திரை விமர்சனம்

‘கழுவேத்தி மூர்க்கன்’ விமர்சனம்

விஞ்ஞானம் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் இந்த நவீன காலக்கட்டத்திலும் சாதி சண்டைகளும் சாதி அரசியலும் இன்னும் சாய்க்க முடியாத சாத்தானாக மனிதத்தை கூறுபோட்டுக்கொண்டிருப்பது மறுக்க முடியாத நிதர்சனம். அதை அழுத்தமாக பதிவு செய்யும் இன்னொரு சாதி அரசியல் படம்தான் ‘கழுவேத்தி மூர்க்கன்’.

இராமநாதபுரத்தில் தெக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்த நண்பர்கள் அருள்நிதி, சந்தோஷ் பிரதாப். வெவ்வேறு சாதியினராக இருந்தாலும் பாகுபாடு பார்க்காமல் உயிர் நண்பர்களாக இருப்பவர்களை பிரிக்கிறது சாதி அரசியல். இதில் சந்தோஷ் பிரதாப் கொல்லப்பட, பழி அருள்நிதி மீதே விழுகிறது. போலீஸில் மாட்டிக்கொள்ளாமல் தலைமறைவாக இருக்கும் அருள்நிதி, நண்பனின் சாவுக்கு காரணமானவர்களை கழுவேத்தி கொல்வதே கதை.

மூறுக்கு மீசை, மூர்க்க குணம், இவர் ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்தான் என்று நம்ப வைக்கும் தினவெடுத்த உடல்வாகு, நண்பனுக்காக உருகுவது, காதலில் கரைவது என மூர்க்கன் கதாபாத்திரத்தில் முழுமையாக பொருந்தியிருக்கிறார் அருள்நிதி. ஆக்ஷன் காட்சிகளில் காட்டும் ஆக்ரோஷத்தில் நரம்பு புடைக்கவைக்கிறார். மாவட்ட கட்சி தலைவரின் வாகனத்தை நடுவழியில் நிறுத்தி அடிபொடிகளை நைய புடைத்து நடுநடுங்கவைக்கும் காட்சியில் தியேட்டரை அதிரவைக்கிறது கைத்தட்டல். நண்பனின் சாவுக்கு காரணமான வில்லனை காவு வாங்கும் காட்சியில் அய்யனார் சிலை போல மிரட்டுகிறார்.

அருள்நிதியின் நண்பராக ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த சமூக அக்கறைகொண்ட இளைஞர் கதாபாத்திரத்தில் கனக்கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் சந்தோஷ் பிரதாப். நமக்கெல்லாம் படிப்பெதற்கு என்று ஒதுங்கும் தன் இன இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுத்து அவர்களை அதிகாரிகளாக்கி அழுகு பார்க்கும் இடங்கள் நெகிழ வைக்கிறது.

ஊரையே மிரளவைக்கும் அருள்நிதியை “என் கண்ணை பார்” என்று காதல் பார்வையால் மிரள வைக்கும் நாயகி துஷாரா சிறப்பு. அடுத்து என்ன? அருள்நிதியின் நிலை என்னவாகும் என்ற இக்கட்டான ஒரு சூழ்நிலையில் அருள்நிதிக்கு துஷாரா கொடுக்கும் அந்த ‘இச்’.. நச்.

போலீஸ் உயரதிகாரியாக வரும் சரத் லோகித்சவா அலட்டிக்கொள்ளாமல் நடித்து அசால்ட்டாக அப்ளாஸ் அள்ளுகிறார். மாவட்ட கட்சித் தலைவராக ராஜசிம்மன், அருள்நிதியின் தந்தையாக யார் கண்ணன், சந்தோஷின் காதலியாக சாயாதேவி உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் சிறப்பான தேர்வு.

டி.இமானின் இசையில் ‘அவ கண்ணை பார்த்தா..” பாடலை ரசிக்கலாம். ஆனால் பின்னணி இசையில் வெகு இரைச்சல், எரிச்சலை ஏற்படுத்துகிறது. உறுத்தாத ஒளிப்பதிவால் ஈர்க்கும் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரை பாராட்டலாம்.

நுட்பமான அரசியல் பார்வை; சாதி வெறிக்கு எதிராக சாட்டையை சுழற்றும் வசனங்கள்; எந்த சாதியையும் தூக்கி பிடிக்காத சமநிலை என படத்தை தூக்கி நிறுத்தும் அம்சங்களுக்காக இயக்குனர் கெளதம்ராஜுக்கு ஒரு பூங்கொத்து. ஏற்கனவே வந்த கதை , திரைக்கதை ஓட்டை, லாஜிக் சறுக்கல் போன்ற குறைகளையும் இயக்குனர் கவனித்திருந்தால் ‘கழுவேத்தி மூர்க்கன்’ கூடுதலாக கவர்ந்திருப்பான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE