சுமந்து நெகிழ்ச்சி நடிப்பை வழங்கி இருக்கிறார். இதற்காக மீண்டும் அவருக்கு பெரிய விருதுகள் காத்திருக்கிறது. “மத்தவங்களுக்கெல்லாம் கபடி வெறும் பேச்ச.. ஆனா என் மகனுக்கு அதுதான் மூச்சு..” என்று படத்தின் ஆரம்பத்திலேயே அப்ளாஸ் அள்ளுபவர்; க்ளைமாக்ஸில் பேசும் வசனத்தில் கலங்கடிக்கிறார்.
நாயகியின் தாய் மாமனாக வரும் செளந்தர் ராஜா, பொறாமை, வன்மம், சாதி வெறி என முகபாவனைகளில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல இடம் நிச்சயம்! வழக்கம் போல ஆடுகளம் நரேனின் நடிப்பும் சிறப்பு.
பாடல் காட்சி, சண்டை காட்சி, கபடி போட்டி என இடத்திற்கு ஏற்ற லைட்டிங் செய்து நேர்த்தியான ஒளிப்பதிவை தந்திருக்கும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பாண்டிக்கு ஒரு சபாஷ்! தரணின் இசையும் ஈர்ப்பு. ஆதிராஜனின் வசனம் படம் பார்த்துவிட்டு வந்த பிறகும் திரும்ப திரும்ப நினைவுகொள்ள செய்கிறது.
மொத்தத்தில் ‘அருவா சண்ட’ செம சார்ப்.