திரை விமர்சனம்

‘ரத்னம்’ – விமர்சனம்

மக்களுக்கு நல்லவன் ரவுடிகளுக்கு கெட்டவன் என்ற ‘நாயகன்’ காலத்து கேரக்டர் விஷால்.  எம்.எல்.ஏவான சமுத்திரக்கனிக்கு அடியாளாகவும் “நல்ல மனசுல்ல” ரவுடியுமாக இருக்கும் அவரது கேரக்டர் பெயர்தான் ரத்னம். இவருக்கு வேலூருக்கு நான்காவது முறையாக நீட் தேர்வு எழுதவரும்  பிரியா பவானிசங்கர் மீது இனம்புரியாத அன்பு  வருகிறது.

நாயகியை கொலை செய்ய, ஆந்திர மாநில எல்லைப் பகுதியின் தாதாக்களாக இருக்கும் பீமா ராயுடு (சுப்பு ராயுடு,ராகவா ராயுடு  என்ற மூன்று சகோதரர்களும் முயல, அதை முறியடிப்பதோடு, மல்லிகாவைப் பாதுகாப்பதையே முழுநேர பணியாகக் கொள்கிறார் ரத்னம்.

ரத்னத்திற்கும் மல்லிகாவைக் காக்க ஏன் இவ்வளவு சிரத்தையெடுக்கிறார், தாதாக்கள் ஏன் மல்லிகாவைத் துரத்துகிறார்கள், இறுதியில் ரத்னம் தாதாக்களை அழித்தாரா போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது  ‘ரத்னம்’.

ஆக்‌ஷன் படத்துக்கு அட்டகாசமாக பொருந்தி துவம்சம்  செய்திருக்கிறார் விஷால். சென்டிமென்ட் காட்சிகளில் தன் உடல்மொழியால் மாறுபட்ட நடிப்பை வழங்க முயன்று பாஸ் ஆகியிருக்கிறார். உணர்ச்சிக்குவியலாக உலாவரும் மல்லிகா கதாபாத்திரத்தை, நன்றாக உள்வாங்கி திரையில் கொண்டுவந்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். முக்கியமாக, ஒருபக்கம் காதல், இன்னொரு பக்கம் உயிர் பயம் எனத் தத்தளிக்கும் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். தொடக்கத்தில் மட்டும் சுவாரஸ்யம் தரும் சமுத்திரக்கனி கதாபாத்திரம், ஏனைய இடங்களில் பெரிதாகத் தாக்கம் தரும் வகையில் எழுதப்படவில்லை. ஆனாலும், கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்.

முரளி சர்மா, ஹரீஷ் பேரடி, வேட்டை முத்துகுமார் என மூன்று வில்லன்களில் முரளி சர்மா மட்டும்தான் ஓரளவிற்குப் பயமுறுத்துகிறார். விஜயகுமார், ஜெயபிரகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், மோகன்ராம் போன்ற துணை கதாபாத்திரங்கள், ரத்த வெள்ளத்திற்கு இடையே தலைமட்டும் காட்டுகிறார்கள். இரண்டு இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார் யோகி பாபு. உருவக் கேலி காமெடிகளை அவர் இன்னும் தூக்கிக்கொண்டு சுற்றுவது சோகம்.

வில்லன்கள் இன்ட்ரோ, ஹீரோ இன்ட்ரோ, ஹீரோயின் இன்ட்ரோ, இருவருக்குமான பின்கதை எனச் சிதறலாக ஆரம்பித்து, ஹீரோயினைக் காக்க ஹீரோ களமிறங்கும் இடத்தில் ஒருவழியாக மையக்கதையை வந்தடைகிறது இந்த ‘ஹரி டைப்’ படம். அதன்பின், ஒரு காதல் காட்சி, ஒரு பாடல், ஒரு காமெடி காட்சி, ஒரு சண்டைக்காட்சி, ஒரு சென்டிமென்ட் காட்சி, ரிப்பீட்டு.. என இறுதிக்காட்சி வரை திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்கள். யாரென்றே தெரியாத பெண்ணிற்காக பக்கத்து மாநில தாதாக்களையே எதிர்க்கக் களமிறங்கும் ஹீரோ என்ற மாஸ் ஆக்‌ஷனுக்கான எவர்க்ரீன் ஒன்லைன், அதே எவர்க்ரீன் சென்டிமென்ட் என அயற்சியையே தந்திருக்கிறார் இயக்குநர்

சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இடைவேளை கார் சேஸிங் ஆக்‌ஷன் காட்சி அட்டகாசமாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஆங்காங்கே சில சென்டிமென்ட் காட்சிகள், ஹரி ஸ்டைலிலான பரபரப்பும் ஒர்க் அவுட் ஆகி, திரைக்கரைக்கு வலுசேர்த்திருக்கின்றன. ஆக்‌ஷன் காட்சிகள் கொடுக்க வேண்டிய விறுவிறுப்பு நன்றாகக் கடத்தப்பட்டிருக்கிறது என்றாலும், படம் முழுவதும் அது மட்டுமே இருப்பது அலுப்பு.

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரனின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் கூடுதல் மெனக்கெடுதலைப் பார்க்க முடிகிறது. ஹரி படங்களுக்கே உரிய ‘பரபர’ திரைமொழியிலிருந்து விலகி, சிறிது நிதானத்தைக் கொண்டு வந்தவிதத்தில் கவனிக்க வைக்கிறது டி.எஸ்.ஜேவின் படத்தொகுப்பு. தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் ‘உயிரே என் உயிரே’ மட்டும் ஓரளவிற்கு ஆறுதல் தருகிறது. பின்னணி இசையில்தான் மிகுந்த ஏமாற்றமளிக்கிறார். சண்டை வடிவமைப்பில் கனல் கண்ணன், பீட்டர் ஹீன், திலீப் சுப்புராயன், விக்கி ஆகியோரின் உழைப்பின் பலனைப் பார்க்க முடிகிறது.

மொத்தத்தில் ’ரத்னம்’ ஆக்‌ஷன் ப்ரியர்களுக்கு ரத்தினம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE