‘சான்றிதழ்’ திரை விமர்சனம்
கட்டுப்பாடு மிகுந்த ஒரு கிராமம். அந்நியரோ, அரசியலோ ஊரார் கவனமின்றி உள்ளே நுழைய முடியாத அளவுக்கு இரும்புக்கோட்டையாக இருக்கிறது. ஊருக்குள் ஒரேஒரு பாஸ்மார்க். (எழுத்துப்பிழை அல்ல டாஸ்மாக்கிற்குதான் அந்த ஊரில் இந்த பெயர்.) ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ‘கட்டிங்’ மட்டும்தான் வழங்கப்படும்.
டிவி சீரியல்கள் பார்ப்பதற்கும் நேரக் கட்டுப்பாடு உண்டு. சாதி மதத்திற்கு வேலையே இல்லை. இப்படியாக ஒழுக்கத்தில் இமயம் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது அந்த கருவறை கிராமம். ஆஹா.. இப்படியொரு கிராமமா என்று ஏங்க வைக்கும் இந்த கிராமம் ஒரு காலத்தில் தறுதலை கிராமமாக இருந்தது. அது மாறியது எப்படி மாற்றியது யார்? என்ற ஆர்வத்திற்கும் கேள்விக்கும் விடை கொடுக்கும் படமே ‘சான்றிதழ்’.
ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படியெல்லாம் பத்து ஊர் இருந்துவிட்டால் நாடே நல்லாயிருக்கும் என்று சொல்ல வைக்கும் அளவிற்காக ஒரு கதையை இயக்கியிருக்கிறார் ஜேவிஆர்.
போதை உள்ளிட்ட கெட்ட பழக்க வழக்கங்களால் குட்டிச்சுவராய் போயிருந்த கிராமத்தை தனது அதிரடி நடவடிக்கைகளால் ஜனாதிபதி விருதே கிடைக்கும் கிராமமாக மாற்றி அமைக்கும் சமூக சிந்தனை கொண்டவராக ஹரிக்குமார் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஹரிக்குமாரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் கேரக்டர்களாக அருள்தாஸ், ரோஷன் பஷீர் இருவரும் சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.
கிராமத்தை ஆய்வு செய்து எழுத வரும் ரிப்போர்ட்டராக ஆஷிகா அசோகன், வில்லனின் மனைவியாக கெளசல்யாவும் தங்கள் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள். குடிகாரர்களாக வரும் ரவிமரியா, மனோபாலா சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்; சில இடங்களில் காமெடி பெயரில் அறுத்தெடுக்கிறார்கள்.
கதையின் கரு சிறப்பு என்றாலும் திரைக்கதை தொய்வு, கேரக்டர் தேர்வு போன்றவற்றில் அழுத்தம் குறைவாக இருப்பது படத்தின் வேகத்தை மாட்டு வண்டியில் ஏற்றுவது அழுப்பை தருகிறது. ரவிமாறன் சிவனின் ஒளிப்பதிவு சிறப்பு. பிஜு ஜேக்கப்பின் பின்னணி இசை ஓகே ரகம். திரைக்கதை, காட்சியமைப்புகள், கவர்ச்சியை நம்பியது போன்றவற்றில் கவனம் செலுத்தியிருந்தால் உண்மையிலேயே விருது வாங்கியிருக்கக்கூடிய படம். ஆனால் இயக்குனரின் கவன பிசகினால் ‘சான்றிதழ்’ , பாராட்டு சான்றிதழை பெற தவறி இருக்கிறது.