திரை விமர்சனம்

 சிங்கிளாக வந்த சிங்கம் : ‘சைரன்’ – திரை விமர்சனம்

இந்த வெள்ளிக்கிழமை போட்டிக்கு எந்தப் படமும் இல்லை; தியேட்டர் போடும் கவலையும் இல்லை; படமும் புது களத்தில் பார்வையாளர்களின் இதயம் அள்ள, சிங்கிளாக வந்த சிங்கமாக ‘சைரன்’ கலெக்‌ஷனையும் கைத்தட்டல்களையும் ஒட்டுமொத்தமாக வரவு வைக்க வந்துள்ளது.

கதை என்ன?

கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஜெயம் ரவி, பெற்ற மகளை பார்க்க 14 ஆண்டுகள் கழித்து பரோலில் வெளியே வருகிறார். ஆசை ஆசையாக மகளை பார்க்கும் கனவில் மிதக்கிறார். அப்பாவை கொலைகாரனாக பார்க்கும் மகளோ தந்தையின் கண்ணில் தென்படவே  வெறுக்கிறார். இந்த பாசப்போராட்டம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, காஞ்சிபுரத்தை ஆட்டிப்படைக்கும் அரசியல் பெரும் புள்ளியான அழகம் பெருமாள் கொல்லப்படுகிறார். அழகம் பெருமாளை போட்டுத் தள்ளியது ஜெயம் ரவிதான் என்று சந்தேகிக்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி சுரேஷ். குற்றவாளி நான் இல்லை என்று ஜெயம்ரவி போராட; கொலைகாரன் நீதான் என்று கீர்த்தி சுரேஷ் நிரூபிக்க போராட.. அடுத்தடுத்து தடதடக்கும் காட்சிகள் க்ளைமாக்ஸை நெருங்க வைக்கிறது.

ரொம்ப நாள் கழித்து வித்தியாசமான கதைக்களத்தில் செண்டிமெண்ட், ஆக்‌ஷன், காமெடி என ஜெயம்ரவி ஜொலிக்கிறார். செய்யாத குற்றத்திற்காக  ‘உள்ளே’ போனவர், வெளியே வந்தபிறகு அந்த குற்றத்தை செய்து பார்க்கும் நோக்கத்தில் எதிராளிகளை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் காட்சிகள் ரவியின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.

குழந்தையாக விட்டுச்சென்ற மகளை 14 வருடங்கள் கழித்து அவளின் தரிசன நொடிகளுக்காக காத்திருக்கும் தருணங்கள் நெஞ்சில் இருக்கும் ஈரத்தை கண்ணில் கடத்தும் சோக கவிதை. காதல் மனைவி அனுபமா பரமேஷ்வரனுடன் காதல் ரசம் சொட்டுவது, ஷேடோ போலீஸாக தன்னுடன் வரும் யோகி பாபுவை வம்பில் மாட்டிவிடும் காமெடி என மொத்த படத்திலும் கலக்கும் ஜெயம்ரவிக்கு வாச பூங்கொத்தும் நேச கைகுலுக்கலும்.

“இடது பக்கம் பார்த்துட்டு வலது பக்கம் திரும்புங்க..” என்று உப்புக்கு சப்பாணியா ஒரு சீன் சொன்னாலே  ‘அட’ என ஆச்சர்யப்படுத்தும் நடிப்பு ராட்சசி கீர்த்தி சுரேஷ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிப்பில் வேட்டையாடி இருக்கிறார். பெண் புலி போலீஸாக இதயம் ஈர்க்கிறார். க்ளைமாக்ஸில் மகள் குறித்தான ஜெயம்ரவியின் ஏக்கத்தை தீர்த்து வைக்கும் அந்த காட்சி.. ஆஹா ஆகச் சிறப்பு!

பல படங்களுக்கு பிறகு யோகிபாபு மீண்டும் காமெடி பாபுவாக கலகலப்பூட்டுகிறார். சீரியஸாக போய்க்கொண்டிருக்கும் படத்தில் டன் கணக்கில் ரிலாக்ஸை கொட்டி தியேட்டரை சிரிப்பு திருவிழாவாக மாற்றுவது சபாஷ்!

காது கேளாத வாய் பேசமுடியாத கேரக்டரில் ஜெயம்ரவியின் மனைவியாக ஒரு சில காட்சிகளே வந்தாலும் மனம் முழுக்க நிறைகிறது அனுபமா பரமேஷ்வரனின் கதாபாத்திரம். சாதி வெறியிலும் ஆணவத்திலும் ஊறி திளைக்கும் டிஎஸ்பியாக சமுத்திரகனி நிறைவு. சாதிய வன்மத்தை பார்வையாலும் வார்த்தையாலும் கடத்துவது கட்சிதம். அழகம்பெருமாள் கேரக்டர் வழக்கமான ஒன்று.

ஜெயம்ரவியின் மகளாக வருபவர் அருமையான தேர்வு. அப்பா மீதான வெறுப்பு, அதே அப்பாவின் பாசத்திற்காக ஏங்குவது என நடிப்பில் அழகாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

படத்தின் பெரிய பலம் ஒளிப்பதிவும் வசனமும். க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் ஒளிப்பதிவாளர் செல்வகுமாரின் உழைப்பு சிறப்பு.   “சாதி இல்லைன்னு சொல்றவனிடம் அவனோட சாதிய தேடாதீங்க” என்பது போன்ற வசனம் மிக ஆழமானது. அதற்காக பாராட்டுகள். ஜீ.வி.பிரகாஷின் பின்னணியும், ஷாம் சி எஸ்ஸின் பாடல் இசையும் ஓகே ரகம்.

பல இடங்களில் லாஜிக்கில் சறுக்கு மரம் ஏறி இருப்பதுதான் படத்தின் பெரிய பலவீனம். ஆனாலும் அதை கவனிக்க விடாமல் செய்யும் திரைக்கதையின் பரபரப்பும் விறுவிறுப்பும் இயக்குனர் ஆண்டனி பாக்யராஜின் கெட்டிக்காரத்தனம்.

‘சைரன்’…. போலாம் ரைட்.

  • தஞ்சை அமலன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE