‘விமானம்’ – விமர்சனம்
சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங் ‘விமானம்’.
இத்துப்போன கட்டணக் கழிப்பிடம் நடத்தி அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கை வண்டியை ஓட்டும் சமுத்திரக்கனிக்கு ஒரு மகன். படிப்பில் படு சுட்டியான அவனது உலகம் விமானம்தான். எதிர்காலத்தில் விமானி ஆகவேண்டும் என்று ஆசைப்படும் அவனது புத்து கூர்மைக்காகவே கோவையில் உள்ள பெரிய பள்ளியில் இலவசமாக படிக்க இடம் கிடைக்கிறது.
கால்கள் ஊனமுற்ற சமுத்திரக்கனி, தனது மகனின் எதிர்காலம் பிரகாசமாக தெரியும் சந்தோஷ கனவில் மிதக்கிறார். ஆனால் அவரது கனவு கானல் நீராகிறது. பள்ளியில் திடீரென மயங்கி விழும் மகனை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கிறார். அவனக்கு இரத்த புற்று நோய் இருப்பதாகவும், இன்னும் சில நாட்களே உயிருடன் இருப்பான் என்றும் மருத்துவர் சொல்ல, சமுத்திரக்கனியில் தலையில் விழுகிறது இடி.
சோகத்தை தாங்கமுடியாத சமுத்திரக்கனி, விமானத்தில் போகவேண்டும் என்ற மகனின் ஆசையையாவது நிறைவேற்ற துடிக்கிறார். ஆனால் அதற்காக பத்தாயிரம் ரூபாய் சேர்க்கமுடியாமல் தவிக்கிறார். சமுத்திரக்கனியின் தவிப்பும், அவரது மகனின் ஆசையும் நிறைவேறுகிறதா இல்லையா என்பதே மிச்ச கதை.
படம் தொடங்கிய பத்தாவது நிமிடத்திலேயே தெரிந்துவிடுகிறது இது ஜவ்வு மிட்டாய் என்று. தம்மா துண்டு கதையை இரண்டு மணி நேரம் இழுத்து பிடிக்க போராட்டம் நடத்துகிறார் இயக்குனர். ஒரு சிறுவனின் கனவு; அது நிஜமாகிறதா நிழலாகிறதா? என்ற அருமையான ஒன்லைன் இருந்தும் திரைக்கதை அமைப்பதில் திண்டாடி இருப்பதால் ‘விமானம்’ நத்தை வேகத்தில் நகர்கிறது.
விபச்சாரம் நடத்தும் பெண்; அவளின் விலையான ஆயிரம் ரூபாயை கொடுத்து என்றாவது ஒருநாள் அவளை அடையவேண்டும் என்று நினைக்கும் தொழிலாளி என்ற மட்டமான காட்சியமைப்புகள் படத்துக்கு தேவையே இல்லாத ஆணி.
தெலுங்கில் பிரதான கேரக்டர் கிடைக்கிறதே என்ற சமுத்திரக்கனியின் ஒரே ஆசைதான் அவரை இந்தப்படத்தில் நடிக்க வைத்திருக்கக்கூடும். அடிப்படையில் இயக்குனரான சமுத்திரக்கனி, இப்படிப்பட்ட கதையை தேர்வு செய்தது அபத்தம். நடிப்பு….. 100 ரூபாய் கொடுத்தால் ஆயிரம் ரூபாய்க்கு அழுதிருக்கிறார்.
சமுத்திரகனியின் மகனாக அந்த குட்டிப் பையன் ஈர்ப்பு. மொட்டை ராஜேந்திரன், மீராஜாஸ்மின் கேரக்டர்களும் ஏன் ஏன் ஏன்?..
மகனின் ஆசையை நிறைவேற்ற எங்கெங்கொ பணம் கேட்டு அலையும் சமுத்திரக்கனி விபச்சாரியின் காலில் விழ நேர்வதெல்லாம் கொடுமையிலும் கொடுமை. மகன் படிக்கும் பள்ளி ஆசிரியர்களிடம் விஷத்தை சொன்னால்கூட ஆளுக்கு 500 ரூபாய் போட்டு தேவையான பணத்தை கொடுத்திருப்பார்கள். இயக்குனரின் மண்டையில் இந்த யோசனையெல்லாம் உதிக்காதது உறுத்தல்.
மொத்தத்தில் தியேட்டரில் ஆளில்லாத ‘விமானம்’ இது.