சினிமாவால் விழுந்தேன் சினிமாவாலே எழுந்தேன் : எஸ்.ஜே.சூர்யா எமோஷன்
ANGEL STUDIOS MH LLP நிறுவனம் தயாரிப்பில் SJ சூர்யா வழங்க, இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், SJ சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள திரைப்படம் “பொம்மை”. மாறுபட்ட திரைக்கதையில் அழகிய கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் நாளை மறுநாள் வெளியாகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
அப்போது படத்தின் இயக்குனர் ராதாமோகன் பேசியதாவது:-
“இந்தப்படம் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்துள்ளது. எஸ் ஜே சூர்யாவிடம் முதலில் கதையைச் சொல்லிவிட்டு தயாரிப்பாளரைத் தேட ஆரம்பித்தேன். ஆனால் சில நாட்கள் கழித்து அவரே தயாரிப்பதாக கூறினார். அப்படித்தான் இந்தப்படம் தொடங்கியது. அவரும் இயக்குநர் என்பதால், அவ்வப்போது சில விஷயங்கள் சொல்வார் அது எனக்கு உதவியாக இருக்கும். இந்தக் குழுவிற்கு நான் நன்றி சொல்ல மாட்டேன் ஏனென்றால் இன்னும் பல படங்கள் இவர்களுடன் இணைந்து பணி புரியபோகிறேன். யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் அருமையாக வந்துள்ளது”என்றார்.
நடிகை பிரியா பவானி சங்கர் பேசியபோது, “ஆசைப்பட்டு செய்த மனதுக்கு நெருக்கமான படம் இது . ஒவ்வொரு காட்சியிலும் ராதாமோகன் சார் காட்டும் உயிரோட்டம் அப்படியே தெரிந்தது. அவர் சொல்லிக்கொடுப்பதை செய்தாலே போதும். ஒரு நல்ல மனிதராக அவருடன் பழகியது சந்தோஷமான அனுபவம். SJ சூர்யா சாருடன் இரண்டாவது படம். இதில் தயாரிப்பாளராகவும் இருந்தார். ஒரு பக்கம் நெருப்பாக இருப்பார் இன்னொரு பக்கம் கூலாக நடிப்பார். ஒவ்வொரு டேக்கிலும் வித்தியாசமாகத் தரப் போராடுவார். எனக்கு நந்தினி கேரக்டர் தந்ததற்கு ராதா மோகன் சாருக்கு நன்றி. படம் கண்டிப்பாக நல்ல படைப்பாக இருக்கும்”என்றார்.
படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது :-
“படத்தின் கதை ராதாமோகன் சொல்லும்போது “பொம்மைக்கும் மனிதனுக்கும் காதல் வருகிறது” என ஆரம்பித்ததுமே எனக்கு அது பிடித்துவிட்டது. அதற்கான நியாயத்தை அவர் கதையில் சேர்த்திருந்தார். ப்ரியா பவானி சங்கர் நிஜ பொம்மை போலவே நடித்திருக்கிறார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது கொரோனா குறுக்கிட்டது. இதனால் படம் தாமதமானது. ஆனால், கொரோனாவால் எடுத்துகொண்ட காலம் ஒருவகையில் நல்லதாக அமைந்தது. அந்த நேரத்தில் நிறையவே மெனக்கெட நேர்ந்தது. பாடல்கள் மெருகேற கொரோனா கொடுத்த காலம் உதவியாக இருந்தது. பின்னணி இசைக்காகவே நீங்கள் இந்த படத்தை பார்க்கலாம். யுவன்சங்கர் ராஜா அந்த அளவுக்கு இசையமைத்துள்ளார்.
ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டாக என் வாழ்க்கையை தொடங்கினேன். அங்கிருந்து திட்டமிட்டு இயக்குநராகி சம்பாதித்து அதிலிருந்து தயாரிப்பாளராகி அந்த காசை வைத்து ‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’ எடுத்து அடுத்து வந்த படங்கள் சரியில்லாமல் சறுக்கி குழிக்குள் விழுந்து எழுந்து, ‘இசை’ என ஒரு படம் எடுத்து தரைக்கு வந்த உட்கார்ந்தேன்.
கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் ‘இறைவி’ படத்தின் மூலம் மீண்டும் திரையில் நுழைந்து சம்பாதித்து மீண்டும் தற்போது படத்தை தயாரித்துள்ளேன். இடையில் அபிதாப் பச்சனை வைத்து படம் தயாரிக்க முடிவெடுத்து அது நின்றுபோன வலியில் இருந்தேன். நான் திருப்பி திருப்பி எனக்கு வரும் பணத்தை சினிமாவுக்குள்தான் முதலீடு செய்து வருகிறேன். உணர்வுகளின் அடிப்படையில் இயக்கப்பட்ட இந்தக் கதையில் நான் சம்பாதித்த காசை முதலீடு செய்திருக்கிறேன். மக்கள் ஆதரவு கொடுத்தால் அடுத்தடுத்த திட்டங்கள் வைத்துள்ளேன்” என்றார்.