எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘இந்தியன் 2’ விளம்பரம்
பிரம்மாண்டங்களுக்குப் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திற்கு விளம்பரப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
பல்வேறு வகைகளில் செய்யப்பட்டு வரும் விளம்பரங்களில் வானத்தில் ‘இந்தியன் 2 ‘கொடி பறக்கும் அண்மை விளம்பரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் சென்று கொண்டிருக்கிறது.வான்வெளியில் விமானத்திலிருந்து குதித்து சாகசம் செய்யும் வீரர்களைக் (ஸ்கை டைவ்) கொண்டு இவ்விளம்பரக்கொடி பறக்க விடப்பட்டது.
நம் நாட்டில் எவ்வளவோ மாற்றங்கள் இருந்தாலும் லஞ்சம் ஊழல் போன்றவற்றில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லாமல் மாமூல் வாழ்க்கையே தொடர்ந்து வருகிறது. லஞ்சம் தான் தேசியப் பிரச்சினையாக இருக்கிறது.அதனால் வளர்ந்த ஊழல் தான் தேசிய பிரச்சினையாக இருக்கிறது. ஆனால் ஜாதி, மதம்,இனம்,மொழி என்று மக்களைப் பிரித்தாண்டு , மக்களைத் திசை மாற்றியும் மடைமாற்றியும் சிந்திக்க விடாமல் ஏமாற்றி வருகிறார்கள்.ஒவ்வொரு இந்தியனும் பாதிக்கப்படுவது லஞ்சம் என்ற ஒரு தீய சக்தியால் தான்.
லஞ்சம் ஒரு தேசிய பிரச்சினை என்று அ டித்துச் சொல்ல வருகிறது ‘இந்தியன் 2’.லஞ்ச ஊழல் இருக்கும் வரை இந்தியன் வருவான். இந்தியனுக்கு சாவே கிடையாது என்கிறது இந்த விளம்பரம்.
படத்து நாயகன் சேனாபதி இந்தியன் தாத்தா மீண்டும் மீண்டும் அவதாரம் எடுத்து வருவதற்குக் காரணங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன.
வரும் ஜூலை 12ஆம் தேதி உலகமெங்கும் வெள்ளித்திரையில் இந்தியன் தாத்தா வருகிறார்.சேனாபதி மீண்டும் மீண்டும் வருவார். அதைத்தான் இந்த விளம்பரம் ஆகாயத்தில் பறந்தபடி அழுத்தமாகச் சொல்கிறது.