நிகழ்வுகள்

‘ரெபல்’ படத்தில் 200 பேரை பொளந்து கட்டும் ஜீ.வி.பிரகாஷ்

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெபல்’. இப்படம் வரும் மார்ச் 22ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்நிகழ்வினில் ஸ்டுடியோ கிரீன் நிர்வாக இயக்குநர் தனஞ்செயன் பேசியதாவது:-

“ரெபல் திரைப்படம் இயக்குநர் நிகேஷ் உடைய ஒரு கனவு. இந்திய சினிமாவின் ரெபெல் ஜீவியை வைத்து ஒரு அருமையான படத்தைத் தந்துள்ளார். ஜீவி மிகப்பெரிய போராளி, தொடர்ந்து இசை, நடிப்பு என அவரது சுறுசுறுப்பு உழைப்பு, அர்ப்பணிப்பு அளப்பரியது. இப்படத்திற்கு அவர் தந்த உழைப்பு மிகப்பெரியது. அவரைத்திருப்திப் படுத்துவது தான் எங்கள் வேலையாக இருந்தது. தயாரிப்பாளர் ஞானவேல் இங்கு வேலை காரணங்களால் வரமுடியவில்லை. மும்பையில் ஸ்டூடியோ க்ரீன் சார்பில் சில திரைப்படங்கள் ஆரம்பிக்கிறது அதனால் தான் வரமுடியவில்லை. அவருக்கு இந்த வருடம் மிகச் சிறப்பான வருடமாக அமையும். இங்கு வாழ்த்த வந்துள்ள எங்கள் இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களுக்கு நன்றி. ஒரு இயக்குநராக மட்டுமில்லாமல், அவர் ஒரு நிறுவனம் மூலமாக 10க்குமேற்ப்பட்ட அறிமுக இயக்குநர்களைத் திரை உலகிற்குத் தந்துள்ளார். அவரளவிற்கு இல்லாவிட்டாலும் அது போல் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இந்தப்படம் மூலம் நிகேஷ் பெரிய அளவில் சாதிப்பார்”

இயக்குநர் நிகேஷ் பேசியதாவது:-

“நான் கதை சொல்லப் போனபோது எனக்கு 24 வயதுதான். ஆனால் ஞானவேல் ராஜா சார் என்னை நம்பி கதை கேட்டார். 10 நாள் ஷூட் செய்து அவரிடம் காட்டினேன். அதன் பிறகு படம் முடியும் வரை என்னிடம் கேள்வியே கேட்கவில்லை. ஞானவேல் ராஜா சாருக்கு இந்த நேரத்தில் என் நன்றியைக் கூறிக்கொள்கிறேன். இப்படத்தின் அனைத்து பணிகளிலும் எப்போதும் உறுதுணையாக இருந்த தனஞ்ஜெயனுக்கு நன்றி. ஜீவி பிரகாஷ் அண்ணா என்னை நம்பி இந்தக்கதையை கேட்டார். கேட்டவுடன் தமிழுக்கான கதையில் நான் நடிக்கிறேன் என்று வந்தார். அவருக்கு என் நன்றி. இந்த மொத்தப்படமும் அவர் மீதுதான் பயணிக்கிறது. நாயகி மமிதா பைஜு, மிக ஆழமான அழுத்தமான கேரக்டர். ஆனால் அதைப் புரிந்து நடித்து தந்தார்.  பா ரஞ்சித் அண்ணா என் படத்தின் பூஜைக்கு வந்தார், இப்போது இங்கு வாழ்த்த வந்துள்ளா. கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், என ஒவ்வொருவரும் அற்புதமாக நடித்துள்ளனர். அருண் மிக அற்புதமான ஒளிப்பதிவைத் தந்துள்ளார்.
உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி.”

இயக்குநர் – நடிகர் சுப்பிரமணிய சிவா பேசியதாவது:-

“முதல் படம் ஒரு அரசியல்மயப்படுத்தப்பட்ட படமாக, பொதுவுடைமை கருத்தைத் தைரியமாகச் சொல்லும் படமாக இயக்கியிருக்கிறார் நிகேஷ். முதல் படத்தில் இதை செய்வது மிகப்பெரிய விசயம். தமிழை முதல் படத்தில் இவ்வளவு தைரியமாகப் பேசி எடுப்பது பெரிய விசயம் நிறைய ஹீரோக்கள் இதைச் செய்யப் பயந்திருப்பார்கள். ஆனால் மிகத் தைரியமாகச் செய்துள்ள ஜீவிக்கு நன்றி. அவர் சமூகத்தில் சின்ன சின்ன விசயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். இவரால் மட்டும் தான் இப்படி ஒரு படத்தில் நடிக்க முடியும். இந்தப்படம் பார்க்கும் போது எனக்கு நாயகன் தான் ஞாபகம் வந்தது. அந்தப்படமும் மும்பையில் தமிழர்களின் கஷ்டங்களைப் பேசும் படம். ரனினிக்கு பில்லா மாதிரி ஜீவிக்கு இது பெயர் சொல்லும் ஆக்சன் படமாக இருக்கும். ரஞ்சித் எனக்கு மிகப்பிடித்த இயக்குநர். தமிழ் சினிமாவில் ஆர் பி சௌத்திரிக்குப் பிறகு அதிக இயக்குநர்களை அறிமுகப்படுத்தி வருகிறார் ரஞ்சித் அவருக்கு என் நன்றி. இந்தப்படம் தான் உண்மையான  ‘மஞ்சும்மள் பாய்ஸ்’. தமிழ் பசங்க கேரளா போவது தான் கதை. ஒரு அருமையான போராளிப்படம்.”

நாயகி மமிதா பைஜு பேசியபோது. “இது எனது முதல் தம்ழிப்படம். எனக்கு மனதுக்கு மிக நெருக்கமான படம். ஜீவி பிரகாஷ் சார் அருமையான கோ ஸ்டார். எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். எல்லோரும் அர்ப்பணிப்புடன் வேலை பார்த்துள்ளனர். இந்தப்படம் அருமையாக வந்துள்ளது, தியேட்டரில் எல்லோரும் பார்த்து ஆதரவு தாருங்கள்”என்றார்.

சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது:-
“இந்தப்படத்தின் முதல் பிரதியைப் பார்த்தேன். முதல் காட்சியிலேயே ஒளிப்பதிவாளர் மிரட்டி விட்டார். ஒரு போராளிக்கதை அதை தனித்த கண்ணோட்டத்தில், பார்க்கும் திறமையுடன் இருக்கக்கூடியவர். ஆனால் முழுக்க முழுக்க கமர்ஷியலான ஒரு படாமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் நிகேஷ். இது தெறிக்கும் கமர்ஷியல் படம். ஜீவி பிரகாஷ் சார் முழுக்க ஆக்சன் ஹீரோவாக மாறியிருக்கிறார். படத்தில் 200 பேரை அடிக்கிறார். ஆனால் அதை அத்தனை நம்பும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அந்தக்காட்சிக்கு தியேட்டரில் கைதட்டல் பறக்கும். ஞானவேல் ராஜா சாரின் நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது. இடையில் சில வருடங்கள் அவருக்குப் பல கஷ்டங்கள் இருந்தது. ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்த வருடம் அவருக்கு மிகச் சிறப்பாக இருக்கும். இப்படம் மூலம் ஒரு அருமையான புதுமுக இயக்குநர் கிடைத்துள்ளார். ஜீவியுடன் அடுத்தடுத்து இரண்டு படங்கள் செய்கிறேன். இரண்டுமே அட்டகாசமாக வந்துள்ளது. பா ரஞ்சித் சார் வந்துள்ளார். அவரின் சமீபத்திய தயாரிப்பான ஜே பேபி படத்தை நான் தான் ரிலீஸ் பண்ணியிருக்கிறேன். ஒரு படத்தில் புதுமுகங்கள் பெயர் பெற வேண்டும் என்பதற்காக, உழைக்கும் அவர் பண்பு வியக்கவைத்தது. தொடர்ந்து சிறப்பான படங்களைப் புதுமுகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். ரெபல் படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும்.”

 

இயக்குநர் பா ரஞ்சித் பேசியதாவது:-

“இப்படத்தின் விஷுவல், டிரெய்லர், எடிட்டிங் எல்லாமே மிக நன்றாக இருக்கிறது. முல்லைப் பெரியாறு பகுதியில், இரு மாநிலங்கள் கலக்கும் பகுதியில் அங்குள்ள பிரச்சனையைப் பேசும் பின்னணியில், இந்தக்கதையை செட் செய்துள்ளார்கள். வாழ்த்துக்கள். ஜீவியை எனக்கு  ‘தங்கலான்’ மூலமாகதான் தெரியும். எல்லோரும் அவரை நல்ல மனிதன் எனச் சொல்வார்கள். ஆனால் நேரில் பழகியபிறகு தான் தெரிந்தது, மிக மிக நல்ல மனது கொண்ட மனிதர். அவர் இன்னும் நிறைய ஜெயிக்க வேண்டும், நிறையப் பேருக்கு நல்லது செய்ய வேண்டும். தயாரிப்பாளர் ஞானவேல் பலரது வாழ்வில் மிக முக்கியமான மனிதராக இருந்துள்ளார். என் வாழ்வில் அவர் முக்கியமானவராக இருந்துள்ளார். இந்தப்படத்தில் நிறைய முக்கியமான மனிதர்கள் பங்கேற்றுள்ளார்கள். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள். இன்றைய சினிமாவில் சின்ன படங்களைக் கொண்டு சேர்ப்பது என்பது மிகக் கஷ்டமாகத்தான் இருக்கிறது, இந்த நிலையில்தான், சக்திபிலிம் சக்திவேலன் தொடர்ந்து நல்ல படங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். அவர் இந்த வேலையை நிறையச் செய்ய வேண்டும். நிகேஷ் இப்படத்தில் இருமொழியைப்பிரச்சனையைக் கவனமுடன் பேசியிருப்பார் என நம்புகிறேன்.”

படத்தின் நாயகன் ஜீவி பிரகாஷ் பேசியதாவது:-

“இங்கு எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் என் நன்றிகள். ரஞ்சித் சாருடன் பணியாற்றும், தங்கலான் மிரட்டலான படமாக வந்திருக்கிறது. அவருடன் அவர் தயாரிப்பில் இன்னொரு படம் செய்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. சக்தி அண்ணா ரெபல் படம் பார்த்துவிட்டார், அதனால் தான் இவ்வளவு சந்தோஷமாகப் பேசுகிறார். இந்தப்படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. தமிழ் பற்றிப் பேசும் கதை. இது என்னிடம் வந்தபோது சந்தோஷமாக இருந்தது. இயக்குநர் நிகேஷ் அவரது சொந்தக்காரரின் வாழ்வில் நடந்த உண்மைக்கதையை எடுத்து திரைப்படமாகச் செய்துள்ளார். மமிதா பைஜு மிக அழகாக இந்த ரோலைச் செய்துள்ளார். ஆதித்யா இந்தப்படத்தின் மையமே அவன் தான். அவனது கேரக்டர் சரியாக அமைந்ததால்தான், இந்தப்படமே சரியாக வந்துள்ளது. அட்டகாசமாகச் செய்துள்ளான். நடிகர் வினோத் போனில் பேச ஆரம்பித்தால் அரை மணிநேரம் ஆனாலும் வைக்க மாட்டான், நல்ல பையன். நன்றாக நடித்துள்ளான். மிக நீண்ட வருடம் கழித்து ஸ்டூடியோ கிரீனுடன் படம் செய்கிறேன். அவர்தான் டார்லிங்க் படத்தில் நடிகனாக என் வாழ்வை ஆரம்பித்து வைத்தார். அவருக்கு இந்த வருடம் வெற்றிகரமாக அமையும். நிகேஷ் படம் பார்த்துவிட்டு என் தயாரிப்பில் படம் செய்ய அட்வான்ஸ் தந்துள்ளேன். அத்தனை சிறப்பாகச் செய்துள்ளார். ஓஃப்ரோ மிகச்சிறப்பான பின்னணி இசை தந்துள்ளார். சித்துக்குமார் கேரளா சாங் செய்துள்ளார். அதை நான்தான் டிரெய்லரில் வைக்கச் சொன்னேன். வெங்கடேஷ் என்னிடம் எல்லாம் பேச மாட்டான் எப்போதும் பெண்களுடன் தான் பேசுவான். நல்ல நடிகன். எல்லோருமே மிக அர்ப்பணிப்போடு உழைக்கும் போது அந்தப்படம் சிறப்பாக வரும். மமிதா பைஜு அழகாக தன் கதாபாத்திரத்தைப் புரிந்து நடித்துள்ளார். ஆண்டனி அண்ணா லவ் ஸ்டோரி சொல்வார் பிரமிப்பாக இருக்கும். ஒரு குழுவாக எல்லோரும் விரும்பி உழைத்திருக்கும் படம். தமிழ் உரிமை பற்றிப் பேசும் அழுத்தமான படம் உங்கள் எல்லோருக்கும் இப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும் ”

இப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, பட தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE