‘நந்திவர்மன்’ – திரை விமர்சனம்
தொல்பொருள் ஆய்வுத் துறையின் உயரதிகாரி ஒருவர் தலைமையில், அந்த துறையில் தேர்ந்த ஒரு இளம்பெண் பங்கேற்க, ஒரு குழு அனுமந்தபுரம் என்ற கிராமத்திற்கு சென்று சேர்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் பூமிக்குள் புதையுண்டு போன கோயிலொன்றை தோண்டியெடுத்து ஆராய்ச்சி செய்வது அந்த குழுவின் நோக்கம்.
அந்த நோக்கத்துக்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அதையெல்லாம் சமாளித்து ஆராய்ச்சிப் பணிக்கு அஸ்திவாரம் தோண்டுகிறது அந்த குழு.
பூமியை பிளக்கத் துவங்கியதிலிருந்தே சிலபல அமானுஷ்ய சம்பவங்கள் அட்டனன்ஸ் போடுகின்றன. அந்த இடத்தில் தொடர்ச்சியாக ஒருசிலர் மர்மமான முறையில் உயிரிழக்க, ஆராய்ச்சிக் குழுவினருக்கு பயம் தொற்றுகிறது. அந்த நேரமாகப் பார்த்து, ஆராய்ச்சிக்கு தலைமையேற்றவர் காணாது போக சூடு பிடிக்கிறது கதையோட்டம்.
கோயில் புதையுண்டிருக்கும் அந்த பூமியில் நிகழும் அமானுஷ்ய சம்பவங்களின் பின்னணியை, நடக்கும் உயிரிழப்புகளுக்கான காரணத்தை அடுத்தடுத்த காட்சிகள் விவரிக்கின்றன. ஆராய்ச்சியின் முடிவு என்ன என்பதே கதையின் நிறைவு. இயக்கம் ஜி.வி. பெருமாள் வரதன்
நெகுநெகு உயரமும் முறுக்கிய மீசையும் இறுகிய முகமுமாக நாயகன் சுரேஷ் ரவி. காவல்துறை அதிகாரியாக வருகிற அவர் நடக்கும் மரணங்களின் பின்னணியை தோண்டித் துருவி காரணத்தையும் காரணகர்த்தாவையும் கண்டறிவது, கிடைக்கிற கேப்பில் அகழ்வாராய்ச்சிப் பெண்ணுடன் ஆசை வார்த்தைகள் பகிர்வது என ஏற்ற பாத்திரத்தில் முடிந்தவரை நேர்த்தியான நடிப்பைத் தந்திருக்கிறார்.
நாயகியாக ஆஷா வெங்கடேஷ். அவரது நீள் வட்ட முகத்தின் சதைப்பிடிப்பான இதழ்கள் கவர்ச்சியின் சதவிகிதத்தை உயர்த்த, காட்சிகளுக்குத் தேவையான பயத்தையும் பதற்றத்தையும் அந்த அகன்ற விழிகள் அழகாய் வெளிப்படுத்துகின்றன.
அகழ்வாராய்ச்சிக் குழுவிற்கு தலைமையேற்று, சந்தேகப்படும்படியான வில்லத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பின் காணாது போய் வேறொரு நெருக்கடிக்குள் சிக்குபவராக போஸ் வெங்கட். கதையின் குறிப்பிடத்தக்க அந்த பாத்திரத்துக்கு தனது தேர்ந்த நடிப்பால் பலம் சேர்த்திருக்கிறார்.
நிழல்கள் ரவி, கஜராஜ் என கனமான பாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பு கச்சிதம். அவர்களோடு ஆடுகளம் முருகதாஸ், மீசை ராஜேந்திரன், கோதண்டம் என இன்னபிற நடிகர்களும் பாத்திரம் உணர்ந்து பங்களிப்பு தந்திருக்கிறார்கள்.
ஜெரார்ட் பெலிக்ஸின் பின்னணி இசையும், சேயோன் முத்துவின் ஒளிப்பதிவுவும் காட்சிகளை மெருகூட்டியிருக்கின்றன.
மன்னன் நந்திவர்மன், அவனை வீழ்த்தும் பலசாலி, கண்ணுக்குத் தெரியாத ஆயுதம் என விரியும் முன்கதை சுவாரஸ்யம்தான். மறுப்பதற்கில்லை. அதே சுவாரஸ்யத்தை நிகழ்காலக் கதையிலும் கொண்டு வந்திருந்தால் நந்திவர்மன் வசூலில் முந்தியிருக்கலாம்.
நன்றி : சு.கணேஷ்குமார்