‘சிக்லெட்’ விமர்சனம்
பெற்றவர்களை ஏமாற்றி வயசுக்கோளாறில் பிள்ளைகள் செய்யும் தவறான செயல்கள் எல்லோரையும் பாதிக்கும் என்ற போதனையை சொல்லும் படம்தான் ‘சிக்லெட்’.
மூன்று இளைஞர்கள், மூன்று இளம்பெண்கள் இவர்களுக்குள் ஏற்படும் இனக்கவர்ச்சி… வீட்டைவிட்டு வெளியேறி தங்கள் துணையுடன் ‘ஜாலிபாப்’ (?…) சாப்பிட ஆசைப்பட்டு ஒரு நாளை குறித்து உல்லாச பயணம் செல்கின்றனர்.
பெண் பிள்ளைகளை காணாமல் பதறும் பெற்றோர்கள் அவர்களை தேடும் முயற்சியில் இறங்குகின்றனர். அப்போதுதான் தங்களது பிள்ளைகள் அவரவர் துணையுடன் ஜல்சா செய்ய போட்டிருக்கும் பிளான் தெரிகிறது. இது நடந்துவிட்டால் வாழ்க்கையே திசை மாறிப்போகுமே என்று பதறி அவர்களை பின் தொடர்கின்றனர். பிள்ளைகளோ அவர்களுக்கு டேக்கா கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகின்றனர்.
அந்த பெண்களின் நிலை என்னவாகிறது? பெற்றோர்கள் அவர்களை காப்பாற்றுகிறார்களா இல்லையா என்பதே கதை.
படத்தில் ஸ்ரீமன், மனோபாலா உள்ளிட்ட ஒருசில கதாபாத்திரங்கள் தவிர எல்லாமே புதுமுகங்கள். இனினும் பல படங்கள் நடித்ததுபோன்ற பழுத்த (பிஞ்சிலேயே) நடிப்பை கொடுத்திருக்கின்றனர். சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா, சுரேகா வாணி உள்ளிட்டோரின் காமரசம் சொட்டும் கிளுகிளு நடிப்பு இளசுகளுக்கு இருட்டுக்கடை அல்வாவாக இனிக்கும்.
அப்பா கதாபாத்திரத்தில் ஸ்ரீமன், மெடிக்கல் ஷாப் வைத்திருக்கும் மனோபாலா, பாட்டி, அம்மா கதாபாத்திரத்திரங்களின் நடிப்பு சிறப்பு. ஆடை குறைப்பு மட்டுமின்றி வசனமும் ‘கவர்ச்சியாக’ இருக்கிறது.
க்ளமாக்ஸுக்கு முந்தைய இருபது நிமிடங்கள் வரை டேட்டிங், லூட்டி, பார்ட்டி என்று ‘ஏ’ ரகமாக நகரும் படம் அதன் பிறகு அட்வைஸ், செண்டிமெண்ட், பாசம், கண்ணீர் என்று பார்வையாளர்களை சைலண்ட் மோடில் வைத்து ”எப்படி எனது சாமர்த்தியம்?..” என்பது போல படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் முத்து. எஸ்.எஸ்.பி. பிலிம்ஸ் சார்பில் ஸ்ரீனிவாசன் குரு தயாரித்திருக்கும் இந்த படத்துக்கு கொலஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாலமுரளி பாலு இசை அமைத்திருக்கிறார்.
கிளுகிளுப்பு ப்ரியர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கும் ‘சிக்லெட்’ இது.