‘அன்னபூரணி’ திரை விமர்சனம்
அரைத்த மாவையே அரைக்காமல் வித்தியாசமான ஒரு கதை.. திரைக்கு வருவதும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளும் சினிமாவில் அத்திபூத்தது போலதான் மலரும். அதனை செய்திருக்கிறது ‘அன்னபூரணி’
கண்ணை கட்டிவிட்டு ஏதாவது ஒரு உணவை ஊட்டிவிட்டால் அதன் சுவை, திடம், மணம் சொல்லக்கூடிய அளவுக்கு சமையல் திறனில் கெட்டிக்காரி நயன்தாரா. ஆச்சாரம் மிகுந்த, சித்தாந்தம் சிதறாத ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை அச்யுத் குமார் ஸ்ரீரங்கம் கோயிலில் பிரசாதம் செய்பவர்.
இந்தியாவே மெச்சும் பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என்பதுதான் நயன்தாராவின் கனவு. ஆனால் கேட்ரிங்கில் அசைவமும் சமைக்க வேண்டி வரும் என்பதால் அது நம் குடும்பத்துக்கு ஆகாது என்று மறுக்கிறார் நயன்தாராவின் தந்தை. தனது லட்சியத்தில் கொஞ்சமும் பின்வாங்கக்கூடாது என்று நினைக்கும் நயன்தாரா வீட்டை விட்டு வெளியேறுகிறார். குடும்பத்துக்கும் நயன்தாராவுக்கும் இடையே விழுந்த விரிசல் சரியானதா? நாயகியின் கனவு நனவானதா என்ற எதிர்பார்ப்புகளுக்கு விடை தருகிறது க்ளைமாக்ஸ்.
தான் விரும்பியதை படிக்க தடையாக இருக்கும் தந்தையை எதிர்த்து நிற்கும் மன போராட்டம், முதன் முதலாக அசைவம் சமைக்க காட்டும் தயக்கம், கோழி வெட்டுவதை பார்த்து வரும் மயக்கம், விபத்தொன்றில் சுவை அறியும் சக்தியை இழந்துவிட்டதை அறிந்து துடிப்பது என கதையின் மொத்த சுமையையும் சுமந்து தூள் கிளப்பி இருக்கிறார் நயன்தாரா.
நயன்தாரா தனது லட்சியத்தில் இருந்து சறுக்கும் நேரத்தில் தத்துவமும் தன்னம்பிக்கையும் தந்து அவரது உயர்வுக்கு வழிகாட்டும் ஒளியாக ஜெய்யின் கதாபாத்திரம் நைஸ். நயன்தாராவின் தந்தையாக அச்யுத்குமார், தாயாக ரேனுகா, பாட்டியாக சச்சு, ஜெய்யின் தந்தையாக கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட கதாபாத்திரங்களும் சிறப்பு. கிங்ஸ்லியின் காமெடி மருந்துக்கும் உதவவில்லை.
பின்னணியில் மெனக்கெட்டு வேலை செய்திருக்கும் தமன், பாடல்களில் சொதப்பி ஏமாற்றுகிறார். சத்யன் சூர்யனின் ஒளிப்பதிவு ஈர்ப்பு. எடிட்டர் பிரவீன் ஆண்டனி இரண்டாம் பாதி படத்தின் இழுவைக்கு இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.
ஆரம்ப 15 நிமிட காட்சிகளும், இரண்டாம் பாதி 30 நிடங்களும் சீரியல் பார்க்கும் உணர்வை தருகிறது. இருப்பினும் அதிக அளவில் சொல்லப்படாத ஒரு கதையை ஆபாசம் இல்லாமல் கொடுத்திருக்கும் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணாவை பாராட்டலாம்.
மொத்தத்தில் முதல் பாதியில் மட்டும் சுவையூட்டுகிறாள் இந்த அன்னபூரணி.