திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் பொங்கல் விழா
தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா நேற்று மாலை சென்னையில் உள்ள திரையிசைக் கலைஞர்கள் சங்க அலுவலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சங்கத்தின் உறுப்பினர்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கலந்து கொண்ட இந்த விழாவில் ‘மக்கள் இயக்குநர்’ சீனு ராமசாமி, நடன இயக்குநர் ஸ்ரீதர், திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தினா, திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோனட் , நடிகர் ‘டைகர் கார்டன்’ தங்கதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
பத்திரிகையாளர் விஜய் ஆனந்த் வரவேற்புரை வழங்கினார். தலைவர் கவிதா, சங்கத்தின் தொடர்ச்சியான செயல்பாடுகளை சுருக்கமாக விவரித்து, சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது, “உங்களையெல்லாம் பார்த்து பொங்கல் வாழ்த்து சொல்ல வேண்டும்; பார்வையில் நன்றி சொல்ல வேண்டும் உட்பட பல காரணங்களுக்காகத்தான் நான் இங்கு வந்தேன். உங்களையெல்லாம் பார்த்ததில் சந்தோஷம். நான் கவிதை புத்தகம் ஒன்று வெளியிட்டிருக்கிறேன். பத்திரிகையாளர்கள் என்றாலே அவர்கள் படைப்பாளிகள்தான். படைப்புக்கு உதவி செய்பவர்களும் படைப்பாளிகள்தான். இன்றைய படைப்பாளிகள் நாளைய பத்திரிகையாளர்கள். இப்படி படைப்பாளிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்குமான உறவு தாய்க்கும் பிள்ளைக்குமான உறவு போன்றது. அப்படியான பத்திரிகையாளர்களில் மூத்த பத்திரிகையாளர்களுக்கு என்னுடைய புத்தகத்தை தர விரும்புகிறேன்” என்றார்.
அதையடுத்து, அவர் எழுதிய ‘புகார் பெட்டியில் படுத்துறங்கும் பூனை’ என்ற கவிதை தொகுப்பை மூத்த பத்திரிகையாளர்களுக்கு வழங்கி நூல் அறிமுகம் செய்தார். நூலை காலஞ்சென்ற கவிஞர் நா.முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்திருந்த கவிதையை தலைவர் கவிதா வாசித்தார்.
விழாவில் இசையமைப்பாளர் தினா பேசும்போது, ”பத்திரிகையாளர்கள் சினிமா கலைஞர்களைப் பற்றி எழுதினதாலதான் சினிமா கலைஞர்கள் அவங்களால் கோடி கோடியா சம்பாதிக்கிறாங்க. என்னையும் பத்திரிகையாளர்கள்தான் வளர்த்து விட்டாங்க. நான் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்துல மன்மத ராசா பாட்டு வெளியான நேரத்துல என்னைப் பத்தி பத்திரிகையாளர் சபீதா ஜோசப் எழுதின ரைட்டப்தான் என்னை பெருசா அடையாளம் காட்டுச்சு. எல்லாரையும் கோடீஸ்வரங்களாக்கியவர்கள். அதெல்லாம் சரி செய்ய, எப்படி அரசாங்கத்தோட நல வாரியத்துல உறுப்பினரா இருக்கிற பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்குதோ, அதே மாதிரி உங்களுக்கும் அரசாங்கத்தோட நலத்திட்டங்கள் கிடைக்க இந்த சங்கத்தின் தலைவி கவிதா முயற்சி எடுக்க வேண்டும்” என்றார்.
நடன இயக்குநர் ஸ்ரீதர் உறுப்பினர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து பேசியபோது, ”இன்றைக்கு நடிகர், நடிகைகள், மற்ற திரைப்பட கலைஞர்கள் அடிமேல் அடிவெச்சு வளர்ந்து ஜொலிக்கிறாங்கன்னா அதுக்கு பத்திரிகையாளர்களான நீங்கதான் காரணம். டான்ஸ் மாஸ்டரா நான் பேர் வாங்கி இருக்கேன்னா அதுக்கும் பத்திரிகையாளர்கள்தான் காரணம். தமிழ்நாட்டுக்காக சில நல்ல விஷயங்கள் செய்ய ஐடியா வெச்சிருக்கோம். தொடர்ந்து உங்க சப்போர்ட் வேண்டும்” என்றார்.
‘டைகர் கார்டன்’ தங்கதுரை பேசும்போது ”பொங்கல் பண்டிகை நேரத்துல உங்களையெல்லாம் சந்திக்கிறது மகிழ்ச்சியா இருக்கு. இப்போ ரிலீஸாகியிருக்கிற ‘துணிவு’ படத்துல ஒரு சின்ன முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்கேன். படம் நல்லா போய்க்கிட்டிருக்கு. எல்லாத்துக்கும் உங்க அன்பும் ஆதரவுதான் காரணம். தொடர்ந்து நிறைய படங்கள்ல நடிச்சிக்கிட்டிருக்கேன். உங்க ஆதரவு தேவை. நீங்கதான் எங்களை உயர்த்தணும்” என்றார். பேச்சினிடையே சங்கத்தின் உறுப்பினர்கள் ரசிப்பதற்காக சில ஜோக்குகளை சொன்ன தங்கதுரை, ‘குளிக்க முடியாத ஆறு எது?’ ‘நடக்கவே முடியாத பூச்சி எது?’ ‘மரமில்லாத காடு எது?” என்றெல்லாம் கேட்டு பதில் சொல்ல வைத்து விழாவை கலகலப்பாக்கினார்.
விழாவில், சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை அணிவிக்கப்பட்டு, நினைவுப் பரிசாக திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. விழாவில் ‘கலைமாமணி’ தேவிமணி, ராதா பாண்டியன் உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை சிறப்பு விருந்தினர்கள் வழங்கி கெளரவித்தனர்.
நிகழ்வை பத்திரிகையாளர் ஷாலினி தொகுத்து வழங்கினார்.’நாற்காலி செய்தி’ இதழின் ஆசிரியர் கார்த்தி நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவு பெற்றது. அனைவருக்கும் சங்கத்தின் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.