இயக்குனரை கலங்கவைத்த அமீர் : ‘மாயவலை’ நிகழ்த்தும் மாயம்
அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்க ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் நடிக்கும் படம் ‘மாயவலை’.
இப்படத்தில் சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் ‘தயா’ செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் சினேகன் பாடல்களை எழுத, ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. நிகழ்வில் இணை தயாரிப்பாளர் ராஜேந்திரன் பேசியதாவது:-
“அமீர் அண்ணாவும் நானும் தீவிரமான கமல் ரசிகர்கள். எப்போதும் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம். அமீர் அண்ணனிடமும் கமல் சாரிடமும் என்னைக் கொண்டு சேர்த்த சினேகனுக்கு நன்றி. இந்தப்படம் பற்றி எனக்குத் தெரியாது. அமீர் அண்ணனுடன் பயணிக்க வேண்டும் அவ்வளவுதான். அமீர் அண்ணனும் வெற்றிமாறன் அண்ணனும் இணைந்து ‘நார்கோஸ்’ மாதிரி ஒரு சீரிஸ் எடுக்க வேண்டும். அதில் நாங்களும் இருக்க வேண்டும். அது நடக்கும் என நம்புகிறேன்.”என்றார்.
நடிகர் தீனா பேசியதாவது:-
“நான் நிறையப்படங்களில் நடித்திருக்கிறேன். ஒரு சீன், இரண்டு சீன்தான் நடிப்பேன். வெற்றிமாறன் அண்ணன்தான் அதை மாற்றினார். அவருடன் ‘வட சென்னை’யில் நிறைய கற்றுக்கொண்டேன். நான் ஸ்டண்ட் மேன் கிடையாது; துணை நடிகர்தான். எனக்கு நடிப்பு கற்றுக்கொள்ள ஆசை. கூத்துப்பட்டறை போன்ற இடங்களில் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் வெற்றிமாறன் சார் படத்தில் நடித்ததே பெரிய அனுபவமாக இருந்தது. அதே போல்தான் அமீர் அண்ணன். இருவரும் எனக்கு நிறைய சொல்லித் தந்தார்கள். உண்மையாகவே அமீர் எனக்கு அண்ணன்தான். என்னைக் குடும்ப உறுப்பினர் போல பார்த்துக்கொள்வார். இந்தப்படத்தில் பணியாற்றிய எல்லோரும் நண்பர்கள்தான். படம் மிக நன்றாக வந்துள்ளது.”
நடிகர் வின்செண்ட் அசோகன் பேசியபோது,
“சினிமா மேல் இருக்கும் காதல்தான் அமீருக்கும் எனக்கும் பொதுவானது. அவர் என்னை எப்போதும் மதிப்பவர். வெற்றிமாறன் சாரின் ‘வட சென்னை’ படத்தில் அவடன் நடித்தது அனைவருக்கும் இன்றும் பிடித்த காட்சியாக உள்ளது. அமீர் அன்ணணுடன் இப்போது வரை நடித்தது எல்லாமே அடிதடி காட்சி தான். இந்தப்படம் வித்தியாசமானதாக அமைந்தது. வெற்றிமாறன் இப்படத்தில் வந்தது மகிழ்ச்சி”என்றார்.
தயாரிப்பாளர் ஜாஃபர் பேசியபோது, “அமீர் அண்ணனுடன் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது இந்தப்படம் ஆரம்பித்தது. அமீர் அண்ணன் வாழ்க்கையிலேயே ஆரம்பித்த 40 நாட்களில் ஷூட்டிங் முடித்த படம் இது மட்டும்தான். அடுத்து அவர் இயக்கும் படமும் எங்களுடையது தான். எங்கள் உரையாடல் எப்போதும் கலகலப்பாக இருக்கும். சினிமா பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டே இருப்போம். அவருடன் இணைந்து பயணிப்பது பெருமை”என்றார்.
நடிகை சஞ்சிதா ஷெட்டி பேசியதாவது:-
“சமுத்திரக்கனி சார்தான் ‘விநோதய சித்தம்’ பார்த்து அமீர் சார் கூப்பிடுகிறார், போய்ப்பார் என்றார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்படம் கோவிட் காலத்தில் உருவானது. என்னை மிக நன்றாக பார்த்துக்கொண்டார்கள். மிக போல்டாக நடித்திருக்கிறேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள். ஆர்யாவின் தம்பி சத்யா என்னுடன் இணைந்து நடித்திருக்கிறார், மிக அழகாக நடித்துள்ளார். அமீர் சாருடன் இணைந்து நடிக்கும் போது நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. அவரும் மிக அற்புதமாக நடித்துள்ளார். ராம்ஜி எங்கள் எல்லோரையும் நன்றாக காட்டியுள்ளார். வெற்றிமாறன் சாருக்கு நன்றி, அவர் இந்தப்படத்தில் இணைந்தது பெருமை”
பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது:-
“நானும் அமீர் அண்ணனும் இணைந்து பணிபுரிந்து பல நாட்கள் ஆகி விட்டது. நாங்கள் இணைந்த அனைத்து பாடல்களும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். எங்கள் படம் என்பதற்காக சொல்லவில்லை; இப்படம் பெரிய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். அமீர் அண்ணன் இந்தப் படத்தில் அழகாய் நடித்தது மட்டுமில்லாமல் மிக அழகாகவும் இருக்கிறார். பல ஆண்டுகளாக அவருடன் பணியாற்றி வருகிறேன். இந்த பந்தம் மென்மேலும் தொடரும் என்று நம்புகிறேன். இயக்குநர் வெற்றிமாறன் இங்கு இணைந்துள்ளது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய பலம். இந்தப் படம் மக்களிடையே ஆழமாக பதியும் என்று நம்புகிறேன்”
இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் பேசியபோது, “நீண்ட இடைவேளைக்குப் பிறகு படம் செய்துள்ளேன். வாய்ப்பு தந்த அமீருக்கு நன்றி. வெற்றிமாறன் அமீரை ராஜனாக காட்டினார். இதில் இன்னொரு விதமான ராஜனை காட்டியுள்ளேன். நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள். ஒரு இடத்தில் அமீரின் நடிப்பை பார்த்து கண் கலங்கிவிட்டேன். அந்த அளவுக்கு அருமையாக நடித்துள்ளார். வெற்றிமாறன் போன்ற தீவிரமான படைப்பாளி இந்தப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி.”என்றார்.