‘செல்ஃபி’ – திரை விமர்சனம்
பொறியியல் கல்லூரியில் படிக்கும் கனலுக்கு (ஜி.வி.பிரகாஷ்) படிப்பில் அவ்வளவாக ஆர்வமில்லை. அப்பாவிடமிருந்து அவ்வப்போது பணம் கறக்கும் முயற்சியும் தடைப்பட, புதிதாக ஒரு வழி பிறக்கிறது. மேனேஜ்மென்ட் கோட்டாவில் கல்லூரிகளுக்கு ஆள் பிடித்துவிடும் வேலையைச் செய்ய ஆரம்பிக்கிறார். பணமும் பிரச்னைகளும் ஒரே நேரத்தில் சேர, கனல் என்ன ஆனார் என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறது படம்.
இதுவரை யாரும் தொடாத கதைக்களத்தை அறிமுகப்படுத்தி சுவாரஸ்யமான திரைக்கதையால் ஈர்த்திருக்கும் அறிமுக இயக்குநர் மதிமாறனுக்கு வாழ்த்துகள். ஜி.வி.பிரகாஷ் முதல் சங்கிலி முருகன் வரையிலான பாத்திரங்களின் பரிமாணங்களைக் கச்சிதமாகச் சொல்லியிருக்கிறார். ஒரு பாடாவதி பொறியியல் கல்லூரிச் சூழல் முதல் பெரிய மனிதர்களின் ‘வேறு பக்கங்கள்’ வரை நேர்த்தியாகச் சித்திரித்திருக்கிறார்.
நாயகன் கனலாக ஜி.வி.பிரகாஷ்குமார். பொறுப்பற்ற இளைஞனின் விடலைத்தனம், கோபம், குற்றவுணர்வு எனப் பல இடங்களில் இயல்பாக ஸ்கோர் செய்கிறார். உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத சுமாரான நடிப்பு, ஒரேமாதிரியான உடல்மொழி என்று தொடரும் கௌதம் மேனன் இதிலும் அதையே செய்திருக்கிறார். ஆனால் ஆச்சர்யமாக ‘ரவிவர்மா’ கேரக்டருக்கு அது பொருந்திப்போகிறது. படத்தில் சில காட்சிகளே வந்தாலும், மொத்த கவனத்தையும் ஈர்ப்பது பிரகாஷின் அப்பாவாக நடித்திருக்கும் வாகை சந்திரசேகர். நீண்டநாள்களுக்குப் பிறகு, தான் ஒரு அனுபவம் வாய்ந்த சிறந்த நடிகர் என்பதை நிரூபிக்கும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். முதல் படத்திலேயே இயல்பான நடிப்பால் மனதில் பதிகிறார், ஜி.வி.பிரகாஷின் நண்பராக நடித்திருக்கும் குணாநிதி. சங்கிலி முருகன், வித்யா பிரதீப், சுப்ரமணிய சிவா எனப் பலரும் தங்களுக்கான பாத்திரங்களைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். ஹீரோயின் வர்ஷா பொல்லாமா தனக்குக் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருந்தாலும் அந்தப் பாத்திரம் கதைக்குள் தேவையில்லாமல் திணிக்கப்பட்டிருப்பது நெருடல்.
பாடல்கள் பெரிதாய் ஈர்க்கவில்லை என்றாலும், பின்னணி இசையில் சமன் செய்துவிடுகிறார் ஜி.வி.பிரகாஷ். விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவும், இளையராஜாவின் படத்தொகுப்பும் படத்தை அதன் வேகம் குறையாமல் பார்த்துக்கொள்கின்றன.
எல்லாம் திரண்டு வந்தபின், ஏனோதானோவென அவசர கதியில் முடிக்கப்பட்டிருக்கும் படத்தின் இறுதிக்காட்சியே பெரும் பலவீனம். திரையரங்குக்கு வெளியே செல்லும் பார்வையாளர்களிடம் தாக்கம் ஏற்படுத்தி அனுப்புவதே இறுதிக்காட்சிதான். ஆனால் செயற்கையாகவும் அவசரமாகவும் நிகழும் அந்த இறுதிக்காட்சி, படத்துக்குச் சம்பந்தமில்லாமல் திடீரென்று தொடர்புபடுத்தப்படும் டைட்டில், இவை இல்லாமலிருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் செல்ஃபி.