நிகழ்வுகள்

அஜித், விஜய் படங்களால் என்ன லாபம்? ‘நெடுமி’ விழாவில் பரபரப்பு

பனை மரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘நெடுமி’. ஹரிஸ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ள இப்படத்தை நந்தா லட்சுமணன் இயக்கியுள்ளார்.

படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பேரரசு, பத்திரிகையாளர்கள் பயில்வான் ரங்கநாதன், முக்தார் அகமது கலந்து கொண்டனர்.

விழாவில் படத்தின் எடிட்டர் ராம்சரண் பேசும்போது ‘ “இந்தப் படம் புதுமையான கதையாக இருக்கும். யாருடைய வாழ்க்கையிலும் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும். குறிப்பாகப் பனையேறிகள் அனைவரும் தொடர்பு படுத்திக் கொள்ளும்படி இருக்கும்.இந்த மாதிரி இதற்கு முன்பு படங்கள் வந்ததில்லை” என்றார்.

ஒளிப்பதிவாளர் விஸ்வாமதி பேசும்போது,”தினசரி நாம் வாழ்க்கையில் சுலபமாகத் தாண்டி போகிற இந்தப் பனை மரத்தின் அருமை இதுவரை சொல்லப்படவில்லை. எப்படி இத்தனைக் காலம் தவறவிட்டார்கள் என்று தெரியவில்லை என்று இந்தப் படத்தை பார்க்கும் போது தோன்றியது” என்றார்.

நடிகர் ஏ. ஆர். ராஜேஷ் பேசும்போது,”இந்தப் பட முயற்சி பற்றித் தயாரிப்பாளர் பேசும்போது முதலில் அவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?இந்தப் படத்தின் வரவு எவ்வளவு? செலவு எவ்வளவு? என்றெல்லாம் அவர் கேட்கவில்லை. இந்தப் படத்தில் எனக்கு எவ்வளவு நஷ்டம் ஆகும் ? என்பதுதான் அவர் கேட்ட முதல் கேள்வி. பிறகு நஷ்டம் எது இருந்தாலும் பரவாயில்லை தைரியமாக இறங்குங்கள் என்று கூறினார். இப்படி ஒரு தயாரிப்பாளர் யாருக்கும் இந்த உலகத்தில் கிடைக்க மாட்டார்கள்.நாங்கள் சில குறும்படங்கள், இசை ஆல்பங்கள் மட்டுமே எடுத்திருந்தோம் .வேறு எந்தவிதமான சினிமா சம்பந்தமான அனுபவமும் இல்லை.அப்படிப்பட்ட எங்களை நம்பி இந்தப் படத்தை எடுத்துள்ளார். இந்தப் படத்திற்காக நான் நடித்த 21 நாட்களும் செருப்பு இல்லாமல் நடந்து பழகிக் கொண்டேன். அந்த அளவிற்கு அந்த பாத்திரம் எனக்குள் பதிந்து இருந்தது.எனக்குத் தொப்பை வரவேண்டும் என்பதற்காக காலை,மதியம் பழைய சோறு, இரவு மட்டும் தான் வேறு உணவு என்று சாப்பிட்டேன். இந்தப் படம் பலரையும் யோசிக்க வைக்கும் ” என்றார்.

இசையமைப்பாளர் ஜாஸ் ஜே.பி. பேசும்போது,” இதை ஒரு குழு முயற்சியாக எடுத்திருக்கிறார்கள். குறும்படம் ,இசை ஆல்பங்கள் என்று அவர்கள் முதலில் செய்திருக்கிறார்கள். படம் எடுப்பார்கள் என்று நான் முதலில் நம்பவில்லை. பிறகு போகப் போக ஈடுபாடு ஏற்பட்டது .இப்போது எனக்கு திருப்தியாக இருக்கிறது” என்றார்.

கதாநாயகன் பிரதீப் செல்வராஜ் பேசும்போது, “முதலில் கதை சொல்லும் போது நான் நடிப்பேன் என்று நினைக்கவில்லை.நீதான் நடிக்க வேண்டும் என்றார்கள். ஏனென்றால் இந்தப் படத்தில் நடிக்கும் கதாநாயகன் பனைமரம் ஏற வேண்டும். என்னால் முடியாது என்று தோன்றியது. ஆனால் 10 நாட்கள் எனக்கு அதற்காகப் பயிற்சி கொடுத்தார்கள். மரமெல்லாம் ஏறிப் பயிற்சி எடுத்துக் கொண்டேன். இன்று படம் எடுப்பது சுலபம். வெளியிடுவது தான் சிரமமாக இருக்கிறது. இந்தச் சினிமா ஒரு கடல் போன்றது. இங்கே சினிமாவில் பல திமிங்கிலங்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. நாங்கள் இப்போதுதான் மீன் தொட்டியில் இருந்து சினிமாவில் குதித்துள்ளோம்.நாங்களும் திமிங்கிலமாக வளர்வோம்.” என்றார்.

கதாநாயகி அபிநயா பேசும்போது,”வாழ்க்கையில் பார்த்த விஷயங்களை அழகாகப் படமாக எடுத்திருக்கிறார்கள். அனைவரும் புது முகங்கள் தான். என்னை முதலில் ஆறோ ஏரியோ தெரியவில்லை.ஒரு நீர் நிலையில் இறக்கி விட்டதும் பயந்தேன்.ஏனென்றால் எனக்கு நீச்சல் தெரியாது. ஆனால் அவர்கள் என்னை நம்பி ஊக்கப்படுத்தினார்கள். நான் இரண்டு மாத கைக் குழந்தையுடன் இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன். ஒரு கதாநாயகியாக இதைச் சொல்ல எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஏனென்றால் குடும்ப ஆதரவு எனக்கு அந்தளவுக்கு இருக்கிறது” என்றார்.

நடிகர் ராஜசிம்மன் பேசும்போது, “இயக்குநர் நந்தா எனக்குப் பல்லாண்டுகளாகப் பழக்கம் .எனக்கு ஒரு பாசிட்டிவான வேடத்தை கொடுத்துள்ளார். ஒரு நாள் தான் படப்பிடிப்பு. போய் நடித்த போது திருப்தியாக இருந்தது . பனைமரத்தைப் பாராட்டிப் பேசுகிற மாதிரி ஒரு காட்சி. நன்றாக வந்திருப்பதாக நம்புகிறேன்.பனையேறிகள் அனைவரும் இன்று சிறப்பான வாழ்க்கையில் இல்லை. சிரமப்பட்டுத் தான் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது” என்றார்.

படத்தின் இயக்குநர் நந்தா லட்சுமணன் பேசும்போது,”இங்கே இருப்பவர்கள் தனித்தனி பெயர்களைக் கொண்டு தனித்தனி ஆட்களாகத் தெரிந்தாலும் நாங்கள் படத்தில் பணியாற்றும் போது ஒன்றாகத் தான் இருந்தோம். அவரவருக்கு என்று வேலைகள் இல்லாமல் அனைத்து வேலைகளையும் அனைவரும் செய்தோம்.ஒருவரிடம் திறமை இருக்கலாம் அந்த திறமையை அறிமுகப்படுத்தி மேலே உயர்த்துவதற்கு நல்ல நட்பு தேவை. அப்படி எனக்கு அமைந்த நண்பன் தான் டி.வி.வசந்தன். அந்த நண்பன் இல்லாவிட்டால் நான் இங்கு வந்து இருக்க முடியாது.அவன்தான் இந்தப் படத்தின் கலை இயக்குநராகவும் மற்றும் பல வேலைகளையும் பார்த்துக் கொண்டான். அதேபோல எனக்கு என் குடும்பமும் உறவினர்களும் மிகவும் ஆதரவாக இருந்தனர்.கல்லூரி முடித்து 2017 முதல் என்னால் குடும்பத்திற்கு எந்த வருமானமும் இல்லாத போதும் என்னை நம்பி அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். குறும்படங்கள் ஆல்பங்கள் என்று எடுத்து சினிமா பற்றி எதுவும் தெரியாத எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்த எனது மாமா தயாரிப்பாளர் வேல்முருகனுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தான் அவர் சொல்வார். அந்த ஊக்கம் அனைவருக்கும் கிடைக்காது.அதேபோல் பனைமரம் சார்ந்த தகவல்களை அளித்த கவிதா காந்தி அவர்களுக்கும் நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் வேல்முருகன் பேசும்போது,”இதில் ஏதோ நான் ரிஸ்க் எடுத்துப் படம் எடுத்து இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இயக்குநர் தான் பெரியதாக ரிஸ்க் எடுத்துள்ளார். முதல் படம் வெற்றிப் படம் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது ஒரு சவாலான படம். இந்தப் படத்தை அவர் தனது முதல் படமாக எடுத்திருக்கிறார் என்றால் அது தான் பெரிய ரிஸ்க்.
இந்தப் படம் நாம் மறந்துவிட்ட பல விஷயங்களைப் பேசுகிறது . இதை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.

ஆக்சன் ரியாக்சன் நிறுவனத்தின் சார்பில் படத்தை வெளியிடும் ஜெனிஸ் பேசும்போது,”பனை மரம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குச் சொந்தமான ஒன்றல்ல. ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்குச் சொந்தமானது.பனையின் நிலை இன்று எப்படி இருக்கிறது என்று இந்தப் படத்தைப் பார்த்தால் தெரியும். சின்ன படம் என்றாலும் நடிப்பாலும் சொல்லப்படும் விஷயத்தாலும் இந்தப் படம் உயர்ந்து தரமான படமாக இருக்கிறது” என்றார்.

டி3 படத்தின் இயக்குநர் பாலாஜி பேசும்போது,” சினிமாவில் நிறைய அவமானங்களைச் சந்தித்து தான் மேலே வர வேண்டும்.சினிமாவில் யாரிடம் ஏமாறக்கூடாது என்று யாராவது விளக்கி வீடியோ போட்டால் நன்றாக இருக்கும். ஏனென்றால் சினிமாவில் ஏமாற்றுபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் .அவர்களை அடையாளம் காட்ட வேண்டும்” என்றார்.

பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசும்போது, ” இப்படம் பனையேறிகளின் சிரமங்களைச் சொல்வதாகக் கருதுகிறேன். ஆனால் இன்று பனையேறிகள் சிரமப்படவில்லை. மிகவும் வசதியாக இருக்கிறார்கள். நானும் ஒரு பனையேறி தான். அதைச் சொல்வதில் எனக்கு ஒன்றும் தயக்கம் இல்லை. பெருமையாகவே சொல்கிறேன்.

இங்கே பனைத் தொழில் வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணனை அழைத்து வந்திருக்கலாம். பனைமரம் மட்டும் தான் தண்ணீர் இல்லாக் காட்டில் கூட விளைந்து பயன் தருவதாகும்.
பனையேறிகள் என்று சொல்லப்படுபவர்கள் இன்று நன்றாக இருக்கிறார்கள். எவரும் கஷ்டப்படவில்லை .இன்று தமிழ்நாட்டில் 17 எம் எல் ஏக்கள், இரண்டு அமைச்சர்கள் பனையேறிகள்தான். அந்த சமுதாயத்தில் இருந்து 27 ஐஏஎஸ்.அதிகாரிகளும் 30 ஐபிஎஸ் அதிகாரிகளும் வந்துள்ளனர் .எவரும் வறுமையில் வாழவில்லை. இந்த சமுதாய மக்கள் யாரையும் ஏமாற்ற மாட்டார்கள். யாரிடமும் ஏமாறவும் மாட்டார்கள்.

பத்திரிகையாளர் முக்தார் அகமது பேசும்போது,”விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் இந்தப் படவிழாவில் ஒரு அரசியல்வாதி கூட இல்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நாங்களும் விவசாயிகள் தான், நாங்களும் தமிழர்கள் தான், நாங்களும் தமிழ்க் கலாச்சாரம் கடைப்பிடிப்பவர்கள் தான் என்றெல்லாம் அவர்கள் சொல்வார்கள். ஆனால் அவர்கள் சொல்வது ஒன்று, செயலில் ஒன்று என்றுதான் இருப்பார்கள். திருக்குறளைப் போலவே விவசாயிகளையும் செல்வாதிகள் வாக்கு அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

நான் என்றும் சொல்வேன் அரசியல்வாதிகளை நம்பாதீர்கள் .ஆண்ட கட்சியையும் ஆளுகிற கட்சியையும் கூட நம்பலாம். ஆனால் தனியே நிற்கிறோம் என்று சொல்கிறார்களே அவர்களை நம்பவே நம்பாதீர்கள். ஏனென்றால் தனியாக இருப்பவர்கள் ரகசிய உடன்பாடு செய்து கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள்..தனித்து என்று எவரும் இல்லை அவர்கள் ரகசிய கூட்டணியில் உள்ளார்கள்.அவர்களை நம்பாதீர்கள். பொங்கல் சமயத்தில் இரண்டு படங்கள் வந்தன .இவ்வளவு வசூல் இவ்வளவு வெற்றி என்று பேசிக்கொள்கிறார்கள். அந்தப் படங்களால் தமிழ் மக்களுக்கு என்ன லாபம்? என்ன நல்ல கருத்து பேசி இருக்கிறது? அந்தப் படங்கள் யார் கண்ணீரை துடைத்து இருக்கின்றன? இந்தப் படம் விவசாயிகளின் வாழ்க்கை பற்றிச் சொல்வதால் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசியதாவது:-

“நான் பொங்கல் விழாவுக்கு ஊருக்குச் சென்றிருந்தேன் தாமதமாக வரலாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் இது மாதிரி படங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்தப் பட விழாவிற்காக முன்னதாகவே வந்திருக்கிறேன். பனை மரத்திற்குத் தமிழ்நாட்டில் பல சிறப்புகள் உண்டு. பிற மரங்களுக்கு இல்லாத சிறப்புகள் பனை மரத்திற்குண்டு.பனை மரத்தில் தான் ஆண், பெண் என்று இரு வகைகள் உள்ளன. மற்றதெல்லாம் நீரை உறிஞ்சி தான் வாழும். ஆனால் நீரே இல்லாத இடத்தில் கூட பனைமரம் தானாக வளர்ந்து பலன் தரும். பனை மரத்தின் எல்லா பாகங்களும் பயன்படும். பனை ஓலை, மரம், பழம், கருப்பட்டி, நுங்கு, கள், பதநீர் என்று எத்தனை பயன்கள்! இப்படிப்பட்ட பனை மரத்தின் சிறப்புகளைப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகி இருப்பது மகிழ்ச்சி.

கள் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு கிடையாது .சிறிய போதை தரும் அவ்வளவுதான் உடலைக் கெடுக்காது.அப்படி இருந்தும் கள்ளுக்கடைகளை ஊருக்கு ஒதுக்குப் புறமாக அந்தக்காலத்தில் வைத்தார்கள். ஆனால் இப்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் வந்து விட்டன. என்னைக் கேட்டால் டாஸ்மாக்கில் கள்ளை விற்கலாம். அதற்கு ஒரு விலைய வைத்துக் கொள்ளுங்கள் உடலை கெடுக்கும் மதுவை விட ஊட்டச்சத்து நிறைந்த கள் எவ்வளவோ மேல்.கள்ளை டாஸ்மாக் கடையில் விற்க வைத்து அதை நம்பி இருக்கும் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம். ” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE