கந்துவட்டி கொடுமை : ‘எறும்பு’ பட விழாவில் கதறிய எம்.எஸ்.பாஸ்கர்
இயக்குநர் சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘எறும்பு’. இதில் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எஸ். காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் எளிய மக்களின் வாழ்வியலை முன்னிறுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மன்ட்ரூ ஜி வி எஸ் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சுரேஷ் குணசேகரன் தயாரித்திருக்கிறார்.
படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் இசையமைப்பாளர் அருண்ராஜ் பேசியதாவது:-
“இயக்குநர் சுரேஷ் படமாக்கிய காட்சிகளை எமக்கு காண்பித்தார். பிடித்திருந்தால் இசையமைக்கவும் என கேட்டுக்கொண்டார். காட்சிகளை பார்த்த அடுத்த நிமிடத்திலேயே இப்படத்திற்கு இசையமைக்கலாம் என தீர்மானித்தேன். காட்சிகளும், சொல்ல வந்த விசயமும் தனித்துவமானதாக இருந்ததால், இசையமைக்க ஒப்பு கொண்டேன். இது சிறுவர்களுக்கான படம் மட்டுமில்லை மண் மணம் மாறாத படைப்பும்கூட. இயக்குநரும், தயாரிப்பாளருமான சுரேசை நான் தன்னம்பிக்கையின் அடையாளமாகவே பார்க்கிறேன். தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என அனைவரும் தங்களதிறமையை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்ததால் பின்னணி இசையை ரசித்து ரசித்து அமைத்தேன்.
இந்த திரைப்படத்தை மேலோட்டமாக பார்த்தால் கிராமிய படமாக இருக்கும். ஆனால் உள்ளார்ந்து பார்த்தால் இது ஒரு உலக அளவிலான திரைப்படம். இதற்காகவே இப்படத்திற்கான இசையை சர்வதேச தரத்தில்தான் அணுகி இருக்கிறேன். ஈரானிய ஐரோப்பிய திரைப்படங்களைபோல் இப்படத்தின் பின்னணி இசை அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக இணையதளம் மூலம் பிரத்தியேக இசைக் கலைஞரை தேடி கண்டறிந்து அவர்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
குழந்தை நட்சத்திரம் சக்தி ரித்விக் பேசியதாவது :-
“இந்தப் படத்தில் கிராமத்தில் இயல்பாக இருக்கும் சிறுவர்கள். கஷ்டமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இவர்களின் ஒரு மோதிரம் காணாமல் போய்விடுகிறது. அந்த மோதிரத்தை வாங்க அக்கா- தம்பி இருவரும் எப்படி கஷ்டப்பட்டார்கள்.. அவர்கள் வாங்கினார்களா? இல்லையா? என்பதே ‘எறும்பு’ படத்தின் கதை. எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஒரு கிராமத்தில் இப்படி எல்லாம் கூடவா இருப்பார்கள் என வியப்பை அளித்தது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் மகிழ்ச்சியாக இருந்தோம். இந்தப் படத்தில் தான் நான் முதல் முறையாக முயலை பார்த்தேன். தொடக்கத்தில் தயக்கமும், பயமும் இருந்தது. அதன் பிறகு அதனுடன் பழகிவிட்டேன். ஒருமுறை முயல் எனது வலது கையில் கீறி விட்டது. அதன் பிறகு படப்பிடிப்பில் புதிய முயலுடன் நடிக்க வேண்டியதிருந்தது. அந்த முயல் மிகவும் கோபமாக இருந்தது. முயலுடன் பழகியதும் மறக்க முடியாததாக இருந்தது. ” என்றார்.
எம். எஸ். பாஸ்கர் பேசுகையில், ” வெள்ளித்திரை படத்திற்கு பிறகு சார்லியுடன் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியை மேம்படுத்துவதற்காக சார்லியும், நானும் விவாதிப்போம். இதனை இயக்குநரும் அனுமதிப்பார். விசயம் நன்றாக இருந்தால், இயக்குநர் சுரேஷ் அதனை இணைத்துக் கொள்வார். என்னைப் பொறுத்தவரை எப்போதும் சுறுசுறுப்பாகவே பணியாற்றும் இயக்குநர் சுரேஷ்தான் எறும்பு. இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது என்னுடைய கண் முன்னால் கந்து வட்டியின் கொடுமை தாங்காமல் தீக்குளித்த ஒரு குடும்பத்தினரின் புகைப்படம் வந்து சென்றது. வட்டி வாங்குவது வேதனையான விசயம். மிக கடுமையாக பேச வேண்டிய வேடம் இது. இதனால் சில தருணங்களில் எனக்கே என் மீது வெறுப்பு வந்தது. அந்த இரண்டு குழந்தைகள் வட்டி கட்டுவதற்காக உழைக்கும் உழைப்பு எப்படி இருந்தது என்றால்.. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பார்களே.. அப்படி இருந்தது. அந்த வகையில் ‘எறும்பு’ நல்ல கருத்தை சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அதிகபட்சம் யாரும் கடன் வாங்காதீர்கள். ஏனெனில் கடன் என்பது மிக மோசமான விசயம். அப்படி வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த கடனை அடைப்பதற்கான வருவாயை ஆண்டவன் நமக்கு அருள வேண்டும்” என்றார்.
நடிகர் சார்லி பேசியதாவது:- “2019 ஆம் ஆண்டில் இயக்குநர் சுரேஷ் என்னை சந்தித்து, ‘உங்களுக்காக ஒரு கதையை எழுதி இருக்கிறேன். ஒரே ஒரு நாள் மட்டும் வந்து நடித்துக் கொடுக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். சுரேஷ் இயக்கத்தில் நாங்கள் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் ‘ எறும்பு’. படப்பிடிப்பின் போது ஒட்டுமொத்த கிராமமும் இயக்குநர் சுரேஷுக்கு உதவி செய்தது. எறும்பு வழக்கமான படம் அல்ல உலக அரங்கில் முதல் தமிழ் சினிமா இதுதான்.
தாத்தா- தந்தை- தாய் ஆகியோரின் பெயரை...பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சூட்டியிருக்கிறார் இயக்குநர். தலைமுறையை மறக்காத படைப்பாளியான சுரேஷ், தன் மண்ணில் பெற்ற அனுபவத்தை எறும்பாக உருவாக்கி இருக்கிறார். இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று கவிஞர்கள், பாடலாசிரியர்கள் இங்கு வாழ்த்தியிருக்கிறார்கள். இவர்களின் வார்த்தைகளை ரசிகர்களும் முன்மொழிந்து, இப்படத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் ” என்றார்.
இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர் பேசுகையில், ” இந்தப் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இயக்குநர் என அனைவரும் எனது நண்பர்கள். நண்பர்கள் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன். இயக்குநர் சுரேஷிடமிருந்து நான் கற்றுக்கொள்ள விரும்பும் விசயம் அவரது துணிச்சல். சுரேஷின் தைரியத்திற்காகவே இந்த படம் வெற்றி பெறும்”என்றார்.
தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் பேசியதாவது:-
“018 ஆம் ஆண்டில் ‘போதை’ எனும் திரைப்படத்தை தயாரித்து, இயக்கியிருந்தேன். இந்தத் திரைப்படம் எனக்கு நிறைய அனுபவத்தை கற்றுக் கொடுத்தது. அதன் பிறகு நடிகர் சார்லியை சந்தித்து கதையை சொல்லி குறும்படம் ஒன்றை இயக்க திட்டமிட்டிருந்தேன். கொரோனா காரணமாக அது நிறைவேறவில்லை. அந்த தருணத்தில் தோன்றிய கதைதான் எறும்பு. இந்த கதை எனக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஃபீல் குட் மூவிக்கும்.. எமோஷனல் எனும் உணர்விற்கும்.. தனி சக்தி உண்டு. அது வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நமக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்வது தங்கம். அதிலும் ஒரே ஒரு கிராம் தங்கத்தை மையப்படுத்தி தான் இப்படத்தின் கதை உருவாகி இருக்கிறது. ஒரு கிராம் தங்கத்தை வைத்து அக்கா -தம்பி பாசம்… அப்பா -மகன் உறவு… என பல விசயங்களை இணைத்திருக்கிறேன். நாம் சிறிய வயதில் ஏதேனும் ஒரு பொருளை தொலைத்திருப்போம். அதனை எப்படி பெற்றோர்களிடத்தில் சொல்வது என அச்சம் கொண்டிருப்போம். ஒரு கிராம் மோதிரம் தொலைந்து விட்டது. அப்பா, அம்மா வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வருவதற்குள் இதனை தேடி கண்டுபிடிக்க அக்காவும், தம்பியும் முயல்கிறார்கள். அவர்கள் வருவதற்குள் இவர்கள் என்ன முயற்சி எடுத்தார்கள். இதுதான் கதை. ” என்றார்.