சமூகத்திற்கு தேவையான சரக்கு ‘கிளாஸ்மேட்ஸ்’ : விமர்சனம்
அடித்தட்டு, நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வை, எதிர்காலத்தை தள்ளாட வைத்துக்கொண்டிருக்கும் ‘குடி’, குடிகளை எவ்வாறு கெடுத்து குட்டிச்சுவராக்கிக்கொண்டிருக்கிறது என்ற கருத்தை ‘தெளி’யவைக்கும் படமாக வெளிவந்திருக்கிறது ‘கிளாஸ்மேட்ஸ்’.
வாடகைக் கார் ஓட்டுநரான அங்கையர்கண்ணனும் மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு வெட்டி ஆபீஸராக சதா ‘ஊத்திக்கொண்டே’ இருக்கும் சரவண சக்தியும் உறவினர்கள். அதைத்தாண்டி ‘கிளாஸ்மேட்ஸ்கள்’. போதைக்கு அடிமையான இவர்களது கெட்டப்பழக்கம் இவர்களது தனிப்பட்ட வாழ்க்கையையும் குடும்பத்தையும் எப்படி பாதிக்கிறது என்பதே படத்தின் கதை.
தினசரி மது அருந்தினால்தான் அன்றைய நாள் நகரும் என்கிற அளவுக்கு அதற்கு அடிமையாகி இருப்பவர்களின் குடும்பங்கள் பொதுவெளியில் எவ்வாறெல்லாம் அவமானங்களைச் சந்திக்க நேரிடும், குடிநோய்க்கு ஆளானவர்களின் தீராத அனத்தல், பினாத்தல் ஆகியவற்றுடன் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் போதையில் நிதானமிழந்து செய்யும் அவச்செயல்கள் எப்படிப்பட்டவை, அவற்றைகுடும்பத்தினர் எந்த எல்லை வரைசகித்துக்கொள்வார்கள், அவமானங்களுக்குப் பிறகு குடியிலிருந்து மீள நினைத்தால் அதற்குத் தீர்வு இருக்கிறதா, இல்லையா என்பது உட்பட குடிநோயாளிகளின் உலகைஅருகிலிருந்து கவனிப்பதுபோல் ஜனரஞ்சகமாகத் திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் சரவண சக்தி.
அங்கையர்கண்ணனும் சரவணசக்தியும் குடித்துவிட்டுச் செய்யும் கூட்டணி அளப்பறைகள் எடுபடுகின்றன. ஒரு புதுமனைவிக்குரிய ஏக்கங்களை நடிப்பின் வழி நச்சென்று வெளிப்படுத்துகிறார் பிரணா ஹோம்லி. மூத்த தாய்மாமனாக வரும் மறைந்த மயில்சாமி கத்திக் கத்தி நடித்தாலும் வசன நகைச்சுவை வழியாக மனம்விட்டுச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்.
கொளுத்தும் வெயிலில் கோட் சூட்டுடன் வலம் வரும் துபாய் ரிட்டர்ன் சாம்ஸ், குடிநோய் பிரச்சினையால் அல்லல் படுகிறவர்களை ‘டீ-அடிக்ஷன்’ செய்கிறேன் பேர்வழி என்று அவர்களுடன் பழகி, பெரும் ‘குடிமக’னாக மாறிப்போவதும் அவர், டி.எம். கார்த்திக்குடன் இணைந்து செய்யும் ரகளைகளும் கூடுதல் நகைச்சுவைத் தோரணங்களாக கதையோட்டத்தில் சிதறியிருக்கின்றன. அவ்வப்போது தோன்றி, கிளைமாக்ஸில் எதிர்பாரா திருப்பத்தைக் கொண்டுவரும் ‘அயலி’ அபி நட்சத்திராவின் நடிப்பும் சிறப்பு.
ஒரு குடிகார தகப்பனால் பெண் பிள்ளைகள் தவறான வழியை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது போன்ற கருத்து தவறாக சித்தரிக்கப்படுவது படத்தின் மைனஸ்.
‘கிஸாஸ் மேட்ஸ்’ சமூகத்திற்கு தேவையான சரக்கு.