கீதா ஆடும் டான்ஸ் அட்டகாசம் : ‘சில நொடிகளில்’ விமர்சனம்
கிளி மாதிரி (கீதா) மனைவி இருந்தும் மயில் மாதிரி (யாஷிகா) இன்னொரு துணைக்கு ஆசைப்படும் பிரபல டாக்டர் ரிச்சர்டு ரிஷி. மனைவி இல்லாத நேரத்தில் மாடலான யாஷிகாவை வீட்டுக்கு அழைத்து உல்லாச உலகத்தில் மிதக்கிறார். அந்த நேரத்தில் திடீரென இறந்துபோகிறார் யாஷிகா. அதிர்ச்சியாகும் ரிச்சர்டு யாஷிகாவின் உடலை ஒரு இடத்தில் புதைக்கிறார்.
தன்னிடம் அன்பு காட்டாமல் டென்ஷனில் இருக்கும் ரிச்சர்டின் செயல்களில் சந்தேகம் அடைகிறார் மனைவி கீதா. ஒரு கட்டத்தில் இருவருக்கும் உரசல் ஆகி இல்லறம் டல்லறம் ஆகிறது. இதற்கிடையே பிணமாக புதைக்கப்பட்ட யாஷிகா உயிரோடு வந்து நிற்கிறார். இப்போது ரிச்சர்டு போலவே படம் பார்க்கும் பார்வையாளர்களின் வயிற்றிலும் அதிர்ச்சி உருண்டை உருள.. நடந்தது என்ன? நடப்பது என்ன? நடக்கப்போவது என்ன? என்ற கேள்விகளுக்கு விடை தருகிறது க்ளைமாக்ஸ்.
ஒரு பக்கத்தில் எழுதிவிடக்கூடிய சின்ன கதைதான். ஆனால் அதை திரைமொழி ஆக்கிய விதம் சுவாரஷ்யம். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரிச்சர்டுக்கு நடிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுத்துள்ள படம். அதை சரியாக பயன்படுத்திக்கொள்கிறார்.
படத்தை தயாரித்து நாயகியாக நடித்திருக்கும் கீதா, ‘புன்னகை பூ’ படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர். ‘சில நொடிகளில்’ கதாபாத்திரம் மூலம் கவனம் ஈர்க்கிறார். படத்தில் இவரது கதாபாத்திரம் ஒருக்கட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி அதிர்ச்சி கொடுப்பது செம டிவிஸ்ட். க்ளைமாக்சுக்கு முந்தைய ஒரு காட்சியில் கீதா ஆடும் பாலே டான்ஸ் அட்டகாச ரகம்.
மாடலாக வரும் யாஷிகா மயக்குகிறார். விபத்துக்கு பிறகு நடித்திருக்கும் படம். ஆரம்ப சில காட்சிகளில் யாஷிகாவின் வளைவு நெளிவுகளில் படம் பார்க்கும் இளசுகளின் நெஞ்சம் விபத்துக்குள்ளாவது நிச்சயம்.
லண்டனில் கதை நடப்பதுபோல் உள்ளதால் ஒளிப்பதிவில் ஆங்கில படத்தின் சாயல். பின்னணி இசை ஓகே ரகம்.
முதல் பாதி படத்தில் கிளுகிளுப்பும் இரண்டாம் பாதி படத்தில் சஸ்பென்சும் இருப்பது படத்திற்கு பலம்.
‘சில நொடிகளில்..’ ஒருமுறை பார்க்கலாம்!