‘ரகு தாத்தா’ – விமர்சனம்
வள்ளுவன் பேட்டை என்ற ஊரில் வங்கி ஊழியராக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். சைடில் க.பா என்ற பெயரில் கதைகளை எழுதுகிறார். அதே ஊரைச்சேர்ந்த மின் துறையில் வேலை செய்யும் ரவீந்திர விஜய், கீர்த்தி சுரேஷின் எழுத்துக்கு ரசிகராகி நாளடைவில் நண்பராகிறார். இருவரின் சந்திப்பு நெருக்கமாகும் சமயத்தில் கீர்த்தி சுரேஷின் தாத்தா எம்.எஸ்.பாஸ்கருக்கு புற்றுநோய் என்று தெரியவருகிறது. இதனால் பேத்தியின் கல்யாணத்தை பார்க்கவேண்டும் என்பது தாத்தாவின் கடைசி ஆசையாகிறது.
வேறு யாருக்கோ கழுத்தை நீட்டுவதற்கு பதில் முற்போக்கு சிந்தனையுள்ள ரவீந்திரா விஜய் தனக்கு கணவனாக வந்தால் நல்லது என்று நினைக்கிறார் கீர்த்தி சுரேஷ். திருமணம் நிச்சயமாகும் நேரத்தில் வில்லனாக வந்து நிற்கிறது ஒரு சூழ்நிலை. அது என்ன என்பதற்கு அப்புறம் நகரும் காட்சிகள் விடை சொல்வதே கதை.
இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் செய்வது, ஆணாதிக்க சிந்தனைகளை வெறுக்கும் பெண்ணியவாதியாக சீறுவது, கல்யாணத்தை நிறுத்த எடுக்கும் முடிவுகள் என கீர்த்தி சுரேஷ் மீண்டும் தன்னை மகா நடிகையாக நிருபித்துள்ளார்.
கீர்த்தியின் நண்பராக வந்து கொஞ்சம் கொஞ்சமாக அவரது மனதில் இடம் பிடிக்கும் தமிழ்ச்செல்வன் கேரக்டரில் ஆடியன்ஸ் மனசிலும் அட்டகாசமாக ஒட்டிக்கொள்கிறார் ரவீந்திர விஜய். அந்த கதாபாத்திரம் கேட்கும் மீட்டரில் கொஞ்சமும் பிசகாமல் செய்து அடிப்படையில் நாடகக் கலைஞன் என்பதை நிரூபித்திருக்கும் ரவீந்திராவுக்கு சினிமாவில் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.
தாத்தாவாக எம்.எஸ்.பாஸ்கர், கீர்த்தியுடன் வேலை செய்யும் தேவதர்ஷினி, கீர்த்தியின் அண்ணியாக வருபவர், வங்கி மேலாளராக வருபவர் என படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் கச்சிதம். 1960 களில் நடப்பதுபோன்ற கதைக்கேற்றவாறு, ஆர்ட் டைரக்டர், ஆடை வடிவமைப்பாளர் இருவரின் பணிகளுக்கு பாராட்டுகள்! எங்கும் உறுத்தாத ஒளிப்பதிவுக்கும் இரைச்சலற்ற ஷான் ரோல்டனின் இசைக்கும் வெரிகுட்.
அத்தனை பேரையும் அழகாக வேலை வாங்கி ஃபீல்குட் படத்தை கொடுத்திருக்கும் இயக்குனர் சுமன் குமாருக்கு வாழ்த்துகள். படத்தில் நிறைய ப்ளஸ்கள் இருந்தாலும், திரைமொழியில் ஏன் நாடகத்தன்மை என்ற கேள்விதான் பெரிய மைனஸ்.
இருப்பினும் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் இந்த ‘ரகு தாத்தா ‘வை