இயக்குனர் விக்ரமன் மகன் நடிக்கும் ‘ஹிட்லிஸ்ட்’ பாடல் வெளியீட்டு விழா
பல வெற்றிப்படங்களை இயக்கி பல ஹீரோக்களின் உயர்வுக்கு காரணமாக இருந்தவர் இயக்குநர் விக்ரமன். இவரது மகன் விஜய் கனிஷ்கா நடிகராக அறிமுகமாகும் படம் ‘ஹிட் லிஸ்ட்’.
இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனம் தயாரிக்கும் படத்தை, இயக்குனர்கள் சூர்யகதிர், K.கார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து இயக்கி உள்ளனர். இதில், சரத்குமார், கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் மேனன், சமுத்திரகனி,ஸ்மிரிதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, அபிநக்ஷத்ரா,அபிநயா,சித்தாரா, முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ‘கருடா’ராமச்சந்திரா, ‘மைம்’கோபி மற்றும் அனுபமா குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
‘ஹிட் லிஸ்ட்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் தயாரிப்பாளர் K.S.ரவிக்குமார் வரவேற்று பேசியதாவது:-
“இந்த திரைப்படம் உருவாவதற்கு காரணமான ரமேஷ் கிராண்ட் கிரியேஷன்ஸ் கார்த்திக், கமலக்கண்ணன், சீனிவாசன், விஜயகுமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து மரியாதை செய்கிறேன். எதார்த்தமாக வீட்டில் பேசும்போது விஜய் கனிஷ்கா கதாநாயகனாக நடிக்க விரும்புகிறார், நீங்களே உங்கள் தயாரிப்பில் அறிமுகம் செய்து வையுங்கள் என்று விக்ரமன் அவர்கள் கூறியது இன்று உண்மையாகியுள்ளது. முதலாவதாக ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் அவர்களுக்கு,என் மீதும் இயக்குனர் விக்ரமன் சார் மீதும் அன்பு பாராட்டி, இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஒத்துக் கொண்டு நடித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கதைக்காகவும் கதாபாத்திரத்துகாகவும் ஒத்துக் கொண்டு கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சமுத்திரக்கனி இருவரும் நடித்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட சித்தாரா அவர்களுக்கும் மிக்க நன்றி.துணைக் கதாப்பத்திரங்களில் நடித்த அனைவருக்கும் மிக்க நன்றி. என்னதான் என்னுடைய உதவி இயக்குனர்களையே இந்த திரைப்படத்தின் இயக்குனர்களாக பணிபுரிய வைத்தாலும் அவர்கள் திரைக்கதையை சிறப்பாக உருவாக்கினார்கள். அதேபோல் அவர்கள் எப்படி பணிபுரிகிறார்கள் என்று சரத்குமார் மற்றும் கௌதம் இருவரிடமும் கேட்டு தெரிந்து கொண்டேன். இங்கு வந்து வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குனர் தேசிங்கு பெரியசாமி பேசும்போது,”பல வித தடைகளுக்கு நடுவே உருவாகி இருக்கும் இப்படத்தின் தரம் டிரைலரை பார்க்கும்போதே தெரிகிறது. விஜய் கனிஷ்கா கதாநாயகனாக நடித்திருப்பதை விட, கதாபாத்திரத்திரமாக சரத்குமார், கௌதம் மேனன் போன்றோர் நடுவே சிறப்பாக நடித்திருக்கிறார்.கண்டிப்பாக இத்திரைப்படம் வெற்றியடையும் என்று வாழ்த்துக்கிறேன்,” என்றார்.
பேரரசு பேசியபோது”இவ்விழாவை ஒரு குடும்ப விழாவாகவே பார்க்கிறேன். முன்னணி திரைப்பட நிறுவனங்களைப் போலவே சூப்பர்குட் ஃபிலிம்ஸ் போன்ற மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் தலைசிறந்த இயக்குனர் விக்ரமன். அவருக்கு தனது குருபக்தியை காமிக்கும் விதமாக அவரது மகனை வைத்து படம் தயாரித்துள்ளார் K.S.ரவிக்குமார் அவர்கள். விக்ரமன் மற்றும் K.S.ரவிக்குமார் ஆகியோரின் அன்பிற்கு பாத்திரமாக இந்த படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். ஒரு வெற்றிகரமான கதாநாயகனாக வருவார் விஜய் கனிஷ்கா; மேலும் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்”, என்று வாழ்த்தினார்.
தயாரிப்பாளர் கலைப்புலி.S.தாணு பேசும்போது,” இயக்குனர் விக்ரமன் இயக்கிய திரைப்படங்களும் K.S.ரவிக்குமார் இயக்கிய திரைப்படங்களும் தயாரிப்பாளர்களுக்கு நல்ல வருவாய் ஈட்டி தந்தது. நீங்கள் இருவரும் செய்த சாதனைகள் விஜய் கனிஷ்காவுக்கும் வந்து சேரும் என்று நான் வாழ்த்துகிறேன்”, என்றார்.
நடிகர் ஜெயம் ரவி பேசும்போது”இயக்குனர் K.S.ரவிக்குமார் மற்றும் விக்ரமன் அவர்களின் அன்பிற்காகத்தான்,இங்கே இவ்வளவு இயக்குனர்கள் வந்துள்ளார்கள். இருவருமே இந்திய சினிமாவின் சிறந்த ஆளுமைகள். அவர்களின் பெயரை காப்பாற்றி இந்திய சினிமாவில் ஒருவராக விஜய்கனிஷ்கா வருவார் என்று நான் நம்புகிறேன். நான் அறிமுகம் ஆகும்போது எப்படி ஒரு ஆதரவு எனக்கு கிடைத்ததோ, அதேபோல உங்களுக்கும் கிடைத்துள்ளது.அதேபோல உங்களை நான் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது. இரட்டை இயக்குனர்களாக இருப்பதற்கு அவர்களையும் வாழ்த்துகிறேன். வெற்றிப்படம் என்பது இப்போதே தெரிகிறது இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்”, என்றார்.
நடிகர் ஜீவா அவர்கள் பேசும்போது ” K.S.ரவிக்குமார் மற்றும் விக்ரமன் இயக்கத்திலும் நான் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன். இது ஒரு குடும்ப விழா. நான் அறிமுகமாகும் போதும் என்னை வாழ்த்த இதேபோல அனைவரும் வந்திருந்தனர். ஆளும் என்னாலும் சிறந்த படங்களை தர முடிந்தது.இவர்களின் வாழ்த்து உங்களுக்கு மிகப்பெரிய வாழ்த்தாக அமையும்.நீங்களும் மேன்மேலும் வளருவீர்கள் என்று வாழ்த்துகிறேன். இயக்குனருக்கும், RK Celluloids-க்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.
அடுத்ததாக K.பாக்யராஜ் அவர்கள் பேசும் போது,” இது ஒரு இசை வெளியீட்டு விழாவாக அல்லாமல் நன்றி தெரிவிக்கும் விழா போல் உள்ளது.சூப்பர்குட் ஃபிலிம்ஸ் R.B.சௌத்ரி அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.இந்த மாதிரியான இயக்குனர்களை அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவுக்கு சேவை செய்துள்ளார். திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. விஜய் கனிஷ்காவிற்கும் திரைப்படம் வெற்றியடையவும் வாழ்த்துகிறேன்”, என்றார்.
இயக்குனர் மிஷ்கின் பேசும்போது” தலைசிறந்த ஒரு அரசனின் பெயரை தன் மகனுக்கு சூட்டியுள்ளார்.விக்ரமன் அவர்களின் படத்தலைப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய் கனிஷ்காவிற்கு இந்த அளவுக்கு ஆதரவு இருப்பது வரவேற்கத்தக்கது. விஜய் கனிஷ்காவிற்கும் இயக்குனர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.ரசிகர்கள் அனைவரும் திரைப்படத்தை திரையரங்கில் சென்று பார்க்க வேண்டுகிறேன்”, என்றார்.
நடிகர் சரத்குமார் பேசியதாவது:-
“முன்னாள் முதல்வர் கலைஞர் முன்னிலையில், அவர்கள் 175 ஆவது நாள் பட விழாவை இங்கு கொண்டாடினோம். அந்த இடத்தில் ஹிட் லிஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அப்போது ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் தினமும் உடற்பயிற்சி செய்வதுதான். இயக்குனர் மிஷ்கின் பேசும்போது அனைவரும் இறுக்கமாக இருந்தீர்கள். இது சந்தோஷமான ஒரு நிகழ்வு இது ஒரு குடும்ப விழா. சூரியவம்சம் 2 பண்ணலாம் என்று யோசித்தோம் ஆனால், அது சரியாக அமையவில்லை, சூரியவம்சம் 2 , 3, 4 எதுவாக வேண்டுமானால் இருக்கட்டும், எனக்கு 150 வயசு ஆன பிறகு கூட நடிப்பேன். இதைக்கேட்டு பத்திரிக்கையாளர்கள் சரத்குமார் 150 வயசு வரை வாழ்வார் என்று செய்தி போடுவார்கள், எது எப்படியோ எனக்கு சந்தோஷம் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வணங்கும் பாபாவே 4 ஆயிரம் ஆண்டு வாழ்ந்து இருக்கிறார். புரட்சித் தலைவர், மக்கள் தலைவி இல்லை என்றாலும், இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அதுதான் வாழ்க்கை
இயக்குனர் R.V.உதயகுமார் பேசும்போது ” நான் இயக்குனர் K.S.ரவிக்குமார் மற்றும் இயக்குனர் விக்ரமன் ஆகியோருடன் சமகாலத்தில் பயணித்து ஒன்றாக பழகியவர்கள். இயக்குனர்கள் சங்கம் சிறப்பாக செயல்பட விக்ரமன் அவர்களும் ஒரு காரணம். பலவித குடும்ப சூழலுக்கு நடுவே தன் மகனை சினிமாத்துறையில் சரியாக தடம் பதிக்க வைத்துள்ளார். ‘ஹிட் லிஸ்ட்’ என்ற இத்திரைப்படத்தை வெற்றியடையச் செய்ய வேண்டியது ரசிகர்களாகிய, உங்கள் கையில் உள்ளது”.
இயக்குனர் விக்ரமன் அவர்கள் பேசும்போது”நான் பேச வேண்டியதை K.S.ரவிக்குமாரே பேசிவிட்டார். இந்த திரைப்படத்தை தயாரித்ததற்கு அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு அப்பாவாக அல்லாமல், ஒரு இயக்குனராக சொல்கிறேன்; விஜய் கனிஷ்கா சிறப்பாக நடித்துள்ளார். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும். அவர் மேன்மேலும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.