திரை விமர்சனம்

‘ஜப்பான் ‘ திரை விமர்சனம்

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தியின் 25-வது படமாக வெளியாகி இருக்கிறது ‘ஜப்பான்’. எளிய மனிதர்களின் வாழ்வியலை திரைக்கதை ஆக்குவதில் கெட்டிக்காரரான ராஜூமுருகன் இயக்கி உள்ள ‘ஜப்பான்’ எப்படி இருக்கிறது?…

நகைக் கடை ஒன்றில் 200 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்படுகிறது. நகை கடையில் கொள்ளையடித்த அந்த ஜெகதாள கில்லாடி கார்த்தி (ஜப்பான்) என கண்டுபிடிக்கிறது காவல்துறை. கொள்ளையடித்த பணத்தில் ஜாலியோ ஜிம்கானா என்று அலப்பறை நடத்தும் கார்த்தி, போலீஸ் போடும் ஸ்கெட்சில், சிக்காமல் எஸ்கேப் ஆகிக்கொண்டே இருக்கிறார். கார்த்தி – காவல்துறை கண்ணாமூச்சி விளையாட்டில் இறுதி கட்டம் என்ன என்பதற்கு விடை தருகிறது க்ளைமாக்ஸ்.

வழக்கமான பாணியிலிருந்து மாறி.. வித்தியாச கெட்டப், வில்லங்க பேச்சு என இதற்கு முந்தைய படங்களில் பார்த்திராத ரூட்டில் பயணித்திருக்கிறார் கார்த்தி. ஒரு பக்கம் விஜய் மில்டன், இன்னொரு பக்கம் சுனில் தலைமையில் போலீஸ் தனிப்படை தன்னை துரத்த, அவர்களுக்கு தண்ணி காட்டுவதும்.. நடிகை இமானுவேலுவிடம் காதலில் கிறங்கி உருகுவதுமாக கார்த்தியின் சேட்டை ஜொலிப்பு.

கதாநாயகி அணு இமானுவேலுக்கு அதிக வாய்ப்பு இல்லை. சொற்ப காட்சிகளில் வந்து காணாமல் போகிறார். போலீஸ் அதிகாரிகளாக வரும் சுனில், விஜய் மில்டன், கார்த்தியின் நம்பிக்கைக்குரியவராக வரும் வாகை சந்திரசேகர், இரண்டாம் பாதி படத்தின் திருப்பு முனைக்கு உதவி இருக்கும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் அவரவர்கள் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்.

தான் பணி செய்யும் படங்களில் தனித்து தெரியும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், இதில் எங்கே இருக்கிறார் என்று தேட வேண்டி உள்ளது அந்த அளவுக்கு ஒளிப்பதிவில் அவரது டச் இல்லை. ஜீ.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் எதுவும் ரசிக்கும்படி இல்லை. பின்னணியும் பரவாயில்லை ரகமே.

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ராஜூமுருகனின் படமா இது என்ற கேள்வி எழுகிறது. திருச்சி நகைக்கடையில் கொள்ளை அடித்த கொள்ளையன் முருகனின் கதைதான் ஜப்பான். அந்த கதையை அப்படியே இயக்கி இருந்தாலும் படம் பெரிய வெற்றியை பெற்றிருக்கும். ஆனால் சுவாரஸ்யமற்ற திரைக்கதை, ஜப்பான் வேகத்தை குறைத்து பார்வையாளர்களின் ஆர்வத்தை குறைக்கிறது.

இன்னும் சீரியஸாக மெனக்கெட்டிருந்தால் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் மெகா வெற்றியை அறுவடை செய்திருக்கும். செயற்கையான கதாபாத்திர வடிவமைப்பு, மனம் தொடாத சென்டிமென்ட், விறுவிறுப்பற்ற திரைக்கதை படத்திற்கு மைனஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE