‘லாக்கர்’திரை விமர்சனம்
சொகுசாய் வாழ்வதற்கு ஆசைப்படும் ஹீரோ பலரிடமிருந்தும் நூதன முறையில் பணத்தைக் கொள்ளையடிக்கிறான். அவன் வாழ்வில் திடுதிப்பென நுழைந்த அந்த பெண் கொஞ்ச நாளிலேயே காதலியாகிறாள். ஒரு கட்டத்தில் அவள், அவன் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதை தெரிந்துகொள்கிறாள். அவனை வெறுக்கிறாள். அதனால் அவன் இனி யாரையும் ஏமாற்றக்கூடாது என்ற முடிவுக்கு வருகிறான்.
சில நாட்களிலேயே நிலைமை தலை கீழாகிறது. ஏமாற்றி பணம் சம்பாதிப்பதை வெறுத்த அதே காதலி, அதே வழியில் ஏமாற்றி பணம் சம்பாதிக்க அவனைத் தூண்டுகிறாள். பணம் பறிக்க ஒருவரை குறிவைத்து அதற்காக ஸ்கெட்ச் போட்டும் தருகிறாள்.
அவளது மன மாற்றத்துக்கு காரணம் என்ன? அவள் யாரை ஏமாற்ற திட்டமிடுகிறாள்? அதற்கான பின்னணி என்ன? திட்டமிட்டதை செயல்படுத்தும்போது அவர்கள் சந்திக்கும் விளைவுகள் என்னென்ன? இப்படியான கேள்விகளுக்கு பதில் தரும் விதத்தில் திரைக்கதையமைத்து படத்தை இயக்கியிருக்கிறார்கள் என்.ராஜசேகரும், யுவராஜ் கண்ணனும்.
நாயகனாக விக்னேஷ் சண்முகம். ஷேர் மார்க்கெட் முதலீடு அது இதுவென தனது ஸ்மார்ட்டான அறிவைப் பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணத்தைக் கொள்ளையடிப்பது, அதை வைத்து குடி போதையில் மிதப்பது, காதலுக்காக தன் பாதையிலிருந்து மாறுவது, தான் நம்பியவரின் துரோகத்துக்கு ஆளாவது என தான் ஏற்ற கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.
நாயகி நிரஞ்சனா அசோகன் சினிமாவுக்கு புதுவரவு. நடிப்பில் அது தெரியாதபடி இயல்பாக நடித்திருப்பது படத்துக்கு பிளஸ். தங்கக் கட்டிகளை கொள்ளையடிக்க பரபரப்பாக காய் நகர்த்தும் காட்சிகளில் அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் துடிப்பான நடிப்பு ஈர்க்கிறது.
வில்லனாக வருகிற நிவாஸ் ஆதித்தனின் வில்லத்தனம் மிகமிக எளிமை!
நாயகியின் அப்பா, நாயகனின் நண்பர்கள் என இன்னபிற பாத்திரங்களை ஏற்றிருப்போரின் பங்களிப்பில் குறையில்லை.
அறிமுக இசையமைப்பாளர் வைகுந்த் சீனிவாசன் இசையில் நாயகனின் மனநிலையை பிரதிபலிக்கும் ‘வா பறப்போம் நிலை பறப்போம்’ பாடல் ரசிக்க வைக்கிறது. மெல்லிய சோகம் இழையோடும் ‘யாரோ போல்’ பாடல் இதம்!
தணிகைதாசனின் ஒளிப்பதிவு நேர்த்தி!
கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை கொள்ளையடிக்கும் காட்சிகள் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்திருக்கலாம்.
எடுத்துக் கொண்ட கதைக்கருவுக்கு இன்னும் கொஞ்சம் பலமான திரைக்கதை அமைத்திருந்தால் அது ‘லாக்கரில்’ நிரப்ப முடியாத அளவுக்கு வசூல் குவிக்கும் வாய்ப்பைத் தந்திருக்கும்.
நன்றி : சு.கணேஷ்குமார்