‘இந்தியன் 2’ -விமர்சனம்
ஒரு பக்கம் உலக நாயகன்; இன்னொரு பக்கம் பிரமாண்டத்திற்கு பெயர்போன ஷங்கர்; பணத்தை தண்ணீராய் செலவு செய்த லைகா என்ற ஹெவி காம்பினேஷனில் களமிறங்கி இருக்கும் ‘இந்தியன் 2’ எப்படி இருக்கு?
கதை…
நாட்டில் நடக்கும் அட்டூழியங்களை தோலுரித்துக்காட்டும் யூ டியூபர் சித்தார்த். பெருகிக்கொண்டே போகும் ஊழல்களை தட்டிக் கேட்பதற்கு ஒரு வேட்டை நாய் வரவேண்டும் என நினைத்து ‘கம் பேக் இந்தியன்’ என்ற ஹேஷ் டேக்கை உருவாக்குகிறார். இது பெரிய வைரலாக, தைவானில் இருக்கும் இந்தியன் தாத்தா, களைகளைக் களைய இந்தியாவில் களமிறங்குகிறார்.
ஊழல்வாதிகளுக்கு தனது ஸ்டைலில் சங்கு ஊதும் சேனாபதியை பிடிக்க சிபிஐ அதிகாரி பாபி சிம்ஹா வலை விரிக்கிறார். எதிலும் சிக்காத சேனாபதி ஒரு கட்டத்தில் மக்கள் எதிர்ப்பைச் சந்திக்கிறார். இப்போது ‘கோ பேக் இந்தியன்’ என்ற குரல் எழுகிறது. சிபிஐயிடம் சிக்கும் சேனாபதியின் வேட்டை என்னவாகிறது என்ற கேள்விக்கு விடையே க்ளைமாக்ஸ்.
கமல்…
கதாபாத்திரத்திற்காக எந்த சிரமங்களையும் சுமந்து நடிப்பில் உச்சம் தொடுவதில் கமலை அடித்துக்கொள்ள இன்னொரு உலக நாயகன் பிறக்கவேண்டும். அப்படி ஒரு அர்ப்பணிப்பில் மனதைத் தொடுகிறார் இந்த சேனாபதி. இவர் பேசும் வசனமும், காட்டும் வர்ம வித்தையும் செம. பிராஸ்தடிக் முகத்தில் பாவனைகளின் அளவில் ‘மில்லி’ குறைந்தாலும் இந்த வயதிலும் இப்படியெல்லாம் நடிக்க முடியுமா? ஆக்ஷனில் எதிரிகளை துவைக்க முடியுமா என ஆச்சர்யங்களை தந்து அசத்துகிறார்.
சித்தார்த்…
இந்தியன் தாத்தாவின் சொல்லை வேதவாக்காக எடுத்துக் கொண்டு செயல்படும் சித்தார்த், தந்தை சமுத்திரகனியுடன் உரையாடும் தருணங்களில் உணர்ச்சி மயம். “அப்பா நீங்க படிக்க வச்சிங்க… பைக் வாங்கி தந்தீங்க. இதெல்லாம் உங்க காசுல கிடைச்சிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்ப்பா…” என்று நெஞ்சுக்கு நேர் நின்று கண்ணுக்கு கண் பார்த்து பேசும் இடங்களில் கலங்கடிக்கிறார். அதேபோல் சித்தார்த்தின் தோழியாக வரும் ப்ரியா பவானி சங்கர், காதலியாக ரகுல் ப்ரீத் சிங், நண்பனாக ஜெகன் அனைவருமே சமூகத்திற்கான குரலாக ஒலிக்கும்போது ஜொலிக்கின்றனர். விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு என்று மறைந்த கலைஞர்களும் அவர்களது பங்களிப்பை சரியாகச் செய்திருக்கிறார்கள்.
தொழில் நுட்பம்…
காசிருந்தால் டெக்னாலஜி ஈஸிதான். ஆனால் அதை சரியாக செய்ய ஆற்றல் முக்கியம். அந்த ஆற்றலாக ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் என ஒட்டுமொத்த தொழில்நுட்பக் கலைஞர்களின் அர்ப்பணிப்பும் ஆகச்சிறப்பு. குறிப்பாக பெரும்கூட்டத்தை கட்டி மேய்த்து ‘தாத்தா’ பாடலில் ரவிவர்மனின் ஒளிப்பதிவு, ஈர்ப்பு. இது செட் என்று தெரியாத அளவுக்கு தத்ரூபம் காட்டி இருக்கும் கலை இயக்குநருக்கு ஒரு கை குலுக்கல்!
வசனம்…
படத்தின் இன்னொரு ஹீரோ, வசனம் என்றால் மிகையாகாது. “உன்னோட அப்பாவை கைது செய்யும்போது உன் கண்களிலிருந்து வந்த கண்ணீர் துளி, மாற்றத்தின் விதை மீது விழுந்த முதல் நீர்த்துளி” என்ற வசனம், ஒரு சோறு பதம்.
ஷங்கர்…
தனது படங்களில் சமூக அக்கறையுடன் கதை எழுதும் ஷங்கர் வழக்கம்போலவே அதை செவ்வன செய்திருக்கிறார். எனினும் அவரது முந்தைய படங்களான ‘அந்நியன்’, ‘முதல்வன்’ சாயல் மூக்கை நீட்டுவது கொஞ்சம் போர். ஆனால் படத்தின் க்ளைமாக்ஸில் மூன்றாம் பகுதிக்கான லீட் வரும்போது அதில்தான் ஷங்கர், சம்பவம் செய்திருப்பாரோ என்று தோன்றுகிறது.
குறை…
படம் தொடங்கி 32ஆவது நிமிடத்தில்தான் கமல் எண்ட்ரி கொடுக்கிறார். பிறகு அவ்வப்போது காணாமல் போகிறார். கொலை செய்யும் நேரத்தில் பேசும் வசனத்தின் நீளமும், காட்சியின் நீட்சியும் அலுப்பைத் தருகின்றன. இலவசத் திட்டங்களை சரியான புரிதல் இல்லாமல் விமர்சிக்கும் கருத்து. மூன்று மணி நேர படத்தில் அரை மணி நேரம் கை வைத்திருந்தால் கன கச்சிதமாக இருந்திருக்கும். அதே போல, எதற்கெடுத்தாலும் பிரமாண்டம் என்பது பெரும் ஆயாசத்தைத் தருகிறது. இப்படி உள்ள குறைகளை சரி செய்திருந்தால், ‘இந்தியன் 2’வுக்கும் அடித்திருக்கலாம் ராயல் சல்யூட்…!
நன்றி : KYN NEWS APP : BY, THANJAI AMALAN