‘இ மெயில்’ விமர்சனம்
அறிவியல் வளர்ச்சியில் சமூக ஊடகம் அமுதசுரபியாக இருந்தாலும் வில்லங்கத்தை விலைக்கு வாங்கும் இடமும் அதுவாகத்தான் இருக்கிறது. இந்த ஒன்லைனை கிளுகிளுப்பும் விறுவிறுப்பும் கலந்து ‘இ மெயிலை’ தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் எஸ்.ஆர்.ராஜன். படத்தின் தயாரிப்பாளரும் இவரே.
இமெயிலில் வரும் ஒரு லிங்க்கை க்ளிக் செய்யும் நாயகி ராகினி திவேதிக்கு ஆன்லைன் விளையாட்டு ஆசை காட்டுகிறது. விளையாட விளையாட பணமும் வர அந்த மோகத்தில் மிதக்கிறார். அது தனக்கு வீசப்பட்ட தூண்டில் என்பதை அறியாத ராகினி மீது அதே விளையாட்டு கொலை குற்றவாளி ஆக்குகிறது. இந்த சூழ்ச்சியின் பின்னணியில் இருப்பது யார்? நடப்பது என்ன? என்பதை பரபரப்புக்கு பஞ்சமின்றி கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
படத்தின் பெரும்பாலான பாரத்தை சுமந்திருப்பது ராகினி திவேதிதான். தன்னை கொலை பழியில் மாட்டி விட்டவர்களை வேட்டையாட களமிறங்கும் காட்சிகளில் பெண் புலியாய் மிரட்டி இருக்கிறார். ஆக்ஷன் மட்டுமின்றி தன் இளமையின் செழுமைகளையும் பந்தி வைத்து கிறங்கடிக்கிறார்.
ராகினியின் காதல் கணவராக அசோக்கும் தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். நாயகிக்கே கதையில் அதிக முக்கியத்துவம் உள்ளது என்பதை அறிந்திருந்தும் எந்த ஈகோவும் பார்க்காமல் நடித்திருப்பது பாராட்டுக்குரியது.
ராகினியின் தோழிகளாக வரும் நான்கு பேரும் கவர்ச்சியில் இளசுகளுக்கு இளமை விருந்து படைக்கின்றனர். செல்வம் மாதப்பனின் ஒளிப்பதிவும் ஜுபினின் பின்னணி இசையும் ஓகே ரகம்.
படத்தில் கிளாமர் இருந்தாலும் மக்களுக்கு விழிப்புணர்வு தருவது போன்ற ஒரு படத்தை தயாரித்து இயக்கி இருப்பதற்காக எஸ்.ஆர்.ராஜனை பாராட்டலாம்.