‘800‘ – திரை விமர்சனம்
சுழற்பந்து வீச்சில் மாய வித்தை காட்டி டெஸ்ட் கிரிகெட் வரலாற்றில் சரித்திரம் படைத்த சாதனை நாயகன் முத்தையா முரளிதரன். இலங்கை அணிக்காக இந்த சாதனையையும், பல வெற்றிகளையும் குவித்திருந்தாலும் அடிப்படையில் முரளிதரன் ஒரு தமிழன்.
அவரது சொந்த வாழ்வே ’800’ திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. 2010ஆம் ஆண்டு இலங்கையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையே நடந்த கிரிக்கெட் போட்டியிலிருந்து படம் தொடங்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதுவரை 792 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்த முத்தையா முரளிதரன், இந்த பந்தயத்தில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இமாலய சாதனையை அறுவடை செய்துவிடுவார் என்ற சூழ்நிலையில் மொத்த மைதானமும் பரபரப்பாக இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் வீரகேசரா பத்திரிகை ஆசிரியர் முத்தையா முரளிதரனின் வாழ்வை அசைபோடுவதுபோல ஆரம்பிக்கும் படம், முரளிதரன் எதிர்கொண்ட சவால்கள், சாதனைகள், சோதனைகள் எல்லாம் கலந்து 2010 வரையிலான முத்தையா முரளிதரனின் கம்ப்ளீட் பயோகிராபியாக ரசிகர்களுக்கு திரை விருந்து வைக்கப்படுகிறது.
இதில் முத்தையா முரளிதரனாக வரும் மதுர் மிட்டல் நடிப்பில் மிரட்டல். கிட்டத்தட்ட முரளிதரனின் முகச்சாயல் மற்றும் உடல் மொழியில் ஆச்சர்யப்படுத்துவது அசத்தல்.
ஆரம்பத்தில் கனகச்சிதமாக வேகமெடுக்கும் திரைக்கதை ஒருக்கட்டத்தில் அங்குமிங்குமாக அலைபாய்ந்து ஆவணப்படம் போன்ற அயற்சியை ஏற்படுத்துகிறது. முரளிதரனின் வாழ்வை சொல்வதில் காட்டும் கவனத்தை திரைமொழி சுவாரஷ்யத்தில் காட்டியிருந்தால் வெகுஜன மக்களுக்கான படமாகவே மாறி இருக்கும். அதில் சற்றே சறுக்கி இருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி.
முரளிதரனின் பயோபிக்கை சொல்லும் அதே நேரத்தில் அவர் இலங்கை அணிக்காக விளையாடிய தருணங்களில் அங்கு நடந்த அரசியல் சூழல், ஈழத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய இரக்கமற்ற செயல்பாடுகள், போர்ச்சூழல்கள், இலங்கை அரசின் அடக்குமுறைகள் இவையெல்லாம் பூசி மெழுகப்பட்டிருப்பது நியாயமற்ற அதிருப்தி.
முரளிதரனின் கதையை சொல்லும் பத்திரிகை ஆசிரியராக நாசர், முரளிதரனின் தந்தை முத்தையாவாக வேலராமமூர்த்தி, சகோதரராக திலீபன், அர்ஜூனா ரணதுங்கவாக வரும் கிங் ரத்னம், முரளிதரனின் மனைவியாக மகிமா நம்பியார் அனைவருமே அவரவர்களுக்கான பங்களிப்பை சிறப்பாக செய்திருந்தாலும் சில கதாபாத்திரங்கள் அந்தரத்தில் தொங்குவது அதிருப்தி.
கதைக்களத்திற்கு பொருத்தமான ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு செம. அதேபோல் ஜிப்ரானின் பின்னணி இசை; பிரவின் கே.எல்லின் படத்தொகுப்பு என தொழில்நுட்ப கலைஞர்கள் படத்திற்கு முதுகெழும்பாய் உதவி இருக்கின்றனர். தத்ரூபமற்ற விஷுவல் எஃபக்ட் ஏமாற்றமே.
குறைகள் களையபட்டிருந்தால் சிக்ஸர் தூக்கியிருக்கும் இந்த ‘800’.