‘சிங்கப்பூர் சலூன்’ விமர்சனம்
பெரிய ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆகவேண்டும் என்பது நாயகன் ஆர்.ஜே.பாலாஜியின் சின்ன வயது கனவு. அவரது கனவுக்கு விதை போட்டவர் உள்ளூரில் முடி திருத்தகம் வைத்திருக்கும் லால். வாலிப வயதை தொட்ட பிறகும் பாலாஜியின் லட்சியம் தடமாறவில்லை. பல எதிர்ப்புகள், தடைகளை தாண்டி நகரத்தில் பெரிய சலூனை தொடங்குகிறார். ஆனால் அதை நடத்தமுடியாத சூழ்நிலை பாலாஜிக்கு வில்லனாக அமைகிறது.
தனது எதிர்காலம் இருண்ட காலமாகிவிட்டதை எண்ணி தற்கொலை முடிவை கையில் எடுக்கிறார். அடுத்தடுத்து நிகழும் திரைக்கதை திருப்பங்கள் க்ளைமாக்ஸ் வரை நகர்த்தி செல்வதே ‘சிங்கப்பூர் சலூனின்’ மிச்ச கதை.
ஒரு மலையாள சினிமாவின் சாயலோடு தொடங்கும் கதை.. ஃபீல் குட் படமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கொஞ்ச நேரத்திலேயே நமது நம்பிக்கையை பொய்யாக்கி வேறு வேறு ரூட்டில் தறிகெட்டு ஓடி ஏமாற்றுகிறது.
ஓபனிங் சீனே தூக்க மாத்திரங்களை விழுங்குவதற்கு முன் பார்வையாளர்களுக்கு விரக்தியையும், கடந்துவந்த பாதயையும் அசை போட தொடங்கும் ஆர்.ஜே.பாலாஜி பேசிக்கொண்டே இருப்பது அலுப்பு.
லட்சியம், கனவு, புண்ணாக்கு என்பதெல்லாம் ஒரு கட்டத்தில் மறைந்து எங்கெங்கோ திசை திரும்பும் திரைக்கதை மனதில் ஒட்டவில்லை.
பாலாஜியின் கஞ்சத்தன மாமனாராக வரும் சத்யராஜ் கதாபாத்திரம் அடிக்கும் லூட்டி ஓரளவுக்கு கலகலப்பூட்டினாலும் ஒரு கட்டத்தில் அதுவே ஓவர் டோசேஜாக மாறுவது சறுக்கல். குறிப்பாக சிறுநீர் கழிக்காமல் 4 பீர் குடித்தால் பீருக்கு கட்டணமில்லை என்ற பந்தயத்தில் கலந்துகொண்டு சத்யராஜ் செய்யும் காமெடியில் பவர் ஸ்டார், பிரேம்ஜியின் ஸ்டைல்.
பாலாஜியின் குருவாக வரும் லால், நம்பிக்கை தரும் தந்தை கதாபாத்திரத்தில் தலைவாசல் விஜய் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளனர். சத்யராஜின் நண்பராக ஒய்.ஜி.மகேந்திரன் பேசும் “பொம்மனாட்டிக்கு பிறந்த கம்மனாட்டி” போன்ற வசனம் எரிச்சல்.
பாலாஜியின் பள்ளிக்கூட வயது காதல், இஸ்லாமியர்களின் சுன்னத் சடங்கை படமாக்கி கேலி செய்திருப்பதெல்லாம் ஓவரோ ஓவர். சலூன் நடத்துவதற்காக பணம் புரட்ட முடியாமல் தவிக்கும் சூழ்நிலையில் 15 ஆயிரத்துக்கு ஃபாரீன் சரக்கு அடிக்கும் பாலாஜி, மாமனாருக்கு ஊத்தி கொடுப்பதெல்லாம்… டூ மச்.. த்ரீ மச்.. ஃபோர் மச்….
ஒளிப்பதிவும், பின்னணி இசையும் குறைவைக்கவில்லை. கதைப்படி லாலின் கைவண்ணம் படத்தின் எடிட்டருக்கும் இருந்திருந்தால் கதையை கச்சிதமாக்கியிருக்கலாம்.
முதல் பாதி படம்கூட பரவாயில்லை இரண்டாம் பாதியில் சலூன் இருக்கும் இடத்தில் குடி அமர்த்தப்படும் மக்கள், அப்பகுதி இளைஞர்கள் டான்ஸ் ஷோவில் ஜெயிக்க பாலாஜி உதவுவது, இயற்கை பாதுகாப்பு… என்று தலையை சுற்றி மூக்கை தொடுவது போல க்ளைமாக்ஸை ஒரு வழியாக தொடுகிறார் இயக்குனர் கோகுல்.
‘சிங்கப்பூர் சலூன்’ சரியாக வெட்டவில்லை.