பெண் புலியாக மிரட்டும் வரலட்சுமி : ‘சபரி’ – திரை விமர்சனம்
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடிப்பதுதான் வரலட்சுமியின் ஸ்பெஷல். ‘சபரி’யும் அந்த பட்டியலில் இணையும் படமாக வெளிவந்துள்ளது.
கதை…
சிறு வயதிலிருந்தே தாய் பாசத்தில் வளர்ந்த வரலட்சுமியின் அம்மா அல்பாயுசில் போய்ச்சேர, சித்தியின் கட்டுப்பாட்டுக்கு ஆளாகிறார். இதனிடையே கணேஷ் வெங்கட்ராமை காதலித்து கரம்பிடிக்கிறார். அமைதிப்பூங்காவாக சென்று கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கையில் புயல் வீசுகிறது. கணேஷ் வெங்கட் ராமுக்கு அவரது கம்பெணி முதலாளி மகளுடன் கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்கிறார் வரலட்சுமி. இதனால் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று குழந்தையுடன் தனி வாழ்க்கை வாழ்கிறார்.
இதற்கிடையே இரண்டாவது அதிர்ச்சி காத்திருக்கிறது வரலட்சுமிக்கு. சிறையிலிருந்து தப்பிக்கும் மனநிலை பாதித்த மைம் கோபி, “ உன் குழந்தைக்கு நான்தான் தகப்பன்” என்று வில்லனாக வந்து நிற்கிறார். மைம் கோபிக்கும் வரலட்சுமியின் குழந்தைக்கும் என்ன சம்பந்தம்? கொலை வெறியுடன் துரத்தும் அவரிடமிருந்து குழந்தையை காப்பாற்ற வரலட்சுமி நடத்தும் போராட்டமே மிச்ச கதை.
வரலட்சுமியின் அதிர்ஷ்டமா? அல்லது கதை தேர்வு செய்யும் அவரது அறிவா என்று தெரியவில்லை கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படங்களாகவே அமைகிறது வரலட்சுமிக்கு. அந்த வகையில் ‘சபரி’யிலும் படம் முழுக்க வரலட்சுமி ஆதிக்கம் செய்கிறார். நடிப்பிலும் குறை வைக்கவில்லை.
பருந்திடமிருந்து குஞ்சுகளை காக்கும் தாய்க்கோழி போல செல்ல மகளை காக்க நடத்தும் போராட்டத்தில் நடிப்பில் பெண் பெண்புலியாக மிரட்டி இருக்கும் வரலட்சுமிக்கு பாராட்டுகள்!
வரலட்சுமி இருக்கும் போது கிடைத்த கேப்பில் முதலாளி மகளுடன் கள்ளக்காதல் நடத்தும் நயவஞ்சக கணவன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் கணேஷ் வெங்கட்ராம்.
தோற்றத்திலும் வில்லத்தனத்திலும் மிரட்டி இருக்கும் மைம் கோபி, வரலட்சுமியின் மகளாக நடித்திருக்கும் பேபி நிவேக்ஷா, வழக்கறிஞராக வரும் ஷசாங் ஆகியோரின் நடிப்பும் சிறப்பு.
நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு முயற்சி செய்திருக்கும் இயக்குனர் அனில் கட்ஸ் இன்னும் திரைக்கதையை வலுவாக படைத்திருந்தால் ‘சபரி’க்கு சபாஷ் சொல்லியிருக்கலாம்.