‘பானிபூரி’ இணையத்தொடர் விமர்சனம்
காதல் – மோதல் – கலகலப்பு – கசமுசா கலந்த கதம்ப இணையத்தொடராக தமிழ் ஓடிடியான ஷார்ட்ஃபிலிக்ஸில் இப்போது காணக்கிடக்கிறது ‘பானிபுரி’.
விட்டுக்கொடுக்கும் நல்ல மனம் கொண்ட ஹீரோ லிங்காவும் ரோபோட்டிக் விஞ்ஞானியான ஜாம்பிகாவும் காதலர்கள். நன்றாக போய்க்கொண்டிருக்கும் இவர்கள் காதல், திடீரென சந்தேக டிராக்கில் ஏறி தடம் புரள்கிறது. உடைந்த காதலை ஒட்ட வைப்பதற்காக ஒரு வாரம் ஒரு வீட்டில் ‘லிவிங் டூ கெதர்’ முறையில் வாழ்ந்து தங்கள் காதல் தங்கமா? இல்லை தகரமா என்று சோதித்து பார்க்க முடிவெடுக்கிறார்கள். அப்போது அந்த குடியிருப்பில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு பூரியின் அப்பாவை கவனித்துக் கொள்வது யார்? என்ற பிரச்சனையும் ஏற்பட இடியாப்ப சிக்கலில் மாட்டும் காதல் கனிகிறதா, கசக்கிறதா? என்பதே க்ளைமாக்ஸ்.
வளர்ந்துவரும் ஹீரோவாக கவனம் ஈர்த்துவரும் லிங்கா, பானி என்ற நாயக கதாபாத்திரத்தில் அப்பாவியாகவும், இயல்பாகவும் நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார். அவரது காதலி பூரி கதாபாத்திரத்தில் வரும் ஜாம்பிகா, லிங்காவுக்கு ஈடுகொடுத்து தரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். லிங்காவும், ஜாம்பிகாவும் இணைந்து சமகால காதலர்களை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்கள். ஈகோ, அன்பு, கோபம் என அனைத்தையும் கலந்து நல்ல நடிப்பை தந்துள்ளார்கள்.
ஜாம்பிகாவின் அப்பாவாக வரும் இளங்கோ குமரவேல், தானொரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். நாயகனின் நண்பனாக வினோத் சாகர், நாயகனின் அண்ணனாக ஸ்ரீகிருஷ்ண தயாள், அண்ணியாக கனிகா, அடுக்குமாடி குடியிருப்புவாசிகளாக கோபால் & கோ உள்ளிட்டோரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கி கவனம் பெறுகிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் பாலாஜி வேணுகோபால், மாறிக்கொண்டிருக்கும் சமகால இளைஞர்களின் உணர்வுகளையும், அவற்றை பெற்றோர்கள் எப்படி பக்குவமாக அணுக வேண்டும் என்பதையும் மிகவும் நுட்பமாக படம் பிடித்துக் காட்டியுள்ளார். கொஞ்சம் கவனக்குறைவு ஏற்பட்டால்கூட ஆபாசமாகிவிடக் கூடிய விஷயங்களை மிகுந்த எச்சரிக்கையுடன், விரசம் இல்லாமல் கண்ணியமாக காட்டியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுகள். பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவு, பி.கே-வின் பட்த்தொகுப்பு, நவ்னீத் சுந்தரின் பின்னணி இசை இத்தொடரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.
‘பானி பூரி’ – அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கக்கூடிய இணையத்தொடர்.