ஆஹா தளத்தில் ‘சிங்க்’ : மிரட்டும் ஹாரர் படம்
ஆஹா தமிழ் வழங்கும் மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் கிஷன், மோனிகா நடிப்பில் ஜூலை 21ஆம் தேதி நேரடியாக ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ‘சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் ஆஹா வைஸ் பிரசிடெண்ட்டும் கண்டெண்ட் ஸ்ட்ரேட்டர்ஜிஸ்ட்டுமான கவிதா பேசியதாவது:-
“மலையாளத்தில் உணர்வுப்பூர்வமான கதைகள் வரும்போது அதனை கொண்டாடுகிறோம். ஆனால், தமிழ் சினிமா என்று வந்துவிட்டால் கமர்ஷியல் படங்கள்தான் என்ற ரீதியில் அணுகுகிறோம். அப்படி இல்லாமல் தமிழிலும் புத்திசாலித்தனமான கதைகள் கொண்டாடப்பட வேண்டும் என்பதை ஆஹா நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில்தான் ‘சிங்க்’ படமும் வந்துள்ளது. புது முயற்சியை ஊக்குவிக்கும் இடத்தில் ஆஹா தமிழை அனைவரும் வைத்திருப்பது எங்களுக்கு பெருமையான விஷயம். வழக்கமான ஹாரர் ஜானர் படங்களின் கதையில் இருந்து ‘சிங்க்’ வேறுபட்டு இருக்கும். இசை, காட்சிகள் என அனைத்துமே சிறப்பாக உள்ளது”.
நடிகர் நவீன் ஜார்ஜ் பேசியபோது, “நண்பர்கள் மூலமாகதான் இந்தக் கதைக்குள் வந்தேன். படத்தின் திரைக்கதை படித்தபோது உண்மையாகவே ஆர்வமூட்டுவதாக இருந்தது. வழக்கமான ஹாரர் படங்களைப் போல இது இருக்காது. டீமாகவே எங்களுக்குள் சிங்க் நன்றாக இருந்தது. ஹாரர் படம் போல அல்லாமல் காமெடி படம் எடுப்பது போல ஜாலியாக வேலை பார்த்தோம். அழகான அனுபவமாக மாற்றித் தந்த படக்குழுவுக்கும், ஆஹாவுக்கும் நன்றி” என்றார்.
நடிகை மோனிகா, “ ‘சிங்க்’ படத்தில் என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக படக்குழுவுக்கு நன்றி. ஆஹாவும் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். ‘சிங்க்’ மிகவும் ஆர்வமூட்டும் திரைக்கதையாக இருக்கும். படம் பார்த்து விட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள்”.
இசையமைப்பாளர் அபுஜித் பேசியபோது, “படப்பிடிப்பு 10-15 நாட்களிலேயே முடிவடைந்து விட்டது. ஆனால், இசையைப் பொருத்தவரை வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். ஒவ்வொரு ஆர்டிஸ்ட் டப்பிங்கின் போதும் அவர்களைச் சுற்றி 3-4 மைக் வைத்தோம். இதற்கு ஒத்துழைத்த எனது அணிக்கு நன்றி. படத்தைப் பார்த்துவிட்டு எங்களுக்கு ஆதரவு கொடுத்து வெளியிடும் ஆஹாவுக்கு நன்றி!”.
ஒளிப்பதிவாளர் சிவராம் பேசியதாவது:-
“எல்லோரும் சொன்னதுபோல படப்பிடிப்பு குறைந்த நாட்களில் முடிவடைந்து விட்டது. ஆனால், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டோம். மற்ற படங்களின் சிஜி பணிகளை நாம் கேலி செய்கிறோம். அப்படி இருக்கும்போது, நம்முடையது சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். நண்பர்களோடு வேலை செய்யும் போது ஜாலியாக இருக்கும். எங்களின் படம் நன்றாக இருக்கும் என்று நாங்கள் நம்பியது போலவே, ஆஹாவும் நம்பியது. உங்கள் அனைவரது ஆதரவும் எங்களுக்கு வேண்டும்”.
இயக்குநர் விகாஸ் ஆனந்த், “நண்பர்கள் சேர்ந்து எடுத்த படம் இது என்பதால் பட்ஜெட்டில் நிறைய விஷயங்கள் காம்ப்ரமைஸ் செய்தோம். நாங்கள் திட்டமிட்ட நேரம் தாண்டி படப்பிடிப்பு போனால்கூட நாங்கள் எங்களுக்குள் பேசி குறைந்த நாட்களிலேயே படத்தை முடித்து விட்டோம். எங்களது திறமைக்கு ஆதரவு கொடுத்துள்ள ஆஹாவுக்கு எங்களது நன்றி”.
நடிகர் கிஷன் பேசியதாவது:-
“என்னுடைய முதல் படமான ‘முதல் நீ முடிவும் நீ’ படத்திற்கு ஆதரவு கொடுத்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. ‘சிங்க்’ படத்திற்காக இயக்குநர் விகாஸ் கடுமையாக உழைத்துள்ளார். இந்த படமும் பட்ஜெட்டும் சின்னதாக இருக்கலாம். ஆனால், நிறைய கனவுகளோடு இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். அந்த வகையில் இது பெரிய படம்தான். படக்குழுவில் உள்ள அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சியான விஷயம். நாங்கள் படம் எடுத்து முடித்ததும், ஓடிடியில்தான் ரிலீஸ் செய்ய உள்ளோம். பார்த்துவிட்டு சொல்லுங்கள்’ என்று ட்வீட் ஒன்று போட்டேன். டிவீட் போட்ட ஐந்து மணி நேரத்திற்குள்ளேயே நித்திஷ் எங்களை தொடர்பு கொண்டு ஊக்கப்படுத்தினார். சுரேஷ்சந்திரா அப்பாவுடன் ஒரு புராஜெக்ட்டில் இணைந்து வேலை பார்க்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறி உள்ளது. உங்கள் ஆதரவுக்கு நன்றி” என்றார்.