‘மன்மதலீலை’ – திரை விமர்சனம்
2010-ல் தன் காதலியைத் திருட்டுத்தனமாக அவள் வீட்டிலேயே சந்திக்கும் கல்லூரி இளைஞன்; 2020-ல் மனைவியும் மகளும் இல்லாத வீட்டில், வழிப்போக்கராக வரும் அந்நியப் பெண்ணிடம் நெருங்கிப் பழகும் குடும்பஸ்தன் என சத்யாவின் வாழ்வில் இரு வேறு காலகட்டங்களில் நடக்கும் சம்பவங்களை நான்-லீனியராகச் சொல்கிறது இந்த வெங்கட் பிரபுவின் `குயிக்கி.’
சத்யாவாக அசோக் செல்வன். அரும்பு மீசை, குறும்புப் பார்வை கல்லூரி மாணவனாக ஒரு பரிமாணமும், அதே குறும்பு மாறாத, அதே சமயம் பொறுப்பான ஃபேஷன் டிசைனர் பிசினஸ் மேனாக இன்னொரு பரிமாணமும் எனக் கதையின் நாயகனாக வலம்வருகிறார். ஆனால், நம்மை ஈர்ப்பது என்னவோ அந்த ரகளையான கல்லூரி மாணவன்தான். அதிலும் குறிப்பாக காதலி பூர்ணியின் வீட்டில் மாட்டிக்கொண்ட பின்னரும், பூர்ணி குறித்தான ரகசியம் தெரிந்த பின்னரும் அவரின் முகபாவங்களும், உடல்மொழியும் வசனங்களில் இல்லாத காமெடியைக் கொண்டு வந்துவிடுகின்றன.
காதலி பூர்ணியாக சம்யுக்தா ஹெக்டே, மனைவியாக ஸ்மிருதி வெங்கட், அந்நியப் பெண்ணாக ரியா சுமன், துணை நடிகர்களாக ஜெயப்பிரகாஷ், சந்திரமௌலி என எல்லோருக்கும் வெயிட்டான ரோல்கள். வழக்கம்போல, வெங்கட் பிரபுவின் கிரிக்கெட் டீமிலிருந்து பிரேம்ஜி, வைபவ், அரவிந்த் ஆகாஷ் என கேமியோக்கள். ‘மாநாடு’ படத்திலிருந்து கருணாகரனும் இந்த லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார்.
படத்தின் சர்ப்ரைஸ் பேக்கேஜ் பிரேம்ஜியின் பின்னணி இசைதான். பார்ட்டி, பப் என வழக்கமான இளமைத் துள்ளல் இசையைத் தாண்டி, கொட்டுமேளம், நாதஸ்வரம் என சீரியஸ் சீன்களிலும் ரகளை சேர்த்திருக்கிறார். இரு வேறு காலகட்டங்களைக் குழப்பமின்றிக் கோக்கிறது வெங்கட் ராஜனின் படத்தொகுப்பு.
திருமணத்துக்கு முன்பான உறவு, திருமணம் தாண்டிய உறவு என இரண்டு விஷயங்களைச் சுற்றும் இந்த அடல்ட் காமெடி கதையை எழுதியிருக்கிறார் மணிவண்ணன். தன் உதவி இயக்குநரின் ஸ்கிரிப்ட்டை சுவாரஸ்யம் குறையாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார் வெங்கட் பிரபு. அடல்ட் காமெடிதான், ஆனால் ஃபேமிலி ஆடியன்ஸும் வேணும் என இரு குதிரைகளில் சவாரி செய்ய முயன்றிருப்பதால் இரண்டுமே முழுமை பெறாத ஃபீல். இறுதியில் வரும் ட்விஸ்ட், அடல்ட் காமெடி க்ரைம் திரில்லராக மாறும் இடம் போன்றவற்றுக்குத் திரைக்கதையில் முன் அறிகுறிகள் எதுவுமே இல்லாதது அதன் மீதான ஈர்ப்பைக் குறைத்திருக்கிறது.