சினிமா செய்திகள்

விஜய்சேதுபதிக்கு என் ரசிகையை விட்டுத்தரமாட்டேன் : ‘ஜவான்’ பட விழாவில் ஷாரூக் கலகல

அனிரூத், ப்ரியாமணியுடன் ஆட்டம்; விஜய்சேபதியுடன் காதல் போட்டி என சென்னையில் நடந்த  ‘ஜவான்’ பட விழாவில் ஜாலி திருவிழா நடத்தி பார்வையாளர்களை பரவசப்படுத்தினார் ஷாரூக்கான்.

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் தயாரித்து கதாநாயகனாக கலக்கும் படம்  ‘ஜவான்’.  இப்படத்தில் நாயகியாக நயன்தாரா, வில்லனாக விஜய்சேதுபதி மற்றும் பலர் நடிக்க, அனிரூத் இசையமைத்துள்ளார். படத்தின் ப்ரீ புரமோஷன் நிகழ்ச்சி சென்னை அருகே சாய்ராம் பொறியில் கல்லூரியில் நடந்தது. ஆயிரக்கணகான மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட இவ்விழா ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் களைகட்டியது. முன்னதாக இவ்விழாவிற்கு வருகை தந்தவர்களை விநியோகஸ்தரான ஸ்ரீ கோகுலம் கோபாலன் வரவேற்றார்.

 

தொடர்ந்து நடந்த நிகழ்வில் இசையமைப்பாளர் அனிருத் பேசியதாவது :-

 

” என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கும், பூஜா தட்லானி மற்றும் கௌரி கான் ஆகியோருக்கும் நன்றி. பாடலாசிரியர் விவேக் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறார். அவருடைய ஈடுபாட்டின் காரணமாக இந்த படத்தின் பாடல்கள் ஒரு ரீமேக் படத்தின் பாடல்கள் போலில்லாமல்.. அசல் தமிழ் படத்தின் பாடல்களைப் போல் எழுதியிருக்கிறார். இதனால் ஷாருக்கான் இவரது பாடல் வரிக்கு வாயசைத்து நடனமாடி இருக்கிறார்.

 

என்னுடைய சகோதரர்.. இயக்குநர் அட்லீக்கும் நன்றி. சென்னையிலிருந்து மும்பைக்கு இயக்குநர்கள் ரீமேக்கிற்காக சென்றிருக்கிறார்கள். ஆனால் சென்னையிலிருந்து புறப்பட்டு இந்தியாவின் நட்சத்திர நடிகரான ஷாருக் கானை சந்தித்து, கதை சொல்லி, அவரது தயாரிப்பில் படத்தை இயக்குவது என்பது சாதாரண விசயமல்ல. சவாலானது. அதற்கு அவருக்கு நாம் அனைவரும் கரவொலி எழுப்பி பாராட்டு தெரிவிக்க வேண்டும். அவர் மட்டும் பணியாற்றாமல்.. அவரை நம்பி இருந்த எடிட்டர், கேமராமேன், டான்ஸ் மாஸ்டர், ஃபைட் மாஸ்டர்.. ஆர்ட் டைரக்டர் என எல்லோரையும் அழைத்துச் சென்று தன்னுடன் பணியாற்ற வைத்திருக்கிறார். அதிலும் பத்து ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பணியாற்றி வரும் என்னை பாலிவுட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அனைவரும் கடினமாக உழைத்து ஜவானை உருவாக்கி இருக்கிறோம்.

 

ஷாருக்கான்- வாழ்க்கையில் சில விசயங்கள் நடக்குமா.. என எதிர்பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அதைவிட முதலில் இசையமைப்பாளராக வருவேனா..! என்பதே சந்தேகமாக இருந்தது. தற்போது இசையமைப்பாளராகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் அதுவும் ஷாருக் கான் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அங்கு அறிமுகமாகிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கிங் கான் ஷாருக்… நான் உங்களை தவற விடுகிறேன். நீங்கள் தினமும் இரவு இரவில் ஃபேஸ் டைம் இணைப்பில் வருகை தந்து ஒரு மணி நேரம் பேசுவீர்கள். அந்த பேச்சை தற்போது மிஸ் செய்கிறேன்.
ஷாருக் கான் மிகவும் அன்பானவர். குடும்பத்தில் ஒருவராக பழகக் கூடியவர். ஒரு முறை லண்டனுக்கு சென்றிருந்தபோது.. அங்கு அவர் எனக்காக ஷாப்பிங் சென்று, அங்கிருந்து எனக்கு போன் செய்து.. என் உடை அளவை தெரிந்து கொண்டு, எனக்காக பிரத்தியேகமாக ஆடையை வாங்கி பரிசாக அளித்தார். அந்த அன்பு ஈடு இணையற்றது. இந்த படத்தில் ஷாருக்- அட்லீ இணைந்திருப்பதால் இந்தப் படத்தை இந்தி திரைப்படமாக பார்க்காமல்.. இந்திய சினிமாவாக கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ” என்றார்.

 

விஜய் சேதுபதி பேசுகையில், ” ஜவான் படத்தைப் பற்றி.. அட்லீ பற்றி.. நிறைய சொல்லலாம். இயக்குநர் அட்லீ ஒரு இயக்குநரை போல்.. படத்தில் உள்ள கதாபாத்திரங்களிடம் பேசுவது போல் அல்லாமல், கலைஞர்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களிடமிருந்து எப்படி நடிப்பை வாங்க வேண்டும். அவர்களுக்கான சௌகரியத்தையும், சுதந்திரத்தையும் எப்படி அளிக்க வேண்டும் என்பதில் கைதேர்ந்தவர்.
இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளுமுன் அட்லீயிடம் நிறைய விவாதிக்க வேண்டும் என சொன்னேன். ‘வாங்கண்ணே.. நாம பண்ணலாம். என்ன வேணும்னாலும் பண்ணுங்க’ என்றார். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. படத்தில் என் கதாபாத்திரத்தை நன்றாக வடிவமைத்திருக்கிறார்.

நான் ஸ்கூலில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணைக் காதலித்தேன். அது அந்த பெண்ணிற்கு தெரியாது. இது வழக்கமானது. ஜானு இல்லாமல் ராம் ஏது? ஆனால் அந்தப் பெண் ஷாருக்கானின் ரசிகை. அவரை காதலித்தார். அதுக்கு பழி வாங்க இத்தனை வருஷமாயிருக்கு. ஷாருக்கானை முதன்முதலாக சந்தித்தபோது அவர் என்னிடம் நீங்கள் நல்ல நடிகர். உங்கள் நடிப்பு நன்றாக இருக்கிறது என சொன்னார். அதனை நான் இயல்பாக எடுத்துக் கொண்டேன். ஆனால் மீண்டும் ஒரு முறை வேறு இடத்தில் சந்தித்த போதும் இதையே சொன்னார். அதற்காக இப்போது நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”என்றார்.

 

இயக்குநர் அட்லீ பேசியதாவது:-

” நான்காண்டிற்கு முன்னால் இதே இடத்தில் ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உங்கள் அனைவரையும் சந்தித்தேன். ஜவான் படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சியை எங்கு நடத்துவது? என்ற விவாதம் நடைபெற்றது. சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியதில் பங்காற்றிய வீர முத்துவேல் நினைவுக்கு வந்தார். அவர் இந்த கல்லூரியில் படித்த மாணவர் என்பதால்.. இதே இடத்தை மீண்டும் பெருமிதத்துடன் தேர்வு செய்தோம். இந்த திரைப்படத்தை நான் இயக்குவதற்கு முக்கிய காரணம் தளபதி விஜய் கொடுத்த ஊக்கம் தான். ’ராஜா ராணி’யில் தொடங்கிய வாழ்க்கையை ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்: என சௌகரியமான நிலையில் வாழ வைத்தது விஜய் சார்தான்.

 

பத்து வருடத்திற்கு முன் இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக எந்திரன் படத்தில் பணியாற்றியபோது மற்றொரு உதவி இயக்குநரான ஆடம் தாஸ் படப்பிடிப்பு நடக்கும் வீதியில் உள்ள ஒரு வீட்டில் கேட்டின் முன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்தார். அந்த வீடு ஷாருக்கானுடையது. எனக்கு அது அப்போது தெரியாது. பத்தாண்டுகளுக்குப் பிறகு அதே கேட் எனக்காக திறந்தது. உள்ளே சென்று ஷாருக் கானை சந்தித்தேன். ஆண்டவன், அம்மா, மனைவி ஆகியோர்களை நிஜமாக நேசித்தால்.. கடவுள் நமக்கான சிறந்த வாய்ப்புகளை வழங்குவார். ஷாருக்கானை சந்தித்த நிமிடம் முதல் இந்த நிமிடம் வரை அவர் என்னை கேட்காமல் எதுவும் பேச மாட்டார். ஒருவர் மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்றால், அவருக்கு அருகில் இருக்கிறவர்கள் நேர்மையாகவும் திறமையுடனும் இயங்குவார்கள். அந்த வகையில் ஷாருக்கானுக்கு பூஜா தட்லானி பணியாற்றி வருகிறார். இவர்தான் இந்த படத்தின் பணிகள் சிறப்பாக நடப்பதற்கு அச்சாணியாக இருந்தவர்.

 

இப்படத்தின் கதை விவாதம் நடைபெறுகிறது. இடையில் கோவிட் வருகிறது.. நான் தமிழ் திரையுலகில் ஆறு மாதத்திற்கு படத்தை இயக்கி ஏழாவது மாதத்தில் வெளியிட்டு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து ஜாலியாக சென்று கொண்டிருந்தேன். அதற்கு காரணம் தளபதி விஜய்.எட்டு மாதத்திற்குள் இந்த படத்தை நிறைவு செய்துவிடலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் கொரோனா காரணமாக இது மூன்றாண்டுகளுக்கு மேலானது.
கதை பேச பேச… பிரம்மாண்டமாக உருவானது. பட்ஜெட்டும் உயர்ந்தது. எனக்கு தெரிந்து அந்த தருணத்தில் அந்த பட்ஜெட்டிற்கு ஷாருக்கானும் கௌரி கானும் ஓகே சொன்னார்கள். அது மிகப்பெரிய முடிவு. அதற்காக இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்தில் வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என பேச்சுவார்த்தை நடந்த போது நான் விஜய் சேதுபதியை சொன்னேன். அவரை நேரில் சந்தித்துப் பேசினேன். அவரும் என்னை சௌகரியமான சூழலில் வைத்துக் கொண்டார். கதையைப் பற்றி நிறைய பேசினோம். இந்த படத்தில் அவரும் ஒரு ஹீரோதான். அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வருகிறார். அவர் தனக்கான பாதையை அவரே தேர்வு செய்து கொண்டு பயணிக்கிறார். எல்லோரும் அவருடன் பயணிப்போம். இந்த படத்தில் அவர் தன்னுடைய சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார்.

அடுத்ததாக படத்தின் இசையமைப்பாளராக யாரை பணியாற்ற வைப்பது என்று விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, என்னுடைய சகோதரரும், நண்பனுமான அனிருத்தை தொடர்பு கொண்டேன். படத்தின் பணிகள் குறித்து விவரித்து, ஒரே ஒரு மெட்டை எனக்காக போட்டு தாருங்கள். அதை ஷாருக்கிற்கு அனுப்பி அவரின் முடிவை அறிந்து கொள்கிறேன் என்றேன். உடனடியாக ‘சிங்க பெண்ணே சித்திரப் பூ..’ எனத் தொடங்கும் மெட்டை உருவாக்கி கொடுத்தார். அந்தப் பாட்டு வேற லெவலில் இருந்தது. அவர் இசையமைக்க தொடங்கினார். இந்த படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இருக்கிறது. அனிருத்துடன் பணியாற்றுவது என்பது வகுப்புத் தோழருடன் இணைந்து பணியாற்றுவது போல் எளிதானது.”

 

இறுதியாக பலத்த கரவொலிகளுக்கிடையே மேடை ஏறிய ஷாரூக்கான் ஆடல், பாடல், நகைச்சுவை பேச்சு என அமர்க்களப்படுத்தினார். அவர் பேசியதாவது:-

” தமிழ் திரையுலகில் இதற்கு முன் மணிரத்னம், சந்தோஷ் சிவன் ஆகிய இருவரை மட்டுமே எனக்கு தெரியும். ஜவான் படத்தின் மூலம் ஏராளமான தென்னிந்திய திரையுலக கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளின் அறிமுகமும், நட்பும் கிடைத்திருக்கிறது. நான் தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகத்திலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். விஜய் சேதுபதி என் ரசிகையை பழி வாங்கி விட்டதாக சொன்னார். அது நிச்சயம் நடக்காது. ஏனென்றால் அவர் என் ரசிகை. நான் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

எங்கள் பட தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே இயக்குநர் அட்லீ சொந்தமாக ஒரு படைப்பை உருவாக்கி இருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துக்கள். பெற்றோர்களாகியிருக்கும் அட்லீக்கும் பிரியாவிற்கும் வாழ்த்துக்கள். இந்தப் படத்தின் நடனத்திற்காக நான் பட்ட பாடு.. மறக்க இயலாது. இயக்குநர் அட்லி மரண மாஸ்- ஒளிமயமான விஷ்ணு- கம்பீரமான முத்துராஜ்- விறுவிறுப்பான ரூபன்-அட்டகாசமான விஜய் சேதுபதி- வித்தைக்காரன் அனிருத் என இளம் திறமையாளர்களின் கூட்டணியில் தயாராகி இருக்கிறது ‘ஜவான்’.

இயக்குநர் அட்லீ ‘ஜவான்’ படத்தில் வித்தியாசமான கோணத்தில் என்னை காட்சிப்படுத்தி இருக்கிறார். படத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் நீங்கள் திரையில் பார்க்கும்போது தான் புரியும். சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு மீண்டும் பிரியாமணி இப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் அனைத்து ரசிகர்களையும் கவரும். இந்த திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது ” என்றார்.

ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கௌரி கான் தயாரித்திருக்கிறார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE