தனுஷ் மிரட்டும் ‘கேப்டன் மில்லர்’ – விமர்சனம்
நூறாண்டுகளுக்கு முந்தைய காலகட்டம், அதற்கேற்ற களம் ,கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்திருக்கும் நடிகர்கள், அதற்கு முதுகெலும்பென உழைத்திருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஒட்டுமொத்த யூனிட்டும் ஒன்று சேர்ந்து வெற்றியை உறுதி செய்திருக்கும் படம் ‘கேப்டன் மில்லர்.
சுதந்திர இந்தியாவுக்கு முன்பு நடக்கும் கதை இது. ஒரு மலை கிராமத்தில் இருக்கும் ஆதி குடிகள். அவர்களை அடிமையாக நடத்தும் குறுநில மன்னர்கள் மற்றும் வெள்ளையர் அரசாங்கம். இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞந்தான் தனுஷ். பட்டாளத்தில் சேர்ந்தால் மரியாதை கிடைக்கும் என்று நினைத்து வெள்ளை அரசாங்கத்தின் இரானுவத்தில் சிப்பாயாக சேர்கிறார்.
பயிற்சியெல்லாம் முடித்ததும் முதல் வேலையாக வரும் அசைன்மெண்டுக்கு செல்லும்போதுதான் அதிர்ச்சி காத்திருக்கிறது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபடும் மக்களை கொன்று குவிக்கும் வேலைதான் அது. வெள்ளையனின் மிரட்டல் உத்தரவுக்கு அடிபணிந்து சுட்டுத்தள்ளுகிறது தனுஷின் துப்பாக்கி. போராடிய மக்கள் எல்லாம் இரத்த வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் தனுஷை குற்றவாளியாக உணர வைத்து நடுநடுங்க வைக்கிறது. இதனால் ராணுவ மேஜரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறி ஒரு கொள்ளை கும்பலுடன் சேர்கிறார்.
நியாயத்திற்காக போராடும் கொள்ளை அடிக்கும் அந்த கும்பலுடன் சேர்ந்தபிறகு தனுஷுக்கு ஒரு புதிய வேலை ஒப்படைக்கப்படுகிறது. அது என்ன வேலை? தனுஷ் அதை செய்து முடிக்கிறாரா இல்லையா என்பதுதான் கதை.
எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதுவாக உருமாறும் திறன் கொண்ட தனுஷ், இதிலும் மில்லர் கேரக்டரில் கச்சிதமாக தன்னை பொருத்திக்கொள்வது சிறப்பு. ப்ரியங்கா மோகனுடன் மலரும் ஒருதலை காதலில் மருகுவது, தன் நாட்டு மக்களையே கொன்று விட்டோமே என்ற குற்ற உணர்வில் கலங்குவது, வெறி பிடித்த வெள்ளையர் கூட்டத்தை தனி ஆளாக நின்று துவம்சம் செய்வது என தனுஷ் ஆகச்சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார்.
இராஜ பரம்பரையையாக இருந்தாலும் தீண்டாமைக்கு எதிராக நின்று ராஜபோக வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு போராட்ட பெண்மனியாக உருவெடுக்கும் கேரக்டரில் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் நாயகி பிரியங்கா மோகன்.
தனுஷின் அண்ணனாக வெள்ளையர்களுக்கு எதிராக போராடும் சுதந்திர போராளியாக சிவராஜ்குமார் சிறப்பு சேர்க்கிறார். அவரை இன்னும் அதிகமாக பயன்படுத்தி இருக்கலாம். கொள்ளை கும்பலின் தலைவனாக வரும் குமரவேல், அந்த கூட்டத்துடன் சேர்ந்து போராடும் புரட்சி பெண்ணாக நிவேதிதா சதீஷ், கூட்ட தலைவனாக குமரவேல், ராஜாவாக ஜெயபிரகாஷ், கவர்னரின் மகனாக நடித்தவர், காளிவெங்கட் என அத்தனை கதாபாத்திரங்களும் நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.
திண்டாமை, சாதிய பாகுபாடுக்கு எதிராக சாட்டை சுழற்றும் வசனங்கள் இந்த காலத்துக்கும் பொருந்துவதாக சபாஷ் சொல்ல வைக்கிறது. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாய் அமைந்திருக்கிறது. அந்த காலத்தை கண்முன் நிறுத்தும் ஒளிப்பதிவு, கலை இயக்கும், ஆடை வடிவமைப்பு என அத்தனை தொழில் நுட்ப கலைஞர்களும் அயராத உழைப்பு கொட்டிக் கொடுத்துள்ளனர்.
வரலாறு பின்னணி கொண்ட கதையை இயக்குவதென்பது எளிதான காரியம் அல்ல. அதை சாத்தியமாக்கி இருக்கும் இயக்குனர் அருண் மாதேஷ்வரனுக்கு பாராட்டுகள். குறிப்பாக சாதிய வன்மம். தீண்டாமைக்கு எதிரான வசனங்களுக்கு சபாஷ்.
தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ஆக்ஷன் பிரியர்களுக்கும் அன்லிமிட் விருந்து படைக்கிறது இந்த ‘கேப்டன் மில்லர்’.