‘லாக்’ படவிழாவில் ஓபன் ஆன முருங்கைக்காய் மேட்டர்
பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் ,சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லாக்’.
‘அட்டு’ படத்தின் மூலம் வடசென்னை வாழ்வியலைப்பதிவு செய்த ரத்தன் லிங்கா இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இயக்குநர்கள் கே. பாக்யராஜ் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
விழாவில் படத்தை இயக்கியிருக்கும் ரத்தன் லிங்கா பேசியதாவது:-
“இந்தப் படம் பல போராட்டங்களுக்குப் பிறகு உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு எங்களது பக்க பலமாக இருந்த சக்திவேல் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் மற்றும் படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் இருவரும் திடீரென காலமானது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவர்களுடைய கனவெல்லாம் இந்தப் படத்தின் மீதுதான் இருந்தது .அந்த இருவருடைய ஆத்மாக்களின் ஆசீர்வாதத்தால் இந்தப் படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அவர்களது விருப்பம் இதுவாகத்தான் இருக்கும்.எங்களுடன் இணைந்து ராஜ்குமார் வேலுச்சாமி அவர்கள் பெரும் பக்கபலமாக இருந்து உதவினார்.
அதுமட்டுமல்லாமல் எங்களது சிரமங்களையெல்லாம் பார்த்துக் கொண்டு இது மாதிரி புதியதாக வருபவர்கள் சிரமப்படக்கூடாது அவர்களுக்கு நாம் ஒரு தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.அதன்படி அண்மையில் நாங்கள் ஒரு ஸ்டுடியோ தொடங்கியிருக்கிறோம். அது தான் பாம்பூ ட்ரீஸ் ஸ்டுடியோ .அது முழுக்க முழுக்க வளரும் கலைஞர்களை உயர்த்தி விடுவதற்காகவும், அவர்களுக்கு ஏற்ற தொழில்நுட்பக் கருவி வசதிகள் செய்து கொடுப்பதற்காகவும் என்ற நோக்கத்தில் தொடங்கி இருக்கிறோம்” என்றார்.
படத்தயாரிப்பில் இணைந்துள்ள அல்முரா நிறுவனத்தின் தலைவர் ராஜ்குமார் வேலுச்சாமி பேசியதாவது:-
“நான் ஈராக், துபாய் என்று பரபரப்பாக வியாபாரம் செய்து கொண்டிருக்கிறேன். நான் முதலில் ‘அட்டு’ படத்தைப் பார்த்தபோது அது எனக்கு மிகவும் பிடித்தது. யார் இந்தப் படத்தை இயக்கியவர் என்று விவரங்களைத் தேடிய போது ரத்தன்லிங்கா அறிமுகமானார். ஆனால் அதற்குப் பிறகு ஒரு படம் கூட செய்யவில்லை என்று அறிந்தேன். பிறகு பேசி நண்பர்கள் ஆனோம். திறமை இருந்தாலும் அங்கீகாரம் இல்லாமல் பலரும் சினிமாவில் சிரமப்படுகிறார்கள் என்று அவரை வைத்து நான் அறிந்து கொண்டேன். இப்படி வருங்காலத்தில் இளைஞர்கள் திறமையோடு சிரமப்படக்கூடாது என்று ஸ்டுடியோ ஒன்று நாங்கள் ஆரம்பித்துள்ளோம் . புதிய திறமைசாலிகளுக்கு வாய்ப்புகள் அளிக்கும் தளமாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் இதைத் தொடங்கி உள்ளோம். இவர் அட்டு படத்திற்குப் பிறகு இந்த இரண்டாவது படம் எடுப்பதற்குள் இடையில் ஐந்தாண்டுகள் ஓடி விட்டன. இனி ஆண்டிற்கு ஐந்து படங்கள் இவர் இயக்கும் அளவிற்கு அந்த வசதிகள் இவருக்குப் பக்கபலமாக இருக்கும்” என்றார்.
படத்தின் இசையமைப்பாளர் விக்ரம் செல்வா பேசியதாவது:-
“கோவிட் காலத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் படத்திற்கு, கோவிட்டால் சற்று தேக்க நிலை ஏற்பட்டது அப்போது இந்தப் படத்திற்காகப் பணியாற்றும் போது இரவு பகலாக இயக்குநர் பணியாற்றுவார். பின்னணி இசை சேர்ப்புக்கு ஐந்து மணிக்கு வருவீர்களா என்று கேட்டேன். அவர் மாலை 5 மணியா? என்றார். அதிகாலை ஐந்து மணி என்றேன். ஆனால் இரவு முழுக்க படப்பிடிப்பு நடத்தி தூங்காமல் அப்படியே காலை 5 மணிக்கு வந்து விடுவார். இவருடைய திரைப்படத்தின் உருவாக்கம் அசல் தன்மையோடு இருக்கும், அதுதான் இவரது பாணியாக இருக்கிறது. இந்தப் படத்தில் கடைசியில் 10 -15 நிமிடங்கள் எந்தவித வசனமும் இல்லாமல் காட்சிகள் நகரும். அந்த அளவிற்கு காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுப்பவர் இயக்குநர் ரத்தன் லிங்கா” என்றார்.
இந்திய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் முத்தரசன் பேசியதாவது:-
“இயக்குநர் ரத்தன் லிங்கா சாதாரணமாக வந்துவிடவில்லை. குறும்படங்கள் எடுத்துள்ளார். திரைப்படம் இயக்கியுள்ளார். திரைப்படம் தயாரித்துள்ளார்.இப்போது ஸ்டுடியோ தொடங்கி உள்ளார்.
இப்படிப் படிப்படியாக முயற்சிகள் மூலம் வளர்ந்து அவர் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.
திரைப்படம் என்பது மக்களிடம் சரியான புரிதலை ஏற்படுத்துவது மட்டுமல்ல விழிப்புணர்வும் ஏற்படுத்தக் கூடியது. விடுதலைப் போராட்ட காலத்திலும் சரி விடுதலைக்குப் பின்பும் சரி மாற்றங்களை மக்களிடம் ஏற்படுத்தியதில் அதன் பங்கு உண்டு.
இங்கு வந்திருக்கும் பாக்யராஜ் அவர்களுக்கு நானும் ரசிகன்தான். ஒரு முறை எங்கள் வீட்டில் இரவு மனைவி சாப்பாடு பரிமாறினார். அப்போது அருகில் இருந்த கொழுந்தியாள் எனக்கு மனைவி முருங்கைக்காய் துண்டுகளைப் போட்ட போது “போடு போடு நல்லா போடு” என்று கூறினார். எனக்கு அப்போது புரியவில்லை. பிறகு ‘முந்தானை முடிச்சு ‘படம் பார்த்த பிறகுதான் அன்று நிறைய போடு என்று சொன்னதன் அர்த்தம் புரிந்தது முருங்கைக்காய்க்குள் ரகசியம் அப்படி இருக்கிறது என்று எனக்கு அப்போது தெரியாது. புதிதாக ஆரம்பித்துள்ள ஸ்டுடியோவில் ஆண்டுக்கு ஐந்து படம் செய்ப இருப்பதாகச் சொன்னார்கள். அதில் வியப்பொன்றும் இல்லை. புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறோம் என்றதுதான் பெரிய மகிழ்ச்சி.இந்தப் பட முயற்சி வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசியதாவது:-
“இது காவல்துறை விழாபோல் இருக்கிறது. அவ்வளவு காவல்துறையினர் கலந்து கொண்டுள்ளார்கள். காவல்துறையினருக்கும் திரைப்படத்துறைக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. ஒரு ராசியும் உண்டு. ஏனென்றால் காக்கி சட்டை போட்டு ஒரு பெரிய வெற்றிப் படம் கொடுத்த பிறகு தான் அந்த நடிகர்கள் நட்சத்திரங்களாக உயர்ந்து அவர்களுடைய மதிப்பு கூடியிருக்கிறது. பாக்யராஜ் எவ்வளவு நல்ல கருத்துக்களை நல்ல கதைகளை சொல்லியிருக்கிறார். அவர் செய்த ஒரே தவறு முருங்கைக்காய் மேட்டரைப் படத்தில் வைத்தது தான். இந்த விழாவுக்கு வந்த பலரும் அதைப் பற்றி பேசும் போது அவர் செய்த பெரிய தவறு இது என்று தோன்றுகிறது.
ஒரு படத்தில் இடைவேளையில் வருவதை இன்டர்வெல் பிளாக் என்பார்கள்.இன்டர்வெல் லாக் என்பார்கள். சாதாரணமாக இருக்கிறது என்றால் இன்டர்வெல் பிளாக். அதில் ஒரு முடிச்சு போட்டுப் பிறகு அவிழ்த்து விடுவது தான் லாக். பாக்யராஜ் சார் அவர்களைத் திரைக்கதை மன்னன் என்பதை விட இடைவேளை மன்னன் என்று கூறலாம். ஏனென்றால் அவரது படங்களில் இடைவேளையில் அப்படி ஒரு முடிச்சு போட்டு விடுவார்.அந்த முடிச்சை சரியாக அவிழ்த்தால் அந்த படம் வெற்றிப் படம். பெண்களுக்குப் பெண்களே தான் பாதுகாப்பு என்று இந்தப் படத்தில் கூறி இருக்கிறார். இந்த படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசியதாவது:-
“படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்கா பேசும் போது பல்வேறு சிரமங்கள் இடைஞ்சல்களைக் சந்தித்துதான் இந்தப் படம் உருவானது என்றார். நல்லது நடக்கும் போது இது மாதிரி இடையூறுகள் வந்து கொண்டுதான் இருக்கும். அதையும் தாண்டித் தான் வர வேண்டும். எவ்வளவு முயன்றாலும் வரவேண்டிய இடையூறுகள் வந்தே தீரும். எனக்கு இப்போது ஒரு கதை ஞாபகம் வருகிறது. மூன்று திருடர்கள் தினமும் விநாயகரை வேண்டி விட்டு திருடப்போவார்கள் ஒன்றும் கிடைக்காவிட்டால் வந்து சண்டை போடுவார்கள். அப்படிப் பல நாள் எதுவும் கிடைக்கவில்லை. அன்று வேண்டும் போது இன்று மட்டும் எதுவும் கிடைக்காவிட்டால் எங்களுக்கு கெட்ட கோபம் வரும் என்று எச்சரித்துவிட்டு திருடச் சென்றார்கள் .அன்றும் ஒன்றுமே கிடைக்காது போகவே, ஒவ்வொருவராக விநாயகர் கோவிலுக்குள் கல் வீசினார்கள். ஆனால் மூன்றாவது திருடன் மட்டும் கொஞ்சம் தயங்கினான். விநாயகர் தண்டித்து விட்டால் என்ன செய்வது? என்று பயந்து அந்த கல்லைத் தூக்கி கோயிலுக்கு வெளியே உயரமாக இருந்த மரத்தின் மீது வீசினான் .அதே நேரத்தில் கண்வலித்தது. என்ன என்று பார்த்தால் எதிரே விநாயகர் நின்றார், தலையில் ரத்தத்தோடு. நான் எதுவுமே செய்யவில்லையே நான் கல்லை கோயிலைத்தாண்டித் தானே வீசினேன்? என்றான் எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை கொடுத்தாய் விநாயகா ?என்றான். விநாயகர் நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நான் தான் மரத்தின் மீது ஏறி ஒளிந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன் என்றார். அதுபோல இடையூறுகள் வருவது என்றால் எப்படியென்றாலும் வந்தே தீரும்.
இத்தனைக் காலம் கடந்தும் எனது முருங்கைக்காய் கதையை எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன பெரிய ரகசியம்? என்று கேட்டால் . எந்த ஒரு விசேஷ காரணமுமில்லை. எனது பாட்டி எங்களுக்கு உணவு பரிமாறும் போது எனக்கு முருங்கக்காய் துண்டுகளை குறைவாகத்தான் போடுவார். உடன் சாப்பிடும் மாமாவுக்கு நிறைய போடுவார். இன்னும் ரெண்டு பீஸ் போடச் சொல்லி நான் கேட்பேன். இது உனக்குப் போதும். இரண்டுக்குமேல் வேண்டாம் இது போதும் என்பார் பாட்டி. எப்போதும் வேண்டாம் என்பதில் தான் மனம் சுற்றிச் சுற்றி வரும். எங்கள் ஊரில் ஒரு பெரியவர் சின்னப் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருப்பார். அவரிடம் இந்தச் சந்தேகத்தைக் கேட்டபோதுதான் அதன் அர்த்தம் புரிந்தது. அதுவரை விளையாட்டாகத் தான் என் படத்தில் வைத்தேன். அப்போது அதைப்பற்றி பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் இவ்வளவு காலம் கடந்தும் முருங்கைக்காய் கதை பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது அது ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சி தருகிறது.என்றார்.
‘லாக்’ படக் குழுவினர் சார்பில் இந்த விழாவில் கேக் வெட்டி இயக்குநர் பாக்யராஜுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் நடிகர் விஜய் சூரிய பாலாஜி, மதன் ,படத்தொகுப்பாளர் மகேந்திரன் கணேசன், காவல்துறை உயர் அதிகாரியான ராஜகோபால், தொழிலதிபர்கள் ரஜினிகாந்த் சண்முகம் ,ரஞ்சித் கருணாகரன், ஜூலியஸ் கிறிஸ்டோபர்,உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரஜினிகாந்த் சண்முகம், சுண்டாட்டம் பட இயக்குநர் பிரம்மா மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.