‘தீராக்காதல்’ – விமர்சனம்
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் முதல் காதலின் நினைவுகள் எப்போதும் மனதின் ஆழத்தில் வேர் பிடித்தபடியே இருக்கும். அப்படியான அந்த காதல் மீண்டும் பூ பூக்க தொடங்கினால் என்ன நடக்கும் என்பதை காதல் மணக்க மணக்க கொடுத்து ரசிக்க வைக்கும் படமே ‘தீராக்காதல்’.
ஜெய்யும் ஐஸ்வர்யா ராஜேசும் முன்னாள் காதலர்கள். இருவருக்கும் குடும்பம் இருக்கிறது. அவரவர்கள் குடும்பம்; அவரவர்கள் வாழ்க்கை என்று போய்க்கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஒரு ரயில் பயணத்தில் இருவரையும் சந்திக்க வைக்கிறது விதி. இருவருமே மங்களூருக்கு வேலை விஷயமாக வந்தவர்கள். வந்த இடத்தில் அடிக்கடி சந்திப்பு; கடந்துபோன காதல் நினைவுகளில் மூழ்குவது என மெல்ல மெல்ல நெருக்கம் கொள்கிறார்கள்.
சட்டென சுதாரித்துக்கொள்ளும் ஜெய், “இனி நாம சந்திக்க வேண்டாம். இருவருக்குமே தனி தனி வாழ்க்கை இருக்கு” என ஐஸ்வர்யாவிடம் சொல்லிவிட்டு பிரிந்து வருகிறார். ஆனால் சைக்கோ கனவனின் காட்டுமிராண்டி செயல்களால் நொறுங்கிப்போகும் ஐஸ்வர்யா ஜெய்யிடம் ஆறுதல் தேடி மீண்டும் அவரை சந்திக்கிறார். ஒரு கட்டத்தில் விவாகரத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு இனி உன்னுடன்தான் வாழ்க்கை என்று ஜெய்யை அடைய துடிக்க, ஜெய் அதிர்ச்சியாக அடுத்தடுத்து நடக்கும் ஹார்மோன் ஆட்டமே கதை.
படத்தின் மொத்த பலமும் கதையின் அடிநாதமும் ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம்தான். கிட்டத்தட்ட கத்தி மேல் நடக்கக்கூடிய ஒரு கேரக்டர். கொஞ்சம் பிசகினாலும் வில்லி போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் அதை அல்வா சாப்பிடுவதுபோல் வெகு இலகுவாக செய்து இதயத்தில் இடம் பிடிக்கிறார் ஐஸ்வர்யா. ’வாலி’ படத்தில் வில்லத்தனம் செய்யும் அஜித் கேரக்டர் போல சவாலான ஒரு கேரக்டரில் சிக்ஸர் அடித்திருக்கிறார்.
சைக்கோ கணவனின் கொடுமை தாங்க முடியாமல் பொங்குவது; ”எனக்கு நீ மட்டும்தான் இருக்க” என ஜெய்யின் தோள் சாய்ந்து கலங்குவது; ஒரு கட்டத்தில் ஜெய்யை மறக்க முடியாமல் மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுப்பது என பல உணர்வுகளை, உணர்ச்சிகளை ஐஸ்வர்யா வெளிப்படுத்தும் இயல்பான நடிப்பிற்காகவே அவருக்கு காத்திருக்கிறது விருதுகள்.
நடிப்பில் பழைய பண்ணீர்செல்வமாக திரும்பியிருக்கிறார் ஜெய். கிட்டத்தட்ட “ராஜா ராணி”யில் பார்த்த ஜெய்யின் நடிப்பை இதிலும் பார்க்கமுடிகிறது. மனைவி, மகளுக்கு பொறுப்பான கணவனாக, தந்தையாக நடந்துகொள்ளும் தருணம், தன் வீட்டுக்கு எதிர் வீட்டுக்கே ஐஸ்வர்யா குடிவந்த நிலையில் அதிர்வது; குடும்ப வாழ்வில் பழைய காதல் வில்லனாய் வந்து நுழைந்ததை பொறுக்கவும்ம் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் தவிப்பது என அபாரமாக ஸ்கோர் செய்திருக்கிறார் ஜெய்.
ஜெய்யின் மனைவியாக ஷிவதாவும், ஐஸ்வர்யாவின் கணவனாக வரும் அம்ஜத்தும் அவரவர் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளனர். ஜெய்யின் அலுவலக நண்பராக வரும் அப்துல் லீ ஆங்காங்கே காமெடியில் சிரிக்க வைப்பது சிறப்பு.
கதை.. கள்ளக்காதல் தண்டவாளத்தில் ஏறிவிடும் ஆபத்தான சூழ்நிலையில் அதை திருப்பி வேறொரு ரூட்டில் பயணிக்க வைத்திருக்கும் இயக்குனர் ரோகின் வெங்கடேசனின் திரைக்கதை சாமர்த்தியம் பாராட்டுக்குரியது. காதலின் உணர்வுகளை பார்வையாளர்களுக்கு கடத்தும் ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவு அழகு. சித்துகுமாரின் பின்னணி இசையும் சுரேந்திரநாத்தின் வசனமும் படத்தின் இரு தூண்கள்.
புதுமையான கதை இல்லையெனினும் புத்திசாலித்தனமான திரைக்கதை கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்கள் தேர்வு போன்றவற்றால் ‘தீராக் காதலை’ திகட்ட திகட்ட ரசிக்க முடிகிறது.