திரை விமர்சனம்

‘கட்டில்’ திரை விமர்சனம்

ஆக்‌ஷன் என்ற பெயரில் குடலை உருவி மாலையாக போடும் காட்சிகள் நிறைந்த வெட்டு குத்து படங்கள், தோட்டாக்களை டன் கணக்கில் அனுப்பி இரத்த ஆறு ஓட வைக்கும் மெகா பட்ஜெட் படங்களுக்கு மத்தியில் உறவின் உன்னதம் பேசும், பாரம்பரியத்தின் பெருமை பேசும், வாழ்வியலை கண்முன் நிறுத்தும் படமாக வெளிவந்திருக்கும் படம்  ‘கட்டில்’.

தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்த வீட்டையும் அதில் உயிராய் வாழ்ந்துகொண்டிருக்கும் அஃறினை பொருட்களையும் அதன் மதிப்பு தெரியாமல் விற்க துடிக்கும் ஒரு குடும்பம். அதில் விதி விலக்காக கடைசி தம்பி கணேசன் மட்டும் உடன்பட மறுக்கிறார். ஆனாலும் வீடு விற்கப்படுகிறது. கையறுந்த நிலைக்கு தள்ளப்படும் கணேசன், பாரம்பரிய ஜீவனாக இருக்கும் கட்டிலை மட்டும் காப்பாற்றிக்கொள்ள துடிக்கிறார். அப்படி அந்த கட்டிலில் என்னதான் இருக்கிறது? அந்த கட்டிலை பாதுகாக்க கணேசன் படும் போராட்டம்? கணேசனின் இழப்பிற்கும் போராட்டத்திற்கும் க்ளைமாக்ஸ் தரும் தீர்வு என்ன என்பதே கட்டிலின் கதை.

படத்தை இயக்கி, தயாரித்து, தாத்தா, அப்பா, மகன் என்று மூன்று கதாபாத்திரங்களிலும் நடித்து படத்தின் பெரும்பாலான பங்கை தூக்கி சுமந்து படம் பார்ப்பவர்களின் மனதில் ஈரத்தை வரவைக்கும் நாயகன் கணேஷ்பாபு பாராட்டுக்குரியவர்.

படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியதுடன் படதொகுப்பையும் செய்திருக்கிறார் பிரபல எடிட்டர் பீ.லெனின்.

நான்காம் தலைமுறை மகனாக விதார்த் சிறப்பு தோற்றத்தில் வருகிறார். இவரது பார்வையில்தான் படத்தின் கதை, தொடங்கி முடிகிறது. சிறப்பு தோற்றம் என்றாலும் சிறந்த பங்களிப்பை செய்திருக்கிறார். சில இடங்களில் கலங்கவும் வைக்கிறார்.

மூன்றாம் தலைமுறை கணேசனின் மனைவியாக சிருஷ்டி டாங்கேவுக்கு முதல்முறையாக கனமான கதாபாத்திரம். நடிப்பதற்கும் நல்ல வாய்ப்பு.

கலை பொருட்கள் விற்பனை கூடம் நடத்துபவராக எழுத்தாளர் இந்திரா சவுந்திரராஜன், கணேசனின் தாயாக  கீதா கைலாசம், கணேசனின் மகனாக மாஸ்டர் நிதிஷ், ஆட்டோ டிரைவராக சம்பத்ராம், கர்ப்பிணியாக செம்மலர் அன்னம் என மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில்  “கோயிலிலே குடியிருந்தோம் நாங்கள்…”,   “வயவா” பாடல்கள் இதம். “எல்லாரும் இந்த பொருள் இத்தனை வருஷம் பழசுன்னு சொல்வாங்க. நீங்க மட்டும்தான் இந்த கட்டிலுக்கு 250 வயசுன்னு சொல்றீங்க” என்பதுபோன்ற வசனம் ஈர்க்கிறது.

ஒளிப்பதிவு ஏனோ மோசமான வானிலை போல மந்தமாக உள்ளது. பின்னணி இசையில் அடிக்கடி ரயில் ஓடும் சப்தம், சைரன் சப்தங்கள் கொஞ்சம் ஓவர் டோசேஜ்.

சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் இந்த  ‘கட்டில்’ கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE