திரை விமர்சனம்

‘வெப்பம் குளிர் மழை’ – விமர்சனம்

பெத்த பெருமாள், பாண்டியம்மாள் தம்பதிக்கு திருமணமாகி ஐந்தாண்டுகள் ஆனபின்னும் குழந்தை பிறக்கவில்லை. அதனால் பெத்த பெருமாள் ஊராரின் ஏச்சுப் பேச்சுகளுக்கு ஆளாகி அவமானப்படுகிறார். இன்னொரு பக்கம் பாண்டியை, பெத்த பெருமாளின் அம்மா ‘மலடி’ என்ற சுடு சொல்லால் காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த சிக்கலிலிருந்து மீண்டு வர பாண்டி துணிச்சலான ஒரு முடிவை எடுக்கிறாள். அது வேறொரு ஆபத்தான சூழ்நிலைக்குள் அவளை தள்ளி விடுகிறது. பெத்த பெருமாளின் நிம்மதியையும் கெடுக்கிறது. குழந்தையில்லா பிரச்சனையில் குறை பெத்த பெருமாளிடமா? பாண்டியிடமா?

இந்த விவகாரத்தில் பாண்டி எடுத்த அந்த துணிச்சலான முடிவு என்ன?

அவள் சந்திக்கும் ஆபத்தான சூழ்நிலை என்ன? அதிலிருந்து அவளால் மீண்டுவர முடிந்ததா? இல்லையா?

உணர்வுமிக்க இந்த போராட்டத்திற்கு உயிரோட்டமான திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் பாஸ்கல் வேதமுத்து.

பாண்டியாக படத்தை தாங்கிப் பிடிக்கும் கனமான பாத்திரத்தில், களையான முகத்துக்கு சொந்தக்காரரான இஸ்மத் பானு. குழந்தையில்லா பிரச்சனைக்கு தீர்வை யோசிக்காத, மருத்துவ ஆலோசனை பெறுவது பற்றி சிந்திக்காத கணவனிடம் மாட்டிக் கொண்டு, எந்த நேரமும் வன்மத்துடன் வார்த்தைகளை வீசிக் கொண்டிருக்கிற மாமியாரிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிற கேரக்டருக்கு தேர்ந்த நடிப்பால் தெம்பூட்டியிருக்கிறார்.

பல இடங்களில் வேதனை நிரம்பி கண்ணீர் தளும்பி நின்றாலும், தேவையான தருணங்களில் தைரியமாகப் பேசி தன் பாத்திரத்துக்கு கம்பீரம் சேர்த்திருக்கிறார். படுக்கையறையில் கண்ணியம் மீறாத ரொமான்ஸ் காட்சிகளில் இஸ்மத் காட்டும் ஈடுபாடும், வெட்கச் சிரிப்பும் ஆஹா!

கதையின் நாயகனாக, மாடுகள் கருத்தரிக்க சினை ஊசி போடுகிறவராக திரவ். புதுமுக நடிகர் என்றாலும் அது தெரியாதபடி கோபம், வலி, இயலாமை, வெகுளித்தனம், விரக்தி என அத்தனை உணர்வையும் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். தொழுவத்தில் மாட்டிடம் மன்னிப்பு கேட்டு கலங்கும் காட்சியில் மனதில் நிற்கும். ரொமான்ஸிலும் தான் சளைத்தவரில்லை என்பதை சில தருணங்களில் நிரூபித்துள்ளார்.

‘புள்ள பெத்துக்க துப்பில்ல’ என்று சொல்லிச் சொல்லி மருமகளைத் திட்டித் தீர்க்கிற கொடுமைக்கார மாமியார் பாத்திரத்தில் ரமா. தொண்டை வறண்டு போகிற அளவுக்கு கத்திக் கொண்டேயிருக்கிறார். அதுவே அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு போதுமானதாக இருக்கிறது.

ஊர் வம்பு பேசித் திரியும் பெரியவராக எம்.எஸ்.பாஸ்கர். வழக்கம்போல் நேர்த்தியான நடிப்பைத் தந்திருப்பவர், நாக்கைத் துருத்தி சிரித்து வித்தியாசமும் காட்டியிருக்கிறார்.

மற்ற நடிகர், நடிகைகளும் தங்களது பாத்திரத்தை பொருத்தமான நடிப்பால் மெருகேற்றியிருக்கிறார்கள்.

சங்கர் ரங்கராஜன் இசையில் பாடல்கள் தகுந்த தருணங்களில் தென்றலின் இதம் தந்து கடந்து போகின்றன. பிரித்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு தரம்!

கருத்தரிக்கத் தயாராகும் மாடுகளை இணை சேரவிடாமல், சினை ஊசி மூலம் கருத்தரிக்க வைக்கும் நடைமுறையை குழந்தையின்மை பிரச்சனையை மையமாக கொண்ட இந்த கதையில் இணைத்திருப்பது இயக்குநரின் நுட்பமான புத்திசாலித்தனம்.

குழந்தையின்மை பிரச்சனைக்கு ஏராளமான தீர்வுகள் வந்துவிட்டபோதும், அதையெல்லாம் நாடிப் போகாமல் பழமையில் ஊறிக்கிடக்கும் மனிதர்களால் தம்பதிகள் படுகிற வேதனைகளை அதன் தன்மை மாறாமல் பதிவு செய்திருப்பதற்காக இயக்குநர் பாஸ்கல் வேதமுத்துவை பாராட்டலாம்.

நன்றி – சு.கணேஷ்குமார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE